/

v

சீர்காழி பகுதியில் பாய் தயாரிக்க பயன்படும் கோரைப்புல் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:35 am

எம். ஞானவேல்

சீர்காழி பகுதியில் பாய் தயாரிக்க பயன்படும் கோரைப்புல் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் சேந்தங்குடி, தைக்கால், கீழவல்லம், தில்லைமங்களம், ஓலையாம்புத்தூர், அரசூர், பாதரக்குடி, செம்பனார்கோவில், கடலி, ஆக்கூர், கீழமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோரை சாகுபடி செய்ய முதலில் கோரைக் கிழங்கு கொண்டுவந்து அதை 3 நாள்கள் சாக்குப்பையை போட்டு மூடிவைக்கின்றனர். பின்னர், நிலத்தை பண்படுத்தி தயார் செய்து மூடிவைத்து, பக்குவப்பட்ட கோரைக் கிழங்கை ஒன்றரை அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதில் வைத்து மூடிவிடுகின்றனர்.
உளுந்து பயறு சாகுபடி போன்று கோரைக் கிழங்கை சாகுபடி செய்கின்றனர். பின்னர் தினந்தோறும் கோரை வயலுக்கு தண்ணீர் வைத்தும், மாதம் ஒரு முறை தேவையான உரமிட்டும் நன்கு பராமரிக்கும்பட்சத்தில் கோரை வளர்கிறது. அதிகளவு மழை பெய்து தண்ணீர் நின்றாலும் ஓரளவுக்கு தாங்கிக்கொள்ளும் கோரைப்புல், தண்ணீரில்லாத வறட்சியைத் தாங்காமல் கருகும் தன்மையுடையது. இதனால் முறையாக தண்ணீர்விட்டு கோரையை வளர்க்கின்றனர்.
6 மாத பயிரான கோரைப்புல், சுமார் ஐந்தேகால் அடி உயரம் வரை வளர்கிறது. இவ்வாறு வளர்ந்த கோரைப்புல், மேற்கண்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோரையின் மேல் பகுதியில் உள்ள பூவை அறுத்துவிட்டு அறுவடை செய்யும்போது, சுமார் நான்கே முக்கால் அடி வரை கோரைப்புல் கிடைக்கிறது. இவற்றை நீளவாக்கில் இரண்டு, இரண்டாக கிழித்து உலர வைக்கின்றனர்.
வெயிலிலும், நிழலிலும் நன்கு காய வைக்கப்பட்ட கோரைப்புல், விற்பனைக்காக கட்டுகளாக கட்டப்படுகிறது. 33 அங்குல சுற்றளவு கொண்ட கோரைப்புல், 1 அள்ளு எனப்படுகிறது. இவ்வாறு 4 அள்ளு சேர்ந்ததுதான் 1 கட்டு. இந்த 1 கட்டுக் கோரையை ரூ.1,250 முதல் ரூ.1,350 வரை விலை கொடுத்து பாய் தயாரிக்க வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கோரை சாகுபடி செய்ய முதன்முதலில் ஒரு வயலைத் தயார் செய்யும்போது, ஏக்கர் ஒன்றுக்கு கோரைக் கிழங்கு விதைக்க ரூ. 3 லட்சம் வரை செலவாகும். அதன்பின்னர், 2-ஆவது முறை அதே வயலில் கோரை சாகுபடி செய்ய ரூ.1 லட்சமும், அதன்பின்னர் ரூ. 50 ஆயிரம் வரைதான் செலவாகுமாம்.
ஒருமுறை கோரைக் கிழங்கு விதைக்கப்பட்டு அவை வளர்ந்து, கோரைப்புல் அறுவடை செய்தவுடன் 3 பருவம் வளர்ந்த கோரை குப்பைகளை தீயிட்டுக் கொளுத்தி விடுகின்றனர். அந்த தீ நன்கு எரிந்து முடித்தவுடன்  தண்ணீர் விட்டு அணைத்து 10 நாள் சென்றபின்னர் மீண்டும் அங்கு கோரைக் கிழங்கு விதைக்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்படும் கோரைப்புல் மூலம் 4 அடி (அகலம்), 3 அடி, இரண்டரை அடி கொண்ட பாய்கள் தயார் செய்யபடுகின்றன.
இதுகுறித்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த பாய் வியாபாரி பக்கீர் முகமது கூறியதாவது:
பாய் தயாரிக்க பயன்படும் கோரைப்புல் சாகுபடியானது 6 மாதப் பயிர். நாள்தோறும் உரிய முறையில் தண்ணீர் வைத்து, பராமரித்து வந்தால் அறுவடையின்போது நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்தக் கோரைப்புல்களைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அவற்றை மேற்கொண்டு லாபம் வைத்து பாய் தயாரிக்கும் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதுண்டு.
சில வியாபாரிகள் தாங்களே சொந்தமாக கோரை சாகுபடி செய்வதும் உண்டு. பின்னர், அந்தக் கோரையை நன்கு சாயம் ஏற்றி, சூடுபடுத்தி வெயிலில் இரண்டு, மூன்று நாள்கள் நன்கு காயவைக்க வேண்டும். இயந்திரம் மூலம் கோரை நெய்து, அவற்றுக்கு நூல்பட்டைத் தைத்து இறுதி வடிவம் கொடுத்து விற்பனை செய்கிறோம். தற்போது பாய் தயாரிப்புத் தொழிலும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட்டதால், மூலப்பொருள்களான நூல், சாயம் உள்ளிட்டவற்றின் 
விலை அதிகரித்து, பாய் விலையும் உயருகிறது. உழைப்புக்கு  ஏற்ற லாபம் கிடைப்பதில்லை 
என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.