வருவாய்க் குறைவால் நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழில்
மண்பாண்டத் தொழிலில் போதிய வருவாய் இல்லாமல் பெரும்பாலான தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டதால், சீர்காழி பகுதியில் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது.


மண்பாண்டத் தொழிலில் போதிய வருவாய் இல்லாமல் பெரும்பாலான தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டதால், சீர்காழி பகுதியில் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் செம்மங்குடி, வினாயகக்குடி, மாதானம், நல்லூர், கடவாசல், வேட்டங்குடி, கேவரோடை, கருவி உள்ளிட்டப் பகுதிகளில் மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈடுபட்டு வந்தனர்.
பொங்கல் பண்டிகை என்றால் இப்பகுதிகளில் செய்யப்படும் மண்பாண்டங்கள் சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்டப் பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
மண்பாண்டங்களில் உணவு சமைத்தால் அதன் ருசி கூடுவதுடன், உடலுக்கு எந்த உபாதைகளையும் ஏற்படுத்தாது என்பதால், நம் முன்னோர்கள் மண்பாண்டங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் நாகரிகம் எனக் கருதி அலுமினியம், எவர்சில்வர், காப்பர் போன்ற உலோகப் பாத்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியதாலும், மண்பாண்டங்கள் செய்வதற்கு தேவையான மண் எடுக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்ததாலும் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால், பெரும்பாலான மண்பாண்டத் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியிராமல், மாற்று வேலைகளைத் தேடி வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
பொங்கல் பண்டிகை காலங்களில் ஓரளவுக்கு பொங்கல் பானைகள் விற்பனையாகும். அதுவும், தற்போது நகர பகுதி மக்கள் பித்தளைப் பானைகளில் பொங்கல் வைப்பதால் பண்டிகை கால விற்பனையும் குறைந்து வருகிறது. இதனால், மண்பாண்டத் தொழிலாளர்கள் இத் தொழிலை தங்களது பிள்ளைகளுக்கு கற்றுத் தராமல் மாற்றுப் பணிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், வரும் காலத்தில் மண்பாண்டத் தொழில் மறைந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி பக்கிரிசாமி கூறியது: பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த மூன்று மாதங்களாக மண் பானைகள், சட்டிகள் தயார் செய்து வருகிறோம். மண் பானை, சட்டிகள் தயாரித்து அதை ஒரு வாரம் நிழலில் காயவைத்து, பின்னர் வறட்டி, வைக்கோல் கொண்டு எரியூட்டி பானை, சட்டிகளைச் சுட்டு, அதன் பின் விற்பனைக்கு அனுப்புகிறோம்.
சிறிய சட்டி ரூ.20-க்கும், பெரிய சட்டி ரூ.30-க்கும், பானைகள் ரூ.30 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. நலிந்து வரும் மண்பாண்டத் தொழிலை மீட்டெடுக்க அரசு மண் எடுக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதோடு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழர்களின் வாழ்க்கை முறை கலாசாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மண்பாண்டங்களை வருங்கால சந்ததியினர் ஏடுகளில் மட்டுமே காணும் அவல நிலை ஏற்படாமலிருக்கவும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...