வேதாரண்யத்திலிருந்து கேரளம் செல்லும் கார்கால மாங்காய் விலை இருந்தும் விளைச்சல் குறைவால் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் விளைவிக்கப்படும் கார்கால மாங்காய்களுக்கு கேரள மாநிலத்தில் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ள


நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் விளைவிக்கப்படும் கார்கால மாங்காய்களுக்கு கேரள மாநிலத்தில் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,விலை இருந்தும் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட செம்போடை, கத்தரிப்புலம், குரவப்புலம், புஷ்பவனம், தேத்தாக்குடி, நாகக்குடையான், பெரியகுத்தகை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் மா மர சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. பொதுவாக, தமிழ்நாட்டில் மா அறுவடை மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறும். ரகங்களுக்கு ஏற்றவாறு அறுவடை மாதங்கள் மாறுபடும். இதில், கடலோர மணல் பாங்கான நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ரகங்கள் கார்காலத்தில் நல்ல மகசூலை தரும் தன்மையைப் பெற்றுள்ளது.
நீலம் உள்ளிட்ட நாட்டு ரகங்கள், செங்காம்பு ருமேனி போன்ற ரகங்கள் அதிக பயன் தருவதால் இதை வேதாரண்யம் பகுதி விவசாயிகள் அதிக பரப்பில் சாகுபடி செய்கின்றனர். மற்ற மா ரகங்களைப்போல இந்த ரகம் முதல்போக அறுவடை, மற்ற இடங்களைப்போல ஏப்ரல், மே மாதங்களில் கணிசமாக நடைபெறும். அது காய் மற்றும் பழங்களுக்காகத் தரம் பிரிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும். அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் உற்பத்தியாகும் மா அறுவடை நடைபெறும் பருவம் என்பதால், அதன் கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டு விவசாயிகளை பாதிக்கச் செய்யும்.
ஆனால், அதே ரகங்களின் மா மரங்களில் கார்கால பருவத்தையொட்டி, பூத்து காய்த்து புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்த பருவத்தில் விளையும் மாங்காய் பழ உற்பத்திக்கு ஏற்றதல்ல. மா உற்பத்தி அரிதான பருவம் என்பதால் கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் சந்தை வாய்ப்பு அதிகரிக்கும், பழ உற்பத்திக்கான பருவத்தில் கிடைக்கும் விலையைவிட கார்காலத்தில் பல மடங்கு அதிகமாக கொள்முதல் விலை கிடைக்கும்.
நிகழாண்டில் நிலவிய வறட்சியின் காரணத்தால் கார்கால பருவத்துக்கான பூ உற்பத்தி குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் மா அறுவடையில் மகசூல் அளவு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், விலையோ கடந்த ஆண்டைவிட லாபகரமான அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த கார்கால பருவத்தில் ஒரு கிலோ நாட்டு ரகம் ரூ. 10-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ. 25 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல, மற்ற ரகங்களின் விலை (அடைப்பு குறிக்குள் கடந்த ஆண்டு விலை) விவரம்:
ஒரு கிலோ ருமானி ரூ. 55 (கடந்த ஆண்டு ரூ. 23), செந்தூரா ரூ. 45 (ரூ. 15), நீலம் ரூ. 35 (ரூ. 12), ஒட்டு (காய்ப்பு குறைவு) ரூ. 55 (ரூ. 25) என்ற அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.
கார்கால மாங்காய்களை கேரள மாநிலத்தவர் விரும்பி சாப்பிடுவதால் அங்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தனியார் முகவர்கள் மூலம் சில்லறை வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மாங்காய்கள் ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, வெளி இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில், கேரள மாநிலத்துக்கே அதிக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து கத்தரிப்புலம் மா விவசாயி வேதராசு கூறியது:
கோடையில் மழை இல்லாததால் கார் பருவம் காய்ப்பு குறைந்துபோனது. அறுவடை தொடங்கிய நிலையில் ஏற்பட்ட கன மழையால் இளம் பிஞ்சுகள் பாதிப்படைந்துவிட்டது. மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டில் லாபம் தரும் விலை இருந்தும் உற்பத்தி குறைந்துவிட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...