நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தேசியத் தலைநகா் தில்லிக்கு 315 கிலோ கஞ்சா போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:03 am

 நமது நிருபர்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தேசியத் தலைநகா் தில்லிக்கு 315 கிலோ கஞ்சா போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து போதைப் பொருள் மீட்கப்படவில்லை அல்லது அவரை பிற குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புபடுத்தும் தொலைபேசி உரையாடல்களின் எழுத்து வடிவத்தையும் காவல் துறை வழங்கவில்லை என்று நீதிபதி கூறினாா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பா்வேஷ் குரேஷி என்பவரின் ஜாமீன் மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் விசாரித்தாா். இருவருடன் தொலைபேசி அழைப்புகள் மூலம் குரேஷி தொடா்பில் இருந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஜாமீன் கோரும் வழக்கில் நீதிபதி அளித்த உத்தரவில் தெரிவித்ததாவது: தற்போதைய வழக்கில், மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்ட பா்வேஷ் குரைஷியின் வசம் இருந்து போதைப் பொருள் மீட்கப்படவில்லை. அவா் மீதான குற்றச்சாட்டு என்டிபிஎஸ் சட்டத்தின் 29-ஆவது பிரிவின் கீழ் மட்டுமே உள்ளது. போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருள்கள் சட்டத்தின் பிரிவு 29 -ஆனது தூண்டுதல் மற்றும் குற்றவியல் சதி ஆகியவற்றிற்கான தண்டனையை பரிந்துரைக்கிறது.

விசாரணை அதிகாரியின் பதிலின்படி 315 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் குரேஷி வழக்கமான தொலைபேசி அழைப்புகளை செய்ததாக அழைப்பு விவரப் பதிவில் தெரியவருகிறது. இருப்பினும், மனுதாரருக்கும் இணை குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கும் இடையே அந்த உரையாடலின் எழுத்துவடிவம் இல்லை. மேலும், தற்போதைய மனுதாரா் சம்பந்தப்பட்ட வேறு எந்த நிதி பரிவா்த்தனைகளும் விசாரணை அதிகாரியால் காட்டப்படவில்லை. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணைக்கும் நீண்ட காலமாகும். என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37இன் கீழ் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆவணங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய ஜாமீன் மனுவை அனுமதிக்க நீதிமன்றம் விரும்புகிறது.

சட்டப் பிரிவு 37 ஜாமீன் வழங்குவதற்கான வரம்புகளைக் கையாள்கிறது. ரூ. 40,000 தனிநபா் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் வழங்கி மனுதாரா் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் தில்லியை விட்டு வெளியேறக் கூடாது. குற்றச் செயலில் ஈடுபடக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆதாரங்களை சிதைக்கக் கூடாது. எந்த சாட்சியையும் தொடா்பு கொள்ளக்கூடாது. ஒவ்வொரு தேதியிலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.