கிராமப்புற பள்ளிகளில் குறையும் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்
எண்பது மாணவர்களுக்கு மேல் இருந்தால் ஆண்டு விழா கொண்டாடலாம் என நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் ஆண்டு விழா


எண்பது மாணவர்களுக்கு மேல் இருந்தால் ஆண்டு விழா கொண்டாடலாம் என நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தடைபடுவதோடு, கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளின் தனித்திறன் மேம்படுத்தவும், கல்வி உரிமைச் சட்டம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டுமென அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென, தமிழ்நாடு முழுவதும் ரூ. 5.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 80 மாணவர்களுக்கு மேல் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கும், 120 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கும் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகள் நன்கொடை வசூல் செய்து விழா நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இடைநிற்றல் மாணவர்களை குறைக்கும் வகையில் ஊராட்சிக்கு ஒரு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 1 கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஒருவேளை அந்த ஊராட்சி 3 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால், அந்த ஊராட்சியில் இரண்டு தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஏனெனில் கிராமப்புறங்களில் மாணவர்களின் இடைநிற்றல் காரணம் குறித்து ஆராய்ந்ததில், தூரம் அதிகமாக இருந்தால் 5 முதல் 10 வயதுடைய குழந்தைகள் பயணிக்க கடினமாக உள்ளதாகவும், மாணவர்கள் பள்ளி செல்ல விரும்புவதில்லை எனவும் தெரிய வந்தது.
அத்துடன் தனியார் பள்ளிகளைப்போல அரசுப்பள்ளிகள் மாணவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் அனுப்புவதில்லை. இதனால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என தெரிய வந்ததையடுத்து, 1 கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஓரிடத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களின் வசதிக்காக தொடக்கப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 80 மாணவர்களுக்கு குறைவாகவே இருப்பதால் ஆண்டு விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டு விழா என்பது, மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் விழா மட்டுமன்றி, அடுத்த ஆண்டு அதே பள்ளியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பழைய மாணவர்களுக்கும், இப்பள்ளியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை இதர பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது. பள்ளி ஆண்டு விழாக்களில் பங்கேற்கும் பெற்றோருக்கும் பள்ளி மீது ஆர்வம் ஏற்படுவதற்கு இந்த விழாக்கள் உறுதுணையாக இருக்கின்றன.
தமிழகத்தில் 39,348 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 7,295 பள்ளிகளுக்கு மட்டுமே ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 980 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 132 பள்ளிகளுக்கு மட்டுமே அரசு தரும் ஆண்டு விழா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவைகள் மட்டுமே 80-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பள்ளிகளாக உள்ளன. இதனால், கிராமப்புறங்களில் உள்ள குறைந்த மாணவர்களை உடைய தொடக்கப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டு கொண்டாடப்படும் ஆண்டு விழாக்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மனதை கலைத்து தனியார் பள்ளிகளில் சேருவதற்கான தூண்டு கோலாக அமையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் ஆர். ஈவெரா கூறியது: ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிட்டிருப்பது வரவேற்கக் கூடியது, எனினும் இவ்விழாவை கொண்டாட அரசு ஒரு பள்ளிக்கு வழங்கும் தொகை மிகக் குறைவாக உள்ளது. இதனால் விழாவின் தன்மை குறையும். எனவே, முழுத்தொகையையும் அரசே வழங்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆண்டு விழா கொண்டாட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
80 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 5000, 120 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 8000, 200 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 10,000 என தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல்தொகை தேவைப்பட்டால், நன்கொடை வசூல் செய்து செயல்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கும் கிராமப்புறப் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறப் பள்ளிகளுக்கு நன்கொடை பெறுவதில் சிரமம் இருக்காது.
ஆனால், கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அங்கு எவ்வித பெரிய நிறுவனங்களுக்கும் வாய்ப்பில்லை, என்பதால் கிராமப்புற பள்ளிகளுக்கு நன்கொடை பெறுவது சிரமமாக இருக்கும். எனவே, கிராமப்புற மாணவர்களை பொறுத்தவரை ஆண்டுவிழா கொண்டாட்டம் என்பது கனவாக மாறும் நிலை ஏற்படுகிறது என்றார்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சுபாஷ் காந்தி கூறியது: பொதுவாக ஆண்டு விழாக்களில் நடத்தப்படும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கும்போது, அவர்களின் கலாசாரம், ஆளுமைத்திறன், பண்பாடு உள்ளிட்டவை மேம்படும். ஆண்டு விழாக்கள் தடைபட்டால் மாணவர்களின் இப்பண்புகள் மழுங்கடிக்கப்படும் நிலை உருவாகும். மேலும், அப்பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறையும். எனவே, இதுகுறித்து உரிய முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்து பள்ளி மாணவர்களும் திறமையானவர்களே. அவர்களைத் தூண்டி விட தூண்டுகோல் கண்டிப்பாக தேவை. இந்த ஆண்டு விழாக்கள் மாணவர்களுக்கு எப்போதும் தூண்டுகோலாக அமைந்து, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஒருவேளை ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மாணவர்கள் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு இது ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி, கலைத் திறனை மேம்படுத்த, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துப் பள்ளிகளும் ஆண்டு விழா கொண்டாட வேண்டும் என்ற முடிவை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...