மெல்லவும் முடியாமல் கக்கவும் முடியாமல் திணறும் பனவடலி சத்திரம்
திருநெல்வேலி, அக். 5: கேரள ஊடகங்களால் "திருட்டு பட்டம்' சூட்டப்பட்டுள்ள பனவடலி சத்திரம் பொதுமக்கள் நடந்த சம்பவங்களை மெல்லவும் முடியாமல் கக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற


திருநெல்வேலி, அக். 5: கேரள ஊடகங்களால் "திருட்டு பட்டம்' சூட்டப்பட்டுள்ள பனவடலி சத்திரம் பொதுமக்கள் நடந்த சம்பவங்களை மெல்லவும் முடியாமல் கக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சங்கரன்கோவில் செல்லும் பாதையில் உள்ள இந்த கிராம மக்களில் சிலர், கேரளத்தில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதே இதற்கு காரணம்.
விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்ட தெற்கு பனைவடலி சத்திரம், தங்கம்மாள்புரம் மக்கள் சுமார் 1,500 பேரில் வறட்சி காரணமாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்திற்கு கணிசமானவர்கள் சென்றனர்.
கேரளத்திற்கு சென்றவர்களில் சிலர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு வசதியுடன் வாழத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கேரளத்திற்கு சென்றனர். அதன் பின்பு அந்த கிராமங்களில் புதிய பங்களா வீடுகள் பெருகத் தொடங்கின.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கேரள ஊடகங்களில் வந்த ஒரு செய்தி பனவடலி சத்திரம் மக்களை அதிரச் செய்தது. கேரளத்தில் நடந்துள்ள பல்வேறு திருட்டு சம்பவங்களில் பனைவடலி சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறியது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய கேரள போலீஸôர் இங்கு வரும்போது ஊரே அல்லோலப்படும். அப்போது எந்தத் தவறும் செய்யாதவர்களும் பாதிக்கப்படுவது உண்டு. இதனால் ஊர் மக்கள் செய்வது அறியாமல் தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த திருநெல்வேலி சரக டி.ஐஜி. கண்ணப்பன், பனவடலி சத்திரம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் போலீஸôர் மூலம் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அந்தப் பகுதியில் உள்ள சுமார் 400 குடும்பங்களில் சுமார் 40 முதல் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தில் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது அதில் தெரிய வந்தது.
மேலும், கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனிப்படைகளை அனுப்பி விவரம் சேகரித்ததில் இப்பகுதியைச் சேர்ந்த 81 பேருக்கு திருட்டு வழக்குகளில் (1991 முதல் 2009 வரை) தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், 20 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பனவடலி சத்திரத்திற்கு சென்று ஊர்மக்களை கூட்டி பேசிய கண்ணப்பன் ""தவறு செய்தவர்கள் வழக்கை சந்தித்து தீர்வு கண்டால்தான் பிரச்னை முடிவுக்கு வரும். ஊர் மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். தமிழக காவல்துறைக்கும் கெட்டப் பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும். அதற்கான உதவிகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது'' என எடுத்துரைத்தார். தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்து கேரள போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தார் கண்ணப்பன்.
இரண்டாவது கட்டமாக தற்போது எதிரிகளை அடையாளம் கண்டு அவர்கள் முறையாக வழக்குகளை சந்திக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தெற்கு பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செல்வக்குமார், மணிகண்டன் ஆகியோர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஊர்மக்கள் பங்கேற்ற கூட்டத்தில், சிலர் தங்கள் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும், கேரளத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதை ஒத்துக் கொண்டனர்.
திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 81 பேரில், விரல் ரேகை உறுதியான 6 பேர் தலைமறைவாக உள்ளனர். கைதாகி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் தலைமறைவானவர்கள் 35 பேர். எஞ்சிய 40 பேர் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் மீது இன்னும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளனர். ஆனால், கேரள போலீஸôர் மீண்டும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் தொழிலை மாற்றிக் கொண்டு இன்று வசதியாக வாழும் சிலர் பிரச்னை ஏதுமின்றி இருக்கின்றனர்.
அவர்களை விட்டுவிட்டு தங்களை மட்டும் போலீஸôர் வழக்குகளை சந்திக்க சொல்வது என்ன நியாயம் என்று எதிரிகள் சிலர் கேட்பதாகவும் காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
எனினும், சம்பந்தப்பட்ட அனைவரும் வழக்குகளை முறையாக சந்தித்து தீர்வு கண்டு கிராம மக்களின் மீது ஒட்டுமொத்தமாக சூட்டப்பட்டுள்ள திருட்டு பட்டத்தைப் போக்க வேண்டும் என்பதில் கிராம மக்கள் உறுதியாக உள்ளனர்.
""டி.ஐ.ஜி. மேற்கொண்டுள்ள முயற்சியால் இப்போது ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள 35 பேரில் 10 பேர் நீதிமன்றத்தில் சரணடைய தயாராகி வருகின்றனர்.
அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்த்த பின்பு மற்றவர்களும் இதற்கு உடன்படுவார்கள் என எண்ணுகிறேன்'' என்றார் வழக்கறிஞர் செல்வக்குமார்.
எதிரிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் கேரள போலீஸôர் அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்யாமலும், நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக முடித்து அவர்கள் தொடர்ந்து கேரளத்திற்கு வர வேண்டிய வாய்ப்புகளைத் தடுப்பதும் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என இக்கிராம மக்களின் நலனை விரும்புவோர் கூறுகின்றனர்.
வழக்குகளைச் சந்திக்க முன்வருவோர் கேரளத்திற்குச் செல்ல பாதுகாப்பு கொடுக்க காவல்துறையும், இலவச சட்ட உதவிகளை செய்ய இலவச சட்டப் பணிகள் ஆணையக் குழுவும் தயாராக உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டால் கிராமத்திற்கு விமோசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...