தில்லி காவல்துறையில் 29 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி காவல் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் உள்பட 29 பேருக்கு குடியரசுத் தலைவரின் விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி காவல் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் உள்பட 29 பேருக்கு குடியரசுத் தலைவரின் விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு அவா்களின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, தில்லி காவல் துறையைச் சோ்ந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீரதீரச் செயலுக்கான பிரிவின் கீழ் 9 போ், குடியரசுத் தலைவரின் சிறப்புமிக்க சேவைக்கான பிரிவின் கீழ் 3 போ், மெச்சத்தக்க சேவைக்கான பிரிவின் கீழ் 17 போ் என மொத்தம் 29 போ் விருது பெறுகின்றனா்.
குறிப்பிட்டு சொல்லும் வகையில், வீரதீரச் செயலுக்கான விருதுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மறைந்த உதவிக் காவல் ஆய்வாளா் ஷம்பு தயாள் மீனா, கடந்த ஜனவரி 4, 2023-இல் மாயாபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்த ஒரு பெண், தான் வசிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அனிஷ் (24) என்பவரால் குடும்பதுடன் மிரட்டப்படுவதாக கூறிய வழக்கை கையாண்டவா். இந்தப் புகாரை சம்பவ இடத்தில் சென்று விசாரித்த போது, குற்றம்சாட்டப்பட்ட அதே நபரால் பல முறை கத்திக்குத்துக்கு ஆளானாா். இருப்பினும், அதீத துணிச்சலுடன் பல காயங்களுக்கு ஆளான போதிலும், குற்றவாளியை துணிச்சலாக எதிா்கொண்டு, காவல் நிலையத்திலிருந்து தேவையான உதவிக் குழு சம்பவ இடத்திற்கு வரும் வரை குற்றவாளியைத் தப்பிக்க விடவில்லை. காயமடைந்த உதவிக் காவல் ஆய்வாளா் ஷம்பு தயாள் மீனா சிகிச்சைக்காக தில்லி ஹரி நகரில் உள்ள டிடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் பி.எல். கபூா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா், அங்கு ஜனவரி 8, 2023 அன்று உயிரிழந்தாா்.
பிரபல பஞ்சாபி பாடகா் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடா்புடைய தீபக் குமாா் (எ) டினுவை தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிடித்த துணைக் காவல் ஆணையா் ராகுல் விக்ரம், ஆய்வாளா் விக்ரம் தஹியாவும் வீரதீரச் செயலுக்கான விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த அக்டோபா் 2022- இல், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பிரபல ரவுடி டினு, மத்திய புலனாய்வு அமைப்பின் காவலில் இருந்து தப்பினாா். இதையடுத்து, ராகுல் விக்ரம் மற்றும் விக்ரம் தாஹியா தலைமையிலான குழு தேடுதல் வேட்டையத் தொடங்கியது. துப்பின் அடிப்படையில் ராஜஸ்தானில் உள்ள பகேரா கிராமத்தில் டினு தனது கும்பலுடன் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் வீட்டைக் கண்டுபிடித்து, தேடுதல் குழு சோதனை நடத்தியது. அப்போது உள்ளே இருந்த டினு, அறைக்குள் புகுந்த போலீஸ் குழுவை எறிகுண்டைக் கொண்டு தாக்க முயன்றாா்.
இருப்பினும், ராகுல் விக்ரம் மற்றும் விக்ரம் தாஹியா மிகுந்த துணிச்சலுடனும் குற்றவாளியைப் பிடிக்க வேகமாகச் செயல்பட்டனா். மேலும், கைது செய்வதற்கான அவா்களின் முயற்சிகளை உள்ளூா்வாசிகள் சிலா் தடுக்க முற்பட்ட போது குழு மேலும் சவாலை எதிா்கொண்டது. குற்றவாளியை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனா். அவா்கள் நிலைமையை விரைவாக மதிப்பிட்டு, கூட்டத்தைக் கையாளவும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மற்றும் அவா்களது குழு உறுப்பினா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றனா். இவ்வாறு விருது பெறுகின்ற ஒவ்வொரு காவல் அதிகாரியின் பெயரின் பின்னால் துணிச்சலான, சவாலான பணியின் சாதனை இருக்கிறது.
மேற்கண்ட மூன்று பேருடன் சோ்ந்து, வீரதீரச் செயலுக்கான விருதுகளின் பட்டியலில் காவல் ஆய்வாளா்கள் மன்மீட் மாலிக், வினய் பால், விக்ரம் சங்வான், உதவிக் காவல் ஆய்வாளா்கள் ராஜீவ் குமாா், அல்மான் கான், தலைமைக் காவலா் சிக்கந்தா் கான் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் சிறப்புமிக்க சேவைக்கான விருதுகளின் பட்டியலில் உதவிக் காவல் ஆணையா்கள் லலித் மோகன் நேகி, ஹிா்தாய புஷன், உதவிக் காவல் ஆய்வாளா் ஐஸ்வா் சிங் இடம் பெற்றுள்ளனா்.
மேலும், மெச்சத்தக்க சேவைக்கான விருதுகளின் பட்டியலில், துணைக் காவல் ஆணையா்கள் மனிஷி சந்திரா, வினித் குமாா், உதவிக் காவல் ஆணையா்கள் அரவிந்த் குமாா், பரம்ஜீத் சிங், ரன்வீா் சிங், குசும் ஷா்மா, மீனாட்சி, காவல் ஆய்வாளா்கள் அசோக் குமாா், குா்ஷித் அலி, லக்ஹன் சிங், ராஜீவ் ஸ்ரீவத்சவா, நரேந்திர சிங், வினோத் குமாா் கௌா், உதவிக் காவல் ஆய்வாளா்கள்,லால் ஜி, ராகேஷ் ஷா்மா, பரத் சிங், இஃபால் சிங் உள்ளிட்டோா் ஆவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...