சாலையைத் தேடும் கிராம மக்கள்
கோவில்பட்டி, ஆக. 22: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள 2 கிராமங்கள் சாலை வசதியின்றி தீவு போல் காட்சியளிப்பதையடுத்து, அக்கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்


கோவில்பட்டி, ஆக. 22: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள 2 கிராமங்கள் சாலை வசதியின்றி தீவு போல் காட்சியளிப்பதையடுத்து, அக்கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட குருமலை ஊராட்சியில் குருமலை, வெங்கடாசலபுரம், சுந்தரேஸ்வரபுரம், வி.பி.சிங் நகர், பன்னைப்பச்சேரி, கழுகாசலபுரம், கீழகழுகாசலபுரம், கீழபாறைப்பட்டி, மேலபாறைப்பட்டி, மேலப்புதூர், கீழப்புதூர், கம்மாப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய 13 கிராமங்கள் உள்ளன.
இதில், கீழபாறைப்பட்டி, மேலப்பாறைப்பட்டி கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் தீவு போல் காட்சியளிக்கின்றன.
இந்த 2 கிராமங்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம் மற்றும் கூலி வேலைகள் செய்து வரும் இக்கிராம மக்கள், கிராமங்களைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால் கரிசல்மண் புன்செய் வழியாக ஒற்றையடிப் பாதையில்தான் பயணம் செய்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் இந்த பாதையில் செல்ல முடியாது. வெயில் காலத்திற்கு மட்டுமே இந்த பாதை பயன்படும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் இந்த 2 கிராமங்களுக்கும் நடுவே செல்லும் ரயில் பாதையின் ஓரத்திலுள்ள ஒரு அடியே அகலம் கொண்ட பாதையைத்தான் அப்பகுதி மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
தற்போது ரயில்வே நிர்வாகத்தினர் இச்சாலையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனராம். இந்நிலையில், அப்பகுதி மக்கள் மழை நேரங்களில் கிராமங்களைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், இக்கிராம மக்கள் நோய் ஏற்பட்டால்கூட, உடனடியாக மருத்துவமனை செல்வதற்கு ஏதுவாக வாகனத்தை பயன்படுத்த முடியாது. காரணம் வாகனங்கள் வந்து, செல்வதற்கும் வசதிகள் கிடையாது.
மேலும், இப்பகுதியிலுள்ள மாணவ, மாணவிகள் அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றுதான் படிக்க வேண்டியுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க வேண்டுமென்றால், மேலப்பாறைப்பட்டி கிராம மக்கள் வெங்கடாசலபுரத்திற்கும், கீழப்பாறைப்பட்டி பகுதி மக்கள் கழுகாசலபுரத்திற்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மழைக்காலங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு கூட செல்ல முடியாது. இந்நிலையில், கிராம மக்கள் சாலை அமைக்கக் கோரி தங்கள் இல்லங்கள் முன் சனிக்கிழமை முதல் கருப்புக் கொடி கட்டியுள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை கருப்புக் கொடி கட்டி, அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து, குருமலை ஊராட்சி மன்றத் தலைவி வெள்ளையம்மாளிடம் கேட்ட போது, இந்த ஊராட்சிக்குள்பட்ட மேலப்பாறைப்பட்டி, கீழப்பாறைப்பட்டி, கம்மாபட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் சாலை வசதியே கிடையாது.
இங்கு சாலை அமைக்கக் கோரி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அலுவலகங்களுக்கும் மனுக்கள் அனுப்பியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால், இக் கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என்றார் அவர்.
இக்கிராமங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகளும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...