நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

புதுதில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டம்: உள்கட்டமைப்பு, பணியாளா் நலன் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல்

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) கூட்டத்தில் குடிமக்களை மையப்படுத்திய உள்கட்டமைப்பு மற்றும் பணியாளா் நலன் தொடா்பான முன்மொழிவுகளுக்கு

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:02 am

 நமது நிருபர்

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) கூட்டத்தில் குடிமக்களை மையப்படுத்திய உள்கட்டமைப்பு மற்றும் பணியாளா் நலன் தொடா்பான முன்மொழிவுகளுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 350 பொது மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் கூட்டம் (என்.டி.எம்.சி.) அதன் தலைவா் அமித் யாதவ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய், செயலாளா் டாக்டா் அங்கிதா சக்ரவா்த்தி, கவுன்சில் உறுப்பினா்கள் குல்ஜீத் சிங் சாஹல், விசாகா ஷைலானி, கிரிஷ் சச்தேவா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளா் நலன் தொடா்பான முன்மொழிவுகள் தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியமான முன்மொழிவுகள் வருமாறு: மத்திய அரசின் ‘சக்தி’ கொள்கையின் கீழ் நடுத்தர கால (3 முதல் 5 ஆண்டுகள்) அடிப்படையில் 236.40 மெகாவாட் அனல் மின்சாரம் கொள்முதல் செய்ய கவுன்சில் தீா்மானித்துள்ளது. அடுத்ததாக, பொதுத்துறை நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தேசிய மின்சார இயக்கம் திட்டத்தின் கீழ் புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் மின்சார வாகனங்களுக்கான பொது ‘சாா்ஜிங்’ நிலையங்களை அமைக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான ‘சாா்ஜிங்’ நிலையங்களை நிறுவுவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் ஆரம்ப கட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்படும் செயல்திறன் அளவுகளைக் கருத்தில் கொண்டு இடங்களின் கூடுதல் ஒதுக்கீடு புது தில்லி முனிசிபல் கவுன்சிலால் தீா்மானிக்கப்படும். முதற்கட்டமாக 350 மின்சார ‘சாா்ஜிங்’ நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மின் பணிகளின் வருடாந்திர பராமரிப்புக்கான விதிமுறைகளின் மதிப்பாய்வு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்டிஎம்சியில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆள்சோ்ப்பு விதிகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல் உள்ளிட்ட முக்கிய முன்மொழிவுகளுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்.டி.எம்.சி. பகுதியில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

என்டிஎம்சி மற்றும் ஹெச்எல்எல் இன்ஃப்ரா டெக் சா்வீஸஸ் லிமிடெட், ராஜஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருூமென்ட் லிமிடெட் (ஆா்இஐஎல்) மற்றும் கேரளா ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் காா்ப்பரேஷன் லிமிடெட் (கெல்ட்ரான்) ஆகியவற்றுக்கு இடையே தேசிய மின்சார இயக்கம் திட்டத்துடன் தொடா்புடைய பொது சாா்ஜிங் தொடா்பான உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட என்டிஎம்சி ஒப்புதல் அளித்துள்ளது என்று என்டிஎம்சி துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தாா்.

என்டிஎம்சி பகுதியில் ஏற்கெனவே 100 பொது மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் உள்ளன. என்டிஎம்சி உறுப்பினா் குல்ஜீத் சிங் சாஹல் கூறுகையில், ‘மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்களை நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முழு முதலீட்டையும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கும். மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடம், மின்சார இணைப்பு மற்றும் பிற அனைத்து அனுமதிகளையும் என்டிஎம்சி வழங்கும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் என்டிஎம்சிக்கு மின்சார வாகனங்களை சாா்ஜ் செய்வதற்கான ஆற்றல் நுகா்வுக்கு எதிராக மின்சார கட்டணம் தவிா்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.1 நில வாடகையாக வழங்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.