/

கோடை: முகக்கவசம் அணிந்து நுங்கு விற்பனை

கூத்தாநல்லூரில் நுங்கு வியாபாரி முகக்கவசம் அணிந்துகொண்டு நுங்கு விற்பனை செய்து வருகிறார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

சோ.தெஷ்ணாமூா்த்தி

கூத்தாநல்லூரில் நுங்கு வியாபாரி முகக்கவசம் அணிந்துகொண்டு நுங்கு விற்பனை செய்து வருகிறார். 

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்துடன், கத்திரி வெயில் எனச் சொல்லக் கூடிய அக்னி நட்சத்திரமும், கரோனாவுடன் இணைந்து பிளந்து கட்டுகிறது.  ஏற்கெனவே, கோடை வெயிலை சமாளிக்க இளநீர், மோர், வெள்ளரிக்காய், நுங்கு போன்ற இயற்கையானவைகளை மக்கள் அருந்தி வரும் நிலையில், கத்திரி வெயிலால் இவற்றின் தேவை மக்களுக்கு மேலும் அதிகரிக்கின்றது. நுங்கில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பீ, காம்ப்ளக்ஸ், தையமின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நுங்கு சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். மேலும், உடலுக்கு வலுசேர்க்கக் கூடிய உணவாகும். 

கோடை காலங்களில் அனல் காற்று வீசும் போது, சிலருக்கு நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு மயக்கம் வரும். இதைத் தவிர்க்க தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு விட்டு வெளியில் சென்றால், வெப்பத்தின் தாக்கம் உடலைப் பாதிக்காமல் பாதுக்காக்கும் .கருவுற்றப் பெண்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல்  மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நுங்கு சாப்பிட்டால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கி, கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் நீக்கி கல்லீரல் பலம் பெறும். மேலும், இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை விரைவில் குணப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த, அருமையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, சிறந்த மருந்து நுங்கு என்றால் அது மிகையாகாது. 

கூத்தாநல்லூரில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசும், மருத்துவர்களும் அறிவுரை வழங்கி, உத்தரவும் போடப்பட்டுள்ளது. அந்த விதிகளை மீறாமல், நுங்கு விற்பனை செய்யும் காத்தவராயன் இது குறித்து கூறியது. பண்ணையிலிருந்து பனை மரத்தின் சொந்தக்காரர்களிடம் இருந்து, நுங்கு ஏலம் எடுக்கப்படுகிறது. 60 மரத்தின் நுங்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலும், நுங்கு சீசனில் மட்டுமே வாங்கப்படுகிறது. ஒரு மரத்தில் 4 அல்லது 5  கொத்துகள் இருக்கும். ஒரு குலைக்கொத்தில் 12 நொங்குகள் முதல் 15 நொங்குகள் வரை காய்கள் இருக்கும். ஒரு நுங்கில் 3 சுளைகள்தான் இருக்கும். ஒரு நாளைக்கு நான் 5 மரம் ஏறி நுங்கை பறிப்பேன். கரோனா கால ஊரடங்கால், யாரும் வீட்டை விட்டு வெளியே வராததாலும், மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாததாலும், நுங்கு விற்பனை குறைந்து விட்டது. 

முன்பெல்லாம், ரூ.750 முதல் ரூ.ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். தற்போது ஒரு நாளைக்கு ரூ.300 அல்லது ரூ.400 தான் லாபம் கிடைக்கிறது. மரத்திலிருந்து நுங்கை இறக்கி விட்டால், 24 மணி நேரம்தான் வைத்திருக்கலாம். அதன் பிறகு, நுங்கின் சுவை குறைந்து விடும். நுங்கின் மேல் சீவும் பகுதியில் காய்ந்து விடுவதால் சுளையின் சுவை மாறிவிடும். கோடையை சமாளிக்க இயற்கை தரும் கொடையே நுங்குதான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.