/

அடிப்படை வசதியில்லாத வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம்பயணிகள் அவதி

வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி உள்ளதால், பயணிகள் பேருந்துக்காக, சாலையில் காத்து நிற்க வேண்டிய நிலையுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:19 pm

எம். ஞானவேல்

வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி உள்ளதால், பயணிகள் பேருந்துக்காக, சாலையில் காத்து நிற்க வேண்டிய நிலையுள்ளது.
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாதசுவாமி கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இவ்வூர் நாடி ஜோதிடத்துக்குப் பிரசித்திப்பெற்றதால், நாடி ஜோதிடம் பார்க்கவும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். இதனால், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ரூ. 1.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, இலவச கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படாததால், கழிப்பறை சேதமடைந்து, தற்போது பயன்படுத்தமுடியாத நிலையில் பூட்டப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களும் பழுதடைந்துள்ளன. பயணிகளுக்கான இருக்கைகள் இருந்த சுவடே தெரியவில்லை. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. 
இவ்வாறு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல்,  சீர்காழி-மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலும், தெற்குவீதி பிரதான சாலையிலும் பேருந்துக்கு காத்து நிற்கின்றனர். இதனால் பேருந்து நிலையம் காட்சிப் பொருளாகவே உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கி, பேருந்து நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோயில் பொது தொழிலாளர்கள் சங்க தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான சாமிநாதன் கூறியது:
நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்கும், நாடி ஜோதிடம் பார்க்கவும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களில் பெரும்பாலானோர் பேருந்துகளில் வருகின்றனர். பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இவர்கள் அவதிப்படும் நிலையுள்ளது. 
மேலும், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வடிகால் வசதியும் இல்லை. இதனால், கழவுநீர் தேங்கி சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், நகரில் வடிகால் வசதியை மேம்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.