தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படுவது எப்போது?
திருவாரூர் பகுதியில் ஆறுகள், குளங்கள், காலிமனைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் பகுதியில் ஆறுகள், குளங்கள், காலிமனைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர்-தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்:
இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்மூலம் அங்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பார்கள் என தெரிவித்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுற்றுச்சூழல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தவிர, பள்ளிகளில் நடைபெறும் இறைவழிபாட்டுக் கூட்டங்களில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்களில் பொருள்களை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் அதுகுறித்து நோட்டீஸ் அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறைவதுடன் ஜனவரி மாதம் வரும்போதும் மக்களுக்கு பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதுடன் பிளாஸ்டிக் பொருள்களும் குறைந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகள்:
பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்வதால் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையலாம். ஆனால், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருள்களை அகற்றாமல் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறையாது. எனவே, ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள், காலிமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதாரணமாக, ஓடம்போக்கி ஆறு, வாளவாய்க்கால்களில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. தவிர பெரும்பாலான ஆற்றின் கரைகளில் மது குடிப்பவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் குவளைகள், தின்பண்டங்கள் அடங்கிய பிளாஸ்டிக் பை ஆகியவை அங்கேயே வீசப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் இக்குப்பைகள் அதிகமாகி, பாட்டில்களும், குப்பைகளுமாக ஆற்றோரங்கள் காட்சியளிக்கின்றன. இதேபோல், தண்ணீர் இல்லாத குளங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு, பிளாஸ்டிக் குளங்களாக மாறியுள்ளன.
இதேபோல், திருவாரூரிலிலிருந்து அடியக்கமங்கலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் காணப்படுகின்றன. நீண்ட நாள்களாக அப்புறப்படுத்தாததால் அங்கேயே பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அடுத்து, சோழா திரையரங்கம் அருகில் உள்ள காலி இடம், மரணப் பாலம் அருகே உள்ள சாலை ஓரங்கள் என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி கூறியது:
உரிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருள்கள் சாலையோரம் மற்றும் நீர்நிலைகளிலும் வீசப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருள்களால் மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் கால்நடைகளுக்கு உபாதைகள் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது. ஆறு, குளங்கள், வாய்க்கால்களில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், மக்காத காரணத்தால், நீண்ட காலமாக நீர்நிலைகளிலேயே கிடந்து தண்ணீர் பயனற்றுப் போகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருள்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து இந்திய தொழிற் சங்க மைய மாவட்டச் செயலர் டி. முருகையன் கூறியது: ஆறுகளில் தண்ணீர் வருவதற்குள் நீர் நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். தண்ணீர் வந்து விட்டால், குப்பைகளை அகற்ற முடியாது.
இந்த பிளாஸ்டிக் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் சென்று வேறு இடத்துக்குச் செல்லலாம். அல்லது சேறு, சகதிகளில் மூடப்பட்டு பூமிக்கு அடியில் தேங்கலாம். எனவே, நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் குப்பைகளை அகற்றவே வேலை சரியாக உள்ளது. தினசரி வேலைகளுக்கு மத்தியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது என்பது இயலாத காரியம். எனவே, தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற தனிக்குழு ஏற்படுத்தி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
உலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்கை, தடை செய்வதால் மட்டும் அகற்ற முடியாது. ஏற்கெனவே, அனைத்து இடங்களிலும் பரவி காணப்படும் பிளாஸ்டிக்கை அழித்தால் மட்டுமே பிளாஸ்டிக் சுவடு இல்லாமல் மறையும். எனவே, பிளாஸ்டிக்கை சேகரித்து அழிக்க சிறப்புத் திட்டம் வகுத்து, அதற்கென கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதன் மூலம் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அழிக்க முடியும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எண்ணம்.
சேகரித்து அழிக்க சிறப்புத் திட்டம் தேவை
உலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்கை, தடை செய்வதால் மட்டும் அகற்ற முடியாது. ஏற்கெனவே, அனைத்து இடங்களிலும் பரவி காணப்படும் பிளாஸ்டிக்கை அழித்தால் மட்டுமே பிளாஸ்டிக் சுவடு இல்லாமல் மறையும்.
எனவே, பிளாஸ்டிக்கை சேகரித்து அழிக்க சிறப்புத் திட்டம் வகுத்து, அதற்கென கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...