பழுதடைந்த சாலையில் ஆபத்தான பயணம்: பேருந்தில் பயணிக்க ஏங்கும் கிராமப்புற மாணவர்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே முள்புதர்களுக்கு நடுவே பழுதடைந்த சாலையில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும்


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே முள்புதர்களுக்கு நடுவே பழுதடைந்த சாலையில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் கிராமத்தினரின் கோரிக்கை கவனம் பெறாத நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பெயரளவில் இயக்கப்படும் அரசு பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ளமுடியாத ஏக்கத்தோடு மாணவர்கள் உள்ளனர்.
வேதாரண்யம் பகுதியின் தெற்கு கடலோரப் பகுதியையொட்டியுள்ள தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், கடிநெல்வயல், பன்னாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து, தகவல் தொடர்பு, மருத்துவம், குடிநீர், கல்வி என அனைத்து அடிப்படை வசதிகளிலும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளன.
பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இப்பகுதி மக்கள், அரசியல் கருதியே பாகுபாடு நிலவுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
பழுதடைந்த சாலை...
விவசாயம் சார்ந்த பணிகளையே பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் இக் கிராமங்களை இணைக்கும் ஒரேஒரு இணைப்பாக தகட்டூர்- தென்னடார் இடையே 4 கி.மீ. சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பக்கத்தில் முக்கிய வடிகால் ஆறான முள்ளியாறும், மறுபக்கத்தில் தாழ்வான விளைநிலங்களும், ஆள்கொண்டான் ஏரியும் உள்ளன.
பக்கவாட்டில் குடியிருப்புகளே இல்லாத இந்த சாலையில் இரவு நேரத்தில் பயணிக்க ஏதுவாக பெயருக்குக் கூட தெரு விளக்குகள் இல்லை. இந்த சாலையின் முன்பகுதி 2 கி.மீ. தொலைவுக்கு கிராம சாலையாகப் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 2 கி.மீ. தொலைவு கடந்த பல ஆண்டுகளாகவே ஊராட்சி ஒன்றிய சாலையாக உள்ளது.
பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்து காணப்படும் கருவேல முள் மரங்கள், இரவில் அச்சுறுத்தும் நரிகள், காட்டுப் பன்றிகள், மர்ம நபர்கள் என அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
இந்த சாலையின் வழியே தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட தெற்கு கடலோரக் கிராமங்கள் வழியே வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 மினி பேருந்துகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்தன. இவை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது ஒன்று கூட இயக்கப்படவில்லை.
பள்ளி...
தென்னடார் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு ஊராட்சி ஒன்றியப் பள்ளியை தரம் உயர்த்த தேவையான பணத்தை கிராமத்தினரே முன்வந்து செலுத்தியும், தரம் உயர்த்தப்படவில்லை.
ஒன்றியப் பள்ளிக்கே பஞ்சமான இந்த ஊரில் இருந்து தற்போது கல்லூரியில் படித்து வரும் 90 மாணவ, மாணவியர் மட்டுமன்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வெளியூர்களில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர். இவ்வாறு வெளியூர் செல்லும் மாணவர்கள் பிரதான பயணச் சாலையை அடைய 6, 7 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியில் அல்லது நடந்தே செல்ல நேரிடுகிறது.
பெயரளவில் அரசுப் பேருந்து...
இப்பகுதி கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதி வழியாக வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டிக்கு அரசு பேருந்து இயக்க 2010-இல் அப்போதைய திமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மினி பேருந்து உரிமையாளர்களை பாதிக்கும் என்ற நோக்கத்தில், அந்த நடவடிக்கை இருட்டடிப்பு செய்யப்பட்டு, அரசு பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகள் வைத்த அப்போதைய ஆளும் கட்சியினர், கிராமத்தினர் ஏமாற்றமடைந்தனர்.
இது தொடர்பாக, 2010 செப்.7-ஆம் தேதி தினமணியில் சிறப்பு செய்தி வெளியானதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் பஞ்சநதிக்குளம்- நாகை (உள்வழி) தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து, 2010 செப்.9 முதல் ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தென்னடார் வழியாக வாய்மேடு வரை நீட்டிக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த தடத்தில் அதிகாலை 6 மணி, முற்பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என்ற நேரப்படி நாகைக்கு பேருந்து இயக்கப்பட்டு
வருகிறது.
மாணவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் நிலையிலும், இந்த பகுதி மாணவர்களும், கிராமத்தினரும் பழுதடைந்த சாலையை சீரமைக்கவும், பெயரளவில் இயக்கப்படும் பேருந்தை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து சமூக ஆர்வலர் த. குழந்தைவேலு கூறியது...
இங்கு இயக்கப்படும் ஒரே ஒரு பேருந்தும் விரைவுப் பேருந்து என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்பதோடு, அவர்கள் கட்டணம் செலுத்தி செல்லவும், அனைத்துத் தரப்பு மக்கள் அதிகமாகப் பயணிக்க ஏற்ற நேரமாகவும் அமையவில்லை. எனவே, இப்பேருந்தை தேவையான நேரத்தில் கூடுதல் முறை இயக்கவேண்டும் என்றார்.
மாணவர் அ. கோகுல்ராஜ் கூறியது...
நான் தகட்டூர் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு 7 கி. மீ. தொலைவுக்கு சைக்கிளில்தான் செல்கிறேன். சிறப்பு வகுப்பு நடைபெறும் நாள்களில் இரவில் சாலையில் செல்ல முடியவில்லை. சாலையோர முள் மரங்களையாவது நூறு நாள் வேலைத் திட்டத்தில் அகற்ற வேண்டும். என்னைப் போன்ற மாணவர்களுக்கு பேருந்தில் பள்ளிக்குச் செல்ல ஆசையாக உள்ளது என்றார்.
வழக்குரைஞர் அ. பாரிபாலன் கூறியது...
திருத்துறைப்பூண்டி-தெற்கு கடலோரக் கிராமங்கள் வழியாக வேதாரண்யம் செல்ல புதிய தடத்தில் அரசு பேருந்து இயக்க இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, தமிழக கைத்தறித் துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பகுதி மாணவ, மாணவிகளும் பேருந்தில் இலவசப் பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...