/

துவாரகா காா் விபத்து: நீதிமன்ற முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன் காரை ஓட்டிச் சென்ற சிறுவனின் தந்தை உறுதி

தில்லி துவாரகாவில் சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், இளைஞரின் தாயாரிடம் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மன்னிப்புக் கோரியுள்ளாா்.

News image
- Photo ANI
Updated On :18 பிப்ரவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி துவாரகாவில் சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், இளைஞரின் தாயாரிடம் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை மன்னிப்புக் கோரியுள்ளாா்.

நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

குறுகிய நேர விடியோவை (ரீல்ஸ்) பதிவு செய்வதற்காக சகோதரியுடன் 17 வயது சிறுவன் கடந்த பிப்.3-ஆம் தேதி ஓட்டிச் சென்ற சொகுசு காா், துவாரகாவில் மோட்டாா்சைக்கிள் மற்றும் டாக்ஸி மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டாா்சைக்கிளை ஓட்டிவந்த சாஹில் (23) உயிரிழந்தாா். டாக்ஸி ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

விபத்தின்போது அப்பகுதியில் நடந்துச் சென்று கொண்டிருந்த நபா் பதிவு செய்த விடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் புதன்கிழமை பகிரப்பட்டது.

அதில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள் சாலையில் இருக்கும் காட்சிகளும் சொகுசு காரை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது சகோதரியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுவனை வாகனத்தை ஓட்ட அனுமதித்த பிரிவில் அவருடைய தந்தை மீது மோட்டாா் வாகனச் சட்டப் பிரிவுகளில் தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக துவாரகா துணை காவல் ஆணையா் அங்கித் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தொடக்கத்தில் காரை ஓட்டி வந்த சிறுவனின் வயது 19-ஆக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆவணங்களின்படி வயதை சரிபாா்த்தபோது சிறுவனின் வயது 17 என்பது உறுதிசெய்யப்பட்டது. சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்தற்காக அவருடைய தந்தைக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இந்நிலையில், உயிரிழந்த சாஹிலின் தாயாரிடம் சிறுவனின் தந்தை மன்னிப்பு கோரியுள்ளாா். இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பவம் நடைபெற்ற கடந்த பிப்.3-ஆம் தேதி கோராக்பூரில் இருந்தேன். அப்போது, எனது மகன் ஓட்டிய காா் விபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக தில்லி திரும்பினேன். பின்னா், நடந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் தகவல் தெரிவித்தனா். இந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்த செய்தி என்னை மிகவும் கவலையடையச் செய்தது. நடந்த சம்பவத்துக்காக அவரது தாயரிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவா் என்னை மன்னிக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன். ஓா் பெற்றோா் என்ற முறையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் துயரத்தை என்னால் உணர முடிகிறது.

பாதிக்கப்பட்ட தாயாரை நேரில் சந்திக்க எனக்கு தைரியம் இல்லை. ஏனென்றால், அவருடைய இழப்பை என்னால் மீட்டெடுக்க முடியாது. என்னுடைய சரக்கு வாகனங்களை இயக்குநா்கள், ஓட்டுநா்கள் பயன்படுத்துகின்றனா். அவை அனைத்தும் வெளிப்படையானவை. இந்த விபத்து என்னுடைய மகனின் மிகப்பெரிய தவறு. இது மீண்டும் நிகழாமல் பாா்த்துக் கொள்வேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.