குப்பைகளிலிருந்து தயாராகும் இயற்கை உரங்கள்
திருவாரூர் நகரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து, இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


திருவாரூர் நகரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து, இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் நகரம் 10.47 சதுர கி.மீட்டர் பரப்பளவை உடையது. இந்நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. சுமார் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் தொகை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நகர்ப்பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாகி, அவர்களால் தூக்கி வீசப்படும் குப்பைகளின் அளவும் அதிகரிக்கின்றன.
திருவாரூர் நகராட்சி சார்பில் நகரத்தில் சுமார் 50 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர குப்பைத் தொட்டிகள் வைக்காமல் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் மூலம் திருவாரூர் நகரத்தில் தினமும் சுமார் 22 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிமூன்றரை மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் ஆகும்.
இந்த குப்பைகளை சேகரிக்க 86 பணியாளர்கள் உள்ளனர். 5 ஆட்டோக்கள், 2 டிப்பர் லாரிகள், 2 குப்பைகள் அள்ளும் பெரிய லாரிகள் (காம்பாக்டர்), 1 டிராக்டர் ஆகிய வாகனங்கள் குப்பைகளை கொண்டுச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. இதனால், அங்கு சுமார் 35 கியூபிக் மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேர்ந்துள்ளன. இந்நிலையில் வீணாகும் குப்பைகளிலிருந்து உரங்கள் தயாரித்து, அதை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை திருவாரூர் நகராட்சி தொடங்கியுள்ளது.
2017 ஆகஸ்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 2 வார்டுகளுக்கு பொதுவாக என செல்வம் தெரு, ஆர்டிஓ அலுவலகம் பின்புறம், திருமஞ்சன வீதி உள்ளிட்ட 10 இடங்களில் சமுதாய உரப்படுகை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உரப்படுகை அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் மற்றும் குடியிருப்புகளிலிருந்து பெறப்படும் குப்பைகளானது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்படுகின்றன. அவ்வாறு பிரிக்கப்படவில்லை எனில், துப்புரவு தொழிலாளர்களே அந்த குப்பைகளை பிரிக்கின்றனர். அதாவது, உணவுப் பொருள்கள், பழ வகைகள், காகிதம் உள்ளிட்ட கழிவுகள் மக்கும் குப்பை வகையிலும், பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்டவை மக்காத வகையிலும் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர் மக்கும் குப்பைகள் உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 2 மாத காலம் வைக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் உரமாக்கப்படுகின்றன. இயற்கை உரமாக மாற்றப்பட்ட பிறகு பைகளில் அடைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்படுகின்றன.
இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளிடையே தற்போது பரவி வருகிறது. அதற்கேற்ப இயற்கை உரங்கள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குப்பைக் குழிகள் அமைக்கப்பட்டு, அதில் தினமும் மாட்டுச் சாணம், குப்பை உள்ளிட்டவை, சுமார் ஓராண்டு வரை சேகரிக்கப்படும். இந்த ஓராண்டு காலத்தில் இந்த குப்பைகள் மக்கி சிறந்த இயற்கை உரமாக மாறும். பின்னர், இந்த உரங்கள், மாட்டு வண்டி அல்லது டிராக்டர் மூலம் வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால், பாலித்தீன், பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கியது முதல் இந்த குப்பை குழிகளில் மக்காத குப்பைகளே சேரத் தொடங்கின. குப்பைக் குழிகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களை பிரித்தெடுப்பது என்பது சவாலான வேலை. எனவே, குப்பைக்குழி உரங்களை விளை நிலங்களுக்குப் பயன்படுத்துவதை தற்போது விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால் குப்பைக் குழிகள் முறை அகற்றப்பட்டு, அந்த குப்பைகள் சாலை ஓரங்களில் வீசப்படும் அவலம் நிகழ்கிறது. இந்த குப்பைக் குழி உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களையே அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மீது விவசாயிகளுக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூர் நகராட்சி ஆணையர் எம். காந்திராஜ்
தெரிவித்தது:
விவசாயம் மட்டுமே பிரதானமான திருவாரூர் மாவட்டத்தில் இயற்கை உரங்கள் விற்பனை என்பது விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். சுத்தமான இயற்கை உரம், குறைந்த விலைக்கு கிடைப்பதால் தற்போது பல்வேறு தரப்பினரும் வாங்கிச் செல்கின்றனர். மாடித்தோட்டம் செய்வோர், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இந்த இயற்கை உரங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, சிறிய அளவில் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை பெரிய அளவில் தயாரிக்கும் வகையில் சுமார் ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் 35 கியூபிக் மெட்ரிக் டன் குப்பைகள் உள்ளன. அவைகளும் பயோமைனிங் முறையில் தரம் பிரிக்கப்படுவதற்காக ரூ.1.50 கோடிக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும்போது, அதிக அளவிலான இயற்கை உரங்களைப் பெற முடியும். இந்த முறைகள் வெற்றி பெற, மக்கள் அனைவரும் மக்கும் குப்பை, மக்காதக் குப்பை என தரம் பிரித்து குப்பைகளை கொட்டவோ, அல்லது துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவோ வேண்டும்.
உதாரணமாக கடைகளில் வாங்கி உணவு உண்பவர்கள், மீதமுள்ள உணவை அப்படியே அதே பாலித்தீன் பையில் கட்டி, குப்பையில் வீசுகின்றனர். உண்மையில் பாலித்தீன் பை மக்காதக் குப்பை. அதில் உள்ள உணவு மக்கும் குப்பை. ஆக, இதனால் இரட்டிப்பு வேலை ஆகிறது. எனவே, குப்பைகளை பிரித்து வழங்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
எப்படி வாங்குவது?
இந்த உரமானது குறைந்த அளவில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதிக உரம் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் நேரடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். விளைநிலங்களுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமாக உரங்களை வாங்க விரும்புவோர், கொண்டு செல்லும் வகையில் வாகனத்துடன் வருவது நல்லது.
இயற்கை உரம் தயாராகும் முறை....
பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளில் மக்கும் குப்பைகள் உரப்படுகைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர், அவை சாணத்தால் மெழுகி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் சுமார் 2,000 கிலோ வந்த பிறகு மொத்தமாக சாணத்தால் மெழுகி அழுத்தி வைக்கப்படுகிறது. தோராயமாக 1 மாத காலத்துக்குப்பிறகு இந்த அமைப்பு அப்படியே தலைகீழாக மாற்றப்படுகிறது. இப்போது, மீண்டும் சாணத்தால் மெழுகி மீண்டும் 1 மாத கால அளவுக்கு வைக்கப்படுகிறது. இதன்மூலம் மக்காமல் இருந்த ஒரு சில பொருள்களும் மக்கி விடும். பின்னர், இந்த உரத்தை காயவைத்து சலிக்கப்படுகிறது. ஒருவேளை சிறிய அளவிலான கண்ணாடி, பிளாஸ்டிக் இருந்தால் இந்த சலித்தல் முறையில் அகற்றப்படும். சலிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட இயற்கை உரமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மக்காத குப்பைகளை என்ன செய்கிறார்கள்?
மக்காத குப்பைகளும் வீணாக்கப்படுவதில்லை. அந்த குப்பைகளிலிருந்து விலை போகக்கூடிய பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் என தனத்தனியாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. பின்னர், விலை போகக்கூடிய பொருள்களை விற்று, அதிலிருந்து வரக்கூடிய தொகை, துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. விலை போகாத பிளாஸ்டிக் பொருள்கள் அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு விற்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...