சந்தானராமர் கோயிலுக்கு புதிய தேர் எப்போது? மக்கள் எதிர்பார்ப்பு
நீடாமங்கலத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள சந்தானராமர் கோயில்


நீடாமங்கலத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள சந்தானராமர் கோயில் தேரை சீரமைத்து, மீண்டும் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் கனவை நிறைவேற்ற அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் யமுனாம்பாள்புரம் எனும் நீடாமங்கலம் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு, தனது மனைவி யமுனாம்பாள் வசிப்பதற்காக அழகிய அரண்மனை ஒன்றையும் கட்டினார் மன்னர். இந்த அரண்மனையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வகையில் சுரங்கப் பாதையும் அமைத்தார். அத்துடன், மக்கள் வழிபாடு நடத்த வைணவக் கோயிலாக சந்தானராமர் கோயிலையும், சைவக் கோயிலாக காசிவிசுவநாதர் கோயிலையும் கட்டினார். மக்கள் புனித நீராட சந்தானராமர் கோயிலின் முன்புறம் அழகிய குளம் ஒன்றையும் அமைத்தார். கோயிலுக்கென ராமாயண கதாபாத்திர சிற்பங்களுடன் கூடிய அழகிய தேரும் வடிவமைத்துத் தரப்பட்டது. தேரில் சுவாமியை அமர்த்த தேர் மண்டபம் ஒன்றும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. தொடர்ந்து, மன்னர் காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தையும் தாண்டி, மக்களாட்சி மலரும் வரை சிறப்பாக நடைபெற்றுவந்த சந்தானராமர் கோயில் தேரோட்டம் கடந்த அரை நூற்றாண்டுகளாக நடைபெறவில்லை. அறநிலையத் துறையினர் தேரை சரிவர பராமரிக்காததால், தேர் சிதிலமடைந்து அதன் அழகை இழந்து காணப்படுகிறது. இதனால், தற்போது, சப்பரமே தேர்போல் வடிவமைக்கப்பட்டு, சுவாமி வீதியுலா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
ஆக்கிரமிப்பு: சுமார் 50 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாததால், தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய அரசு நிர்வாகம் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறது.
அறநிலையத் துறையினர் புதிய தேர் வடிவமைக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதுவும் என்ன ஆனது என்பது சந்தானராமருக்கே வெளிச்சம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜாராமன் கூறியது: வரலாற்றுச் சிறப்புமிக்க நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் தேரை புதிதாக வடிவமைத்து இயக்கிட அறநிலையத் துறை முன்வரவேண்டும். பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தேர் மண்டபமும் புதிதாகக் கட்ட வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து, அறநிலையத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "பக்தர்களின் பங்களிப்புடன் தேரை புதிதாக வடிவமைத்து இயக்கிட அறநிலையத் துறை முன்வந்தபோது, உபயதாரர் கிடைக்கவில்லை. இதனால், அறநிலையத் துறையே முழு செலவையும் செய்து, புதிய தேர் வடிவமைத்திட துறை ஆணையரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலுக்கென புதிய தேர் வடிவமைப்பது எப்போது? சிதிலமடைந்த தேர் மண்டபம் புதிப்பிக்கப்படுவது எப்போது? காரோடும் வீதியாக திகழும் தேரோடும் வீதியில் உண்மையிலேயே தேர் ஓடுமா? பக்தர்களின் கனவு நனவாகுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...