/

நையாண்டி போய் செண்டை வந்தது டும்...டும்...டும்...டும்

திருநெல்வேலி, அக். 15: அன்னிய கலாசார ஊடுருவலால் ஆபத்து என ஒரு பக்கம் சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் வேளையில், அண்டை மாநில கலாசார ஊடுருவல் கூட ஒரு தரப்பினரை பாதிக்கும் சூழ்நிலை உருவாக

News image
Updated On :26 டிசம்பர் 2023, 7:05 am

ப. இசக்கி

திருநெல்வேலி, அக். 15: அன்னிய கலாசார ஊடுருவலால் ஆபத்து என ஒரு பக்கம் சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் வேளையில், அண்டை மாநில கலாசார ஊடுருவல் கூட ஒரு தரப்பினரை பாதிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

 கேரளத்து பாரம்பரிய இசைகளில் ஒன்றான "செண்டை மேளம்' தென் மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது தமிழக பாரம்பரிய இசைகளில் ஒன்றான நையாண்டி மேளக் கலைஞர்களை ஓரளவு பாதித்து வருகிறது.

 நையாண்டி மேளம் என்பது 2 நாகஸ்வர கலைஞர்கள், 2 தவில், ஒரு பம்பை, ஒரு தமுக்கு, ஒரு உறுமி, ஒரு ஜால்ரா என குறைந்தபட்சம் 8 பேரைக் கொண்டு இசைக்கப்படும் பிரபலமான பாரம்பரிய இசைகளில் ஒன்று. ஆண், பெண் இருபாலராலும் இசைக்கப்படும் இசை வடிவம் இது.

 இந்த மேளம் கோயில் திருவிழாக்கள், அறுவடைத் திருவிழாக்கள், கரகாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுவது வழக்கம்.

 அண்மைக்காலமாக நாகரிக மாற்றத்தாலும், திரைப்படம், தொலைக்காட்சி தாக்கத்தாலும் இந்த நையாண்டி மேளக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து அந்தத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

 இந்நிலையில், இப்போது கட்சித் தலைவர்களின் வருகை உள்ளிட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் செண்டை மேளம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 கேரளத்து பாரம்பரிய இந்து இசை வடிவமான இந்த செண்டை மேளமானது அங்குள்ள கோயில் திருவிழாக்களிலும், கதகளி, கொடியாட்டம் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும். இது பாரம்பரியமாக "அசுர வாத்தியம்' என அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் செண்டை மேளம் இசைக்கப்படும்போது எழும் அசாத்திய ஓசை. செண்டை மேளம் ஒலிக்கும் இடங்களில் அமைதி இருக்காது.

 தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார். ராதாபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களில் அவர் பங்கேற்ற அரசு விழாக்களில்கூட இந்த செண்டை மேளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசியில் மட்டும் விழா மேடையில் நாகஸ்வர கலைஞர்கள் மங்கள இசை ஒலித்துக் கொண்டிருந்தனர்.

 திருநெல்வேலியில் நடைபெற்ற மாநகராட்சி திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பெண்கள் நடனமாடி பங்கேற்ற செண்டை மேளம் முழங்கியது.

 கடந்த சில ஆண்டுகளாகவே தென் மாவட்டங்களில் இந்த செண்டை மேளத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்தாலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 திருநெல்வேலிக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா ஆகியோர் முன்பு வந்திருந்த காலத்திலும் இந்த செண்டை மேளம் பயன்படுத்தப்பட்டது.

 ""செண்டை மேளம் எழுப்பும் ஒலி அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. வித்தியாசமாகவும் இருக்கிறது. அதில் பெண்களும் சேர்ந்து மேளம் அடிப்பதும், நடனமாடுவதும் மக்களின் கவனத்தை கவருகிறது'' என்கிறார் திமுக பிரமுகர் ஒருவர்.

 செண்டை மேளத்திற்கு ஒரு நாள் கட்டணமாக ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை அளிக்கப்படுகிறது. போக்குவரத்து, உணவு செலவும் அளிக்க வேண்டும்.

 செண்டை மேளங்களின் வருகையால் உள்ளூர் நையாண்டி மேளக் கலைஞர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பதையும் மறுப்பதிற்கில்லை. துணை முதல்வர் விழாக்களில் இந்த செண்டை மேளத்தைப் பார்த்தவர்கள் ""இந்த மேளம் வந்துவிட்டதால் நையாண்டி மேளத்திற்கு மவுசு இல்லாமல் போய்விட்டது'' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது.

 நையாண்டி மேளத்திற்கு இதைவிட குறைவான செலவுதான். எனினும், அரசியல் தலைவர்களை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்யும் ஆர்வமுடைய கட்சி நிர்வாகிகளின் கவனம் செண்டை மேளம் பக்கம்தான் செல்கிறது.

 நையாண்டி மேளக் கலைஞர்கள் நலிவுற்று வருவதை கருத்தில் கொண்டு அரசு விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

 அதனால் அரசு விழாக்களிலாவது உள்ளூர்க் கலையை வளர்க்க உதவாவிட்டாலும், அவர்களை வறுமையில் தள்ளாமல் இருக்காவது நையாண்டி மேளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பது அக்கலைஞர்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.