நெருக்கடியில் மாடுகள்: வளர்ப்புத் தொழில் முடங்கியது கால்நடைச் சந்தை
வரலாறு காணாத வறட்சியின் தாக்கத்தால் கால்நடைகள் வளர்ப்பது பிரச்னையாக இருந்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளால் கால்நடைச் சந்தைகள் முடங்கியுள்ளன.


வரலாறு காணாத வறட்சியின் தாக்கத்தால் கால்நடைகள் வளர்ப்பது பிரச்னையாக இருந்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளால் கால்நடைச் சந்தைகள் முடங்கியுள்ளன.
இதனால், வேளாண்மை சார்ந்த உப வாழ்வாதாரமாக கருதப்படும் மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட (தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள்) பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றத்தால் நெல் உள்ளிட்ட விளைபொருள் உற்பத்தி மட்டுமல்லாது வேளாண்மை சார்ந்த உபதொழிலாக கருதப்படும் கால்நடை வளர்ப்பையும் பாதித்து வருகிறது.
நசிந்து வரும் வளர்ப்பு: நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கிராமப்புறங்களில் உழவுத் தொழிலுக்கு சிறப்புப் பெற்ற உம்பளச்சேரி பாரம்பரிய இனம் உள்ளிட்ட பல்வேறு பசு இனங்கள், எருமை இன மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் நாட்டு பாரம்பரிய இனங்களைச் சேர்ந்த மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பது முக்கியத் தொழிலாகும். ஒரு சில எண்ணிக்கையில் என்றால் வீடுகளிலும், கூடுதல் எண்ணிக்கையிலான மாடுகளை கிடைகளாக அமைத்தும் வளர்க்கப்படுகின்றன.
இங்குள்ள உம்பளச்சேரி கிராமத்தில் உருவான உம்பளச்சேரி பாரம்பரிய மாடுகள் கடின உழவுக்கும், சத்து மிகுந்த பாலுக்கும் தேசிய நிலையில் சிறப்புப் பெற்றது. இவ்வினத்தை பாதுகாக்க இங்குள்ள கொருக்கை கிராமத்தில் அரசின் கால்நடை அபிவிருத்தி பண்ணை செயல்படுவது மாடுகள் வளர்ப்பின் சிறப்புக்கு சான்றாகும்.
இந்த பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் மேய்ச்சல் புறம்போக்காக பராமரிக்கப்படுகிறது. இந்த மாடுகள், பால் உற்பத்திக்காக மட்டுமல்லாது, அவற்றின் இன அபிவிருத்தி, உழவு செய்ய, வண்டி இழுக்கும் காளைகளின் இனப் பெருக்கம், வேளாண்மைக்கு தேவைப்படும் இயற்கை உரம்,சிறுநீர் தேவை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன.
அதிகரித்து வரும் ஆயத்த (பாக்கெட்) பால் உற்பத்தி தாக்கம், பராமரிப்பு, தீவன செலவினம் அதிகரிப்பால் பால் உற்பத்திக்கான மாடுகள் வளர்ப்பு ஏற்கெனவே நசிந்து வருகிறது.
ஆனாலும், மாடுகள் வளர்ப்பது வருவாய்க்காக மட்டுமல்லாது மரபாகவும், கௌரவமாகவும் கருதுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
சந்தைப்படுத்துவதில் பிரச்னை: வேதாரண்யம் பகுதியில் முக்கிய தீவனமான வைக்கோல் (உலவர் தீவனம்),
கால்நடைகளுக்கான குடிநீரும் தட்டுப்பாடாக உள்ளது.
இந்த நிலையில், பல்வேறு தேவைகளுக்காக மாடுகளை விற்று வாங்கும் வழக்கமான பரிமாற்ற நடைமுறையில் ஏற்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற (வாரம்தோறும் சனிக்கிழமை கூடும்) செண்பகராயநல்லூர் கால்நடைச் சந்தை கடந்த சில வாரங்களாக முடக்கமடைந்துள்ளது. கால்நடைகளை விற்று வாங்க முடியவில்லை.
அண்மையில் இங்கு வாங்கப்பட்ட மாடுகள் வேறு சந்தைகளில் விற்பனை செய்ய வாகனங்களில் ஏற்றிச் சென்றபோது,திருத்துறைப்பூண்டியில் ஒரு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தற்போது சந்தை முடக்கமடைந்துள்ளது.
இதுகுறித்து செண்பகராயநல்லூர் கால்நடைச் சந்தையின் குத்தகைதாரர் எஸ். ராகவன்: நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படும் மாவட்டத்தின் ஒரே கால்நடைச் சந்தை இது. இங்கு, சனிக்கிழமைதோறும் மதுரை, தஞ்சாவூர் என வெளி மாவட்ட வியாபாரிகள் வருவார்கள்.
கால்நடைச் சந்தையில் கறவை மாடுகள், உழவு, வண்டி மாடுகள், எருமைகள் என நூற்றுக்கணக்கில் வாங்குவதும், விற்பதும் நடைபெறும். புதிய கட்டுப்பாடுகளுக்கு பயந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க மறுக்கிறார்கள். இதனால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டு, திரும்ப கொண்டு செல்வதால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம்: மாடுகளை விற்று வாங்குவதுதான் பாரம்பரியமாக செய்யப்படுகிறது. குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்த காளைமாடுகள் உழவுக்கும், வண்டிக்கும் பயன்படுத்த விற்கப்படும். கிடேரிகளை வளர்ப்புக்காக வாங்குவார்கள். குடும்ப செலவுக்கும், அவசர தேவைக்காகவும் மாடுகளை சந்தையில் விற்பது வழக்கம்.
மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்திவிடும். நாகை மாவட்ட மானாவாரி பகுதியில் கால்நடை வளர்ப்புதான் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இதற்கும் ஆபத்து என்றால் இதை அனுமதிக்க முடியாது. இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
மாற்று வழி என்ன?:
தீவனத் தட்டுப்பாடு, சந்தை வாய்ப்புகள் குறைவாக உள்ள காலங்களில் மாடுகளின் மீது அதன் உரிமையாளரின் (சுருக்கு) பெயர் (சூடுபோட்டு) எழுதி கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி காடுகளில் விட்டுவிடுவதும், குறிப்பிட்ட காலங்கள் கழித்து ஓட்டி வரும் வழக்கம் இருந்து வந்தது.
ஆனால், அங்கும் தண்ணீர், தீவனம் இல்லாததால் மாடுகள் இறந்துவிடும் நிலையுள்ளதால், பராமரிக்க முடியாத மாடுகளை வேறு வழியில்லாமல் சந்தைப்படுத்தி வந்தனர். இந்த நிலையில்தான், மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது நிலவும் தீவனம், தண்ணீர் தட்டுப்பாடுகளால் தொடர்ந்து பராமரிக்க முடியாத மாடுகளை விற்பனை செய்ய கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே கால்நடை
வளர்ப்போரின் வலியுறுத்தலாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...