ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாகை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

கோடைகால விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையொட்டி, நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

சி.ராஜசேகரன்

கோடைகால விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையொட்டி, நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நாகை தடத்திலான ரயில் போக்குவரத்து, 1861 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. முதல் முதலாக நாகை -திருவாரூர் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் தஞ்சை, திருச்சி என தடங்கள் விரிவுப்படுத்தப்பட்டன. 2009 முதல் நாகை- திருவாரூர் தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டை கடந்த ரயில் நிலையம் என்ற பெருமைப் பெற்ற நாகை ரயில் நிலையம்,உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவது ரயில் பயணிகளுக்குப் பெரும் மனஉளைச்சலை அளிக்கிறது.
வேளாங்கண்ணி, நாகூர், வேதாரண்யம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்பவர்கள், நாகை ரயில் நிலையம் வந்த பிறகே அப்பகுதிகளுக்கு செல்ல முடியும். வேளாங்கண்ணி திருவிழா, நாகூர் கந்தூரி விழா மற்றும் கோடை கால சுற்றுலா வருவோர் நாகை ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம்.
ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ரயில் நிலையத்தில் வசதிகள் எதுவும் இல்லை என ரயில் பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
வெளிமாநில மக்களின் வசதிக்கென மும்பையிலிருந்து திங்கள்கிழமைகளில் லோக்மான்ய திலக் விரைவு ரயிலும், செவ்வாய்க்கிழமைகளில் வாஸ்கோடகாமா விரைவு ரயிலும், தினசரி எர்ணாகுளம் விரைவு ரயிலும் நாகை வழியாக செல்கின்றன. இவை தவிர, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கும் விரைவு ரயில்கள் சென்று வருகின்றன.
வெளிமாநிலத்திலிருந்து நாகைக்கு வருகை தரும் மக்களுக்கு மொழி ஒரு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. நாகை ரயில் நிலையத்தில் உள்ள மக்கள் சேவை மையம் பெரும்பாலான நேரங்களில் செயல்பாடற்ற நிலையில் இருப்பதும், எந்த ரயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை வெளிப்படுத்தும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் இல்லாததும் மிக முக்கிய காரணங்களாக உள்ளன.
இது, வெளிமாநில பயணிகளுக்கு மட்டுமல்லாமல் முன்பதிவுடன், தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளும் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது. உதாரணமாக, கம்பன் விரைவு ரயில், 2 ஆவது நடைமேடையிலிருந்து தினசரி சென்னைக்கு இயக்கப்படுகிறது. ஆனால் எந்த இடத்தில் எந்த பெட்டி நிற்கும் என்ற பெட்டி அறிவிப்புப் பலகை இல்லை. இதற்கு பதிலாக நடைமேடை தரையில் பெட்டிகள் நிற்கும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் நடைமேடையின் தொடக்கம் முதல் கடைசி வரை தேடிச் செல்ல வேண்டியுள்ளது.
ரயில் நிலையத்தில் சுமார் 10 குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அதில் உள்ள குழாய்கள் அனைத்தும் உடைந்து காணப்படுவதால், பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. கோடை காலத்தில் குடிநீரின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
நிலையத்தில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையின் உள்புறச் சுவர், இடிந்து விழுவதுபோல உள்ளது. ரயில் நிலையத்துக்கு முன்பு உள்ள நுழைவு வாயில் பகுதியில், தரை மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்களுடன் காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கீரக்கொல்லைத் தெரு ரயில்வே கேட் அருகே உள்ள மற்றொரு கழிப்பறை, பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதன் கதவுகள் உடைக்கப்பட்டு, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதாக பயணிகளும், அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுச் செயலர் அரவிந்த்குமார் கூறியது: நாகை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கம்பன் விரைவு ரயில் நின்று செல்லும் நடைமேடையில் ரயில் பெட்டி நிற்கும் தகவல் பலகை அமைக்க வேண்டும்.
கோடைகாலத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளின் நிலையை கருதி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.