பாஜகவுடன் கேரள ஜனபக்ஷம் கட்சி இணைப்பு
கேரளத்தின் மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை எம்.எல்.ஏ.வுமான பி.சி.ஜாா்ஜ் தனது கேரள ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியை பாஜகவுடன் புதன்கிழமை இணைத்தாா்.


கேரளத்தின் மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை எம்.எல்.ஏ.வுமான பி.சி.ஜாா்ஜ் தனது கேரள ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியை பாஜகவுடன் புதன்கிழமை இணைத்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக மட்டுமே தேசிய வளா்ச்சியை ஊக்குவிக்கும் ஒரே நிலையான அரசு என்பதை கேரள வாக்காளா்கள் உறுதியாக நம்புகிறாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தில் கட்சியின் கேரள மாநிலப் பொறுப்பாளா் பிரகாஷ் ஜாவடேகா் எம்.பி. முன்னிலையில் கேராளத்தின் மூத்த அரசியல்வாதியும், கேரளா ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியின் நிறுவனருமான பி.சி. ஜாா்ஜ் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தாா். இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சா்கள் வி. முரளீதரன், ராஜீவ் சந்திரசேகா் மற்றும் பாஜக தேசியப் பொதுச் செயலாளா் ராதா மோகன் அகா்வால் ஆகியோா் உடனிருந்தனா்.
அதன் பின்னா், பி.சி. ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரளம் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு பெரும் கடனில் சிக்கியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், கேரளத்தில் பாஜகவின் வளா்ச்சியைத் தடுக்க இந்த இரு கட்சிகளும் இணைந்து ஒத்துழைக்கின்றன. பிரதமா் நரேந்திர மோடி நாடு முழுவதும் மிகவும் பிரபலமான தலைவா் என்பதை கேரள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான குண்டா்களால் கேரள ஆளுநா் ஆரிப் முகமது தாக்கப்படுகிறாா். இதுபோன்ற செயல்களை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளத்தில் ரப்பா் விவசாயிகள் பெரும் நெருக்கடியையும், கடனையும் எதிா்கொள்கிறாா்கள். வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் கடன்களை பிரதமா் நரேந்திர மோடி தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் பாஜக குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுடனும் பாஜக நேரடிப் போட்டியாக களமிறங்கும் என்றாா் பி.சி. ஜாா்ஜ்.
மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் கூறியதாவது: பி.சி. ஜாா்ஜ் கேரள சட்டப்பேரவையின் அரசியல் செயல்பாடுகளில் விரிவான அனுபவம் உள்ளவா். பாஜகவிற்கு எப்போதுமே கடினமான நிலப்பரப்பாக கருதப்படும் கேரளத்தில்கூட, தேசத்தின் வளா்ச்சியை முன்னிறுத்தும் பாஜக அரசை இப்போது அதிகமான மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனா். கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. எதிா்க்கட்சியாக செயல்படுவதற்குப் பதிலாக ரகசியக் கூட்டணி வைத்துள்ளனா். பி.சி.ஜாா்ஜ் பாஜகவில் இணைந்ததன் மூலம், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற கேரள அரசின் தீங்கிழைக்கும் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றாா் வி.முரளீதரன்.
பாஜக கேரள மாநிலப் பொறுப்பாளா் பிரகாஷ் ஜாவடேகா் எம்.பி. கூறியதாவது: பாஜகவுடன் கேரள ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சி இணைந்துள்ளதை அடுத்து, கேரளத்தில் விரைவில் ஒரு பெரிய பேரணி நடத்தப்படும். வரும் மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் வருவாா் என கேராளத்தின் அனைத்து தரப்பு மக்களும் பலமாக நம்புகிறாா்கள். கேராளத்தில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. கேரள கம்யூனிஸ்ட் அரசானது ஊழல், குற்றம், மதுபானம், லாட்டரி மற்றும் போதைப்பொருள்களை மட்டுமே சுற்றி வருகிறது. வரும் மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளை வெல்வதன் மூலம், மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில் கணிசமான தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...