வெண்ணாற்றின் குறுக்கே பேருந்து போக்குவரத்து பாலம் அமைக்கப்படுமா?
பழைய நீடாமங்கலம் -வையகளத்தூர் மேம்பாலத்தை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பேருந்து போக்குவரத்துக்கான பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


பழைய நீடாமங்கலம் -வையகளத்தூர் மேம்பாலத்தை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பேருந்து போக்குவரத்துக்கான பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீடாமங்கலம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் வையகளத்தூர் கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக கொரடாச்சேரி , திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் வரை பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்கின்றன.
வையகளத்தூர் ரயில்வே கேட், பழைய நீடாமங்கலம் -வையகளத்தூர் கிராமத்தின் இடையில் ரயில்வே இருப்புப் பாதையையொட்டி செல்கிறது.
இதனால் வையகளத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள ஒளிமதி, கப்பலுடையான், அரவூர், அரவத்தூர், அரசமங்கலம், வாடாமங்கலம் , மாணிக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் ரயில்வே பாலத்தை கடந்துதான் நீடாமங்கலம், மன்னார்குடி, பூண்டி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டியுள்ளது.
நெடுஞ்சாலை வழியாக நீடாமங்கலம் வந்து செல்வதைக் காட்டிலும், ரயில்வே பாலத்தை கடந்து செல்வது எளிது என்பதால் ரயில்வே இருப்புப் பாதை பாலத்தை கடப்பதை நீண்ட காலமாக வையகளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்கள் பழக்கத்தில் கொண்டுள்ளனர். இதனால் இப்பாலத்தை கடக்கும் பொதுமக்கள் விபத்தை சந்திக்கும் அபாயம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பழைய நீடாமங்கலம் கிராமத்தையும், வையகளத்தூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே, ரயில்வே தண்டவாளத்தின் ஆற்றுப்பாலம் அருகில் பேருந்து போக்குவரத்துக்கான பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் மேம்பாலம் அமைக்கும் மத்திய அரசின் திட்டப்படி வையகளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்நிலையில் பழைய நீடாமங்கலம் கிராமத்தையும் வையகளத்தூர் மேம்பால பகுதியையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் ஒன்றை கட்டினால் வையகளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்து நீடாமங்கலம் வந்து செல்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதியினர்.
இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான வையகளத்தூர் பி.கந்தசாமி கூறியது:
வையகளத்தூர், அரவூர், அரவத்தூர், அரசமங்கலம், மாணிக்கமங்கலம், வாடாமங்கலம் போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வையகளத்தூர் ரயில்வே தண்டவாள பாலம் வழியாக குறுக்கு வழியில் சைக்கிளிலும், நடந்தும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பழைய நீடாமங்கலத்தையும், வையகளத்தூரையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் கட்ட கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...