சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த இடம் தேர்வு செய்யப்படுமா ?
சீர்காழி: சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நிகழ் கல்வியாண்டில் சொந்த இடம் தேர்வு


சீர்காழி: சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நிகழ் கல்வியாண்டில் சொந்த இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி மடவிளாகத்தில் 2 தளங்களில் 8 வகுப்பறைகளுடன் இயங்கி வரும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சீர்காழியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஏதும் இல்லாத நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுபுற பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர், ஏழைக் குழந்தைகளின் நலன் கருதி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவின் உத்தரவுப்படி 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடக்க பள்ளியாக இயங்கி வந்த நகராட்சிப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது.
பின்னர் அதே கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளியாக ஒரு பள்ளி தரம் உயர்த்தப்பட்ட வேண்டுமெனில் கல்வித் துறைக்கு ரூ. 2 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டுமென்பது விதி. அதன்படி சீர்காழியை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களால் ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்பட்டது. இதையடுத்து, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்கள் நகராட்சிப் பள்ளியை ஆய்வு செய்தபோது, போதிய இடவசதியில்லாமல் இருப்பதை அறிந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்ட உத்தரவை பரிசீலனையில் வைத்திருந்தனர்.
இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அப்போது சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ம. சக்தியிடம் நகராட்சிப் பள்ளிக்குச் சொந்த இடம் தேர்வு குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சீர்காழி வட்டம், செம்மங்குடி
செல்லும் சாலையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 3 ஏக்கர் 29 சென்ட் நிலம், அப்போதைய நில மதிப்பின்படி ரூ. 20 லட்சத்துக்கு நகராட்சிப் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொள்ள குத்தகை அடிப்படையில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போதைய, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் தேர்வு செய்யப்பட்ட இடத்தை அரசு சந்தை மதிப்பை அளவீடு செய்து, ஒப்புதல் வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி வசம் தருமபுரம் ஆதீனம் மூலம் விற்பனை செய்ய, இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக அனுமதி வழங்கி உத்தரவு ஆணை வழங்க வேண்டும். ஆனால், அப்போது என்ன காரணத்தினாலோ மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை அலுவலக அதிகாரிகள் சம்பந்தபட்ட கோப்புகளைக் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியமைத்து சட்டப் பேரவை உறுப்பினராக பி.வி. பாரதி பதவியேற்ற பின்னர் சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் வந்து அங்குள்ள குறைபாடுகளை ஆய்வு செய்து சொந்தமாக இடம் தேர்வு செய்து கட்டடம் கட்ட முனைப்பு காட்டினார். ஆனால், நாள்கள் நகர்ந்ததே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், நகராட்சிப் பள்ளிக்குச் சொந்தமாக இடம் தேர்வு செய்து கட்டடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை நாளடைவில் சுருதி குறையத் தொடங்கியது. அவ்வப்போது, பள்ளியில் நடைபெறும் விழாக்களின்போது அதில் பங்கேற்கும் அரசியில் கட்சி பிரமுகர்கள் இந்த கோரிக்கையை ஞாபகப்படுத்தி மட்டும் பேசுவதோடு நின்றுவிடுகின்றனர். இதனால் தற்போதைய குறுகிய கட்டடத்தில் போதிய இட வசதியின்றி பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக 2011-ஆம் ஆண்டு தரம் உயர்த்தபட்டதிலிருந்து அதுவரை அங்கு செயல்பட்டுவந்த 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீர்காழி கோவிலான்தெருவில் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் கட்டி தந்த சமுதாயக் கூடத்தில் தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது. ஆனால் 6 முதல் பிளஸ் 2 வரையில் பழைய குறுகிய கட்டடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இக்கட்டடத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியிலும், வராண்டாவிலும், மாடிப்படிக்கு கீழும் கரும்பலகை வைத்து வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.
மிதிவண்டிகளை சாலையில் வெயிலில் தான் மாணவர்கள் நிறுத்திச்செல்வர். சமையலறை, கழிப்பறைகள் இடவசதியில்லாமல் இயங்கி வருகின்றன. இதைத்தாண்டிய கொடுமை ஒரே கழிப்பறையை ஆண்கள், பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை வாசலில் ஆசிரியர் நின்று பெண்கள் கழிப்பறைக்கு சென்றுள்ளபோது, மாணவர்கள் உள்ளே செல்லாத வகையில் மாணவர்கள் செல்லும்போது, மாணவிகள் உள்ளே புகாத வகையிலும் காவல் காக்கும் நிலை தமிழகத்திலேயே இந்த பள்ளிக் கூடத்தில்தான் இருந்தது.
தற்போது அது மட்டும் தற்காலிகமாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 3 குடிநீர் குழாய்கள் மட்டுமே மாணவர்களின் பயன்பாட்டுக்கு உள்ளது. மேலும் காற்றோட்டம் இல்லாத அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள குறுகிய இடத்தில் பள்ளி தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து போன்ற அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அஞ்சுகின்றனர்.
எனவே. தமிழக அரசு பிரத்யோக கவனம் செலுத்தி சீர்காழி நகராட்சிப் பள்ளியை நேரில் ஆய்வு செய்து, இப்பள்ளிக்கு சொந்த இடம் தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்களை நீக்கி வரும் கல்வியாண்டு தொடக்கத்திலேயே உரிய தீர்வு காண வேண்டும் என பெற்றோர், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...