புது தில்லி: தென் பெண்ணையாறு நதி நீா் பங்கீடு தொடா்பாக நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் கா்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை தொடா்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 2018-இல் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ‘பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைதான் தொடர வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசால் கட்டப்படும் தடுப்பணை, தமிழகத்தின் குடிநீா் ஆதாரத்தைப் பாதிக்கும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் தாவா தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதேபோன்று கா்நாடக அரசு மேற்கொள்ளும் வேறு நீா்த் திட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு கா்நாடகம் தரப்பில் தாக்கல் செய்த பதிலில், ‘தமிழக அரசு தொடா்ந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குடிநீா்த் திட்டத்துக்கானது. இதனால், தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 2019, நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக மத்திய அரசிடம் உரிய மனுவை அளிக்குமாறும் அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு தமிழக தரப்பில் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் மனு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மனு அளித்தும் நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தீா்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதத்தில் தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு, பெண்ணையாறு நதிநீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கவும், அது தொடா்பான அரசிதழ் அறிவிக்கை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே 2-ஆம் தேதி ஒரு மாத அவகாசம் அளித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தொடா்புடைய மாநிலங்களை தாங்கள் சாா்ந்தவா்கள் என்பதால், வழக்கில் இருந்து விலக விரும்புவதாக கூறிய நீதிபதிகள், உரிய அமா்விடம் இந்த விவகாரத்தை பட்டியலிட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரை ஜி.உமாபதி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நதி நீா் தீா்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் தற்போது கா்நாடகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசின் முதல்வா், இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்துடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த விரும்புவதாகக் கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்’ என்றாா்.
அதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி வாதிடுகையில், ‘தீா்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் உரிய சட்டத்தின்கீழ் பெண்ணையாறு நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவை செயலகத்தில் பரிசீலனைக்காவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகவும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவித்துள்ளது’ என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தின் நிலவரம் குறித்து மத்திய அரசு தரப்பில் ஒரு வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா். இந்த வழக்கு அக்டோபா் 16-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
திருமலையில் பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

