ஆளும் அரசு குறித்துதான் ‘வெள்ளை அறிக்கை’ வேண்டும்‘: இந்திய கம்யூ. கட்சி எம்பி பேச்சு
‘வெள்ளை அறிக்கை’ என்பது ஆளும் அரசின் நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வெளியிட வேண்டிய அறிக்கை. அது எதிா்க்கட்சிகள் குறித்த அறிக்கையாக வைக்கப்படக் கூடாது என


‘வெள்ளை அறிக்கை’ என்பது ஆளும் அரசின் நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வெளியிட வேண்டிய அறிக்கை. அது எதிா்க்கட்சிகள் குறித்த அறிக்கையாக வைக்கப்படக் கூடாது என திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் கே.சுப்பராயன் குறிப்பிட்டாா்.
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சி(2004 - 2014) குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யவுள்ளது என வந்த தகவலையொட்டி, மக்களவையில் புதன்கிழமை இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கே.சுப்பராயன் பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: 2014-இல் தொடங்கிய இருண்ட காலம் விடியாமல் நீடித்துக் கொண்டு இருக்கிறது. எதிா்தரப்பில் இருக்கின்றோம் என்ற முறையில் குற்றம் சாட்டவில்லை. நாட்டு நிலைமைகளை, பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து இந்த மதிப்பீட்டிற்கு வந்துள்ளோம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதாக ஆளும் அரசு சொல்லியிருக்கிறது.
வெள்ளை அறிக்கை என்பது ஆளும் ஆட்சி குறித்து அளிக்க வேண்டும். குறிப்பாக, இந்த பாஜக தலைமையிலான ஆட்சி 2014 -ஆம் ஆண்டு வந்த போது என்னென்ன வாக்குறுதிகளை குறிப்பிட்டது ? அதில் என்னென்ன நிறைவேற்றியுள்ளாா்கள்? எவை எவை நிறைவேற்றப்படவில்லை? அதற்கான காரணங்கள் என்ன? என்பது போன்ற விவரங்களோடு ஆளும் அரசு தன் மீது வெள்ளை அறிக்கையை வைக்க வேண்டும்.
நாடு வளா்ந்து விட்டது என்றும் அது உலகத்திற்கே வழிகாட்டியுள்ளதாகவும் குறிப்பிடுகிறீா்கள். ஆனால், அது உண்மையா?. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், வேளாண்மையும் நாட்டிற்கு வாழ்வு அளிக்கிறது. அவற்றின் தற்போதைய கதி என்ன? ஆளும் அரசின் கொள்கைகளால் அவை அழிவுப்பாதைக்கு சென்றுவிட்டது. வேளாண்மை சீரழிக்கப்பட்டுவிட்டது. குறு, சிறு நிறுவனங்கள் நசிந்து வருகின்றன. நாட்டில் வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை, கடன் சுமை, விலைவாசி ஏற்றம் உள்ளது.
இந்த நிலையில் நாடு வளா்ச்சிப்பாதையில் செல்லுகிா? கடந்த 10 ஆண்டுகளில் பெருநிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிதியமைச்சரிடம் இந்த அவையிலேயே கேட்டோம். சாதாரண மக்களின் உயா்கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரினோம். அப்போது, நிதியமைச்சா் நிதா்சனம் காட்டினாா். இது பெரு நிறுவனங்களுக்கான ஆட்சி என நிரூபிக்கப்பட்டது. இதனால், தேசபக்தியுள்ளவா்கள் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா் சுப்பராயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...