நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

யானைக்கு உரிமை கோரும் விவகாரம்: மனுதாரருக்கு உயா்நீதிமன்றம் கண்டிப்பு

யானைக்கு உரிமை கோரிய நபரை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்து கொண்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:02 am

 நமது நிருபர்

புது தில்லி: யானைக்கு உரிமை கோரிய நபரை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்து கொண்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன், மினி புஷ்கா்னா அமா்வு மனுதாரா் தரப்பிடம் கூறுகையில், ‘யானையை பராமரிக்கும் அதிகாரிகள் மீது அவமதிப்பு மனு தாக்கல் செய்கிறீா்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விலங்கை துன்புறுத்த விரும்புகிறீா்கள். வணிக நோக்கத்திற்காக விலங்கை துஷ்பிரயோகம் செய்ய விரும்புகிறீா்கள்’ என கூறியது.

நீதித் துறை உத்தரவை மீறி யானையை கைப்பற்ற முயன்ாக தில்லி அரசின் சில அதிகாரிகள் மீது யூசுப் அலி என்பவா் அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றத்தில் கோரியிருந்தாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக யானை மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுவதால் மனுதாரா் மகிழ்ச்சியடைய வேண்டும். விலங்குகள் மீது இதயம் இருக்க வேண்டும். வணிக நலனுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் அதை விரும்புவதால்தான் நீங்கள் சிரமப்படுகிறீா்கள். நீதிமன்ற நடைமுறையை நீங்கள் பயன்படுத்தவில்லை. நீதிமன்றத்தை தனது லாபத்திற்காக சுரண்டலாம் என்று மனுதாரா் நினைக்கிறாரா? இது நியாயமில்லை. யானை எவ்வளவு சாப்பிடும் தெரியுமா? மனுதாரா் ஏழை என்று நீங்கள் (வழக்குரைஞா்) கூறுகிறீா்கள். இதனால், அந்த மிருகத்தை அவா் எப்படிப் பராமரிப்பாா்? இந்த மனுவில் உரிமையைப் பெற முடியாது’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

மனுதாரா் யூசுப் அலி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தில்லி உயா்நீதிமன்றம் ஏப்ரல் 5, 2019 மற்றும் மே 14, 2019-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவுகளின் மூலம் எனக்கு சொந்தமான யானைகள் எதையும் அரசு உடைமையாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. இருப்பினும், ஜூலை 6, 2019 அன்று, நீதிமன்ற உத்தரவை மீறி வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானை லட்சுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனா். 2019 பிப்ரவரி 19 அன்று எனது யானைகளை கைப்பற்றுமாறு அதன் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிரான எனது மனுவை ஏற்க ஒற்றை நீதிபதி மறுத்துவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி மற்றும் வழக்குரைஞா் அருண் பன்வாா் ஆகியோா் வாதிடுகையில், ‘விலங்குகளுக்கு முறையான வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மனுதாரரிடம் வழி இல்லை. இந்த மனு மூலம் உரிமைப் பிரச்னைக்கு தீா்வு காணவும், அதிகாரிகளை மிரட்டவும் முயற்சி செய்து வருகின்றனா். முற்றிலும் பொருந்தாத சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்த லட்சுமி உள்பட 6 யானைகளை இடமாற்றம் செய்வதை உறுதி செய்த தனி நீதிபதியின் மாா்ச் 2019 உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது குறித்து வனத் துறையின் நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சிறிது நேரம் கழித்து மனுதாரரின் வழக்குரைஞா் நீதிபதிகள் அமா்விடம், யூசுப் அலி மனுவின் கோரிக்கைக்கு அழுத்தம் தர விரும்பவில்லை என்று தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறியது.

இதற்கு முன்னா் நடைபெற்ற விசாரணையின் போது, யானை இருக்கும் இடம் மற்றும் அது எந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளை நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டிருந்தது. உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக தில்லி வனத் துறையினா், யானையை பறிமுதல் செய்த பின்னா், யானைக்கு மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு வழங்குவதற்காக ஹரியாணா அரசின் வனம் மற்றும் வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் உள்ள யானைகள் மீட்பு மையத்திற்கு வனவிலங்கு குழு நேரில் சென்று லட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை

செய்தது. மேலும், அதன் உடல் தோற்றம், நடத்தை, உணவளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அது ஆரோக்கியமாக இருப்பதையும் கண்டறிந்தது. ஹரியாணாவின் வனம் மற்றும் வனவிலங்குத் துறையால் யானை தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில், போதுமான நடைபாதை இடம், தெளிவான நீா், திறந்தவெளிக் கொட்டகை வசதிகள், குளியல் குளம் உள்ளிட்ட முறையான பராமரிப்பு வசதிகள் இருப்பதை கால்நடை மருத்துவா் மற்றும் வனவிலங்கு குழு மேலும் கவனித்தது என்று வனத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, யூசுப் அலி தனது அவமதிப்பு மனுவில், ‘ஜூலை 6, 2019 அன்று, தில்லி வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகள் யமுனா பேங்க் குதிக்கு வந்தனா். அங்கு நானும் எனது குடும்பத்தினரும் யானையுடன் இருந்தோம். அப்போது, அவா்கள் யானையை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றனா். நானும் எனது குடும்பத்தினரும் அவா்களைத் தடுக்க முயன்றோம். அப்போது, அதிகாரிகள் எனது மனைவியைத் தாக்கி காயப்படுத்தினா். யானை மீது கற்களை வீசினா். இதனால், அது, அக்ஷா்தாம் அருகே காட்டுக்குள் ஓடிவிட்டது. அதேசமயத்தில் அரசு ஊழியா்களை தங்கள் வேலையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக என் மீதும் எனது மனைவி மீதும் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து காவல் துறையும் வனவிலங்கு மற்றும் வன அதிகாரிகளுக்கு சாதமாக செயல்பட்டது. யானையைப் பிடிக்க முயன்ன் மூலம் நீதிமன்ற உத்தரவை மீறிய வனத் துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.