நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்காலில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகள்!பொது விநியோக முறைசீராகுமா ?

ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதிய நிலுவை போன்ற பிரச்னையால், காரைக்காலில் உள்ள ஒட்டுமொத்த ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:03 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதிய நிலுவை போன்ற பிரச்னையால், காரைக்காலில் உள்ள ஒட்டுமொத்த ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
உணவு தொடர்பான துறை என்பதால், பிற மாநிலங்களைப்போல புதுவையில் ரேஷன் கடைகள் முறையாக செயல்படும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்களுக்கு நியாய விலையில் உணவுப் பொருள்களை வழங்கவே ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, ரேஷன் கடையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் தரப்பட்டன. காலப்போக்கில் இலவச அரிசி வழங்கலில் அரசு தீவிரம் காட்டத் தொடங்கியதும், மேற்கண்ட பொருள்களின் விநியோகம் படிப்படியாக குறையத் தொடங்கின.
குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோக்கப்படுகின்றன. இக்கடைகள் நியாயவிலைக் கடை கூட்டுறவு சங்கம், பாப்ஸ்கோ மற்றும் தனியார் மூலம் நிர்வகிக்கப்டுகின்றன.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் நியாயவிலைக் கடை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் 71 கடைகளும், பாப்ஸ்கோ நிறுவனத்தின் சார்பில் 10 கடைகளும், தனியார் மூலம் 10 கடைகளும் நிர்வகிக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரேஷன் கடையில் இலவச அரிசி மற்றும் பண்டிகை காலத்தில் தரப்படும் இலவசப் பொருள்கள் தவிர வேறு எந்த உணவுப் பொருளும், எரிபொருளும் தரப்படுவதில்லை.
மண்ணெண்ணெய் இல்லாத பிரதேசமாக உருவாக்கும் வகையில் இலவச, மானிய விலை எரிவாயு உருளை, அடுப்பு வழங்கும் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுவதால், மண்ணெண்ணெய் விநியோகம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது.
குறைந்த விலை அரிசி அல்லது கோதுமை, சர்க்கரை வழங்கலும் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. அண்டை மாநிலமான தமிழகத்தில் அரிசி அல்லது கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் ரேஷன் கடையின் செயலாக்கம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுவிட்டது.
மாநிலத்தில் இலவச அரிசி வழங்கல் திட்டம் முட்டுக்கடை போடுவதும், ஆட்சியாளர்கள் தலையிட்டு தடையை அகற்றி அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதுமாக இருப்பதால், அரிசியும் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதில்லை. காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. மஞ்சள் நிற, சிவப்பு நிற அட்டை என வருமானத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
ரேஷன் அட்டைகளும் மக்களுக்கு வழங்கி 10 ஆண்டுகளாகிவிட்டன. புதிதாக ரேஷன் அட்டை தரப்படவில்லை. ஸ்மார்ட் அட்டை தரப்படும் என்ற அறிவிப்பு, தகவல் சேகரிப்பு ஆகியவையும் முடங்கிவிட்டன.
இலவச அரிசியை யார் பெற தகுதியுடையோர் என்பதை கண்டறியும் பணியில் அரசு நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வருமான வரி செலுத்துவோரும் இலவச அரிசி பெற்று வந்ததால், அரிசி வழங்கலின் மூலமே இந்தத் துறை நலிவடைந்துவிட்டது எனக் கூறலாம். தற்போது தகுதி கண்டறியும் இந்தப் பணி நிறைவடைந்தால் அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி ரேஷன் கடையின் மூலம் தரப்படும் சூழல் உருவாகும். வேறு எந்தவொரு உணவுப் பொருளும் நியாயவிலையில் கடைகள் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
ஊதிய நிலுவை : ரேஷன் கடையில் வேலை பார்க்கும் நிரந்தர ஊழியர் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் என 150 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 16 மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளதால், ஊழியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு ஓய்ந்துவிட்டனர். பாப்ஸ்கோ நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் கடை ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, போராட்டம் என்பது பல கட்டங்களாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆனால், போராட்டத்தின்போது ஒரு மாத ஊதியம் தரப்பட்டு போராட்டத்தை அடக்கி விடுகின்றனர். குடும்பத்தை நடத்த வருமானம் அறவே இல்லை. இதனால் மாற்றுத் தொழிலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.
பயனற்ற ரேஷன் அட்டை : ரேஷன் பொருள்கள் வாங்கினால் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட ரேஷன் அட்டை தற்போது குடும்ப உறுப்பினர்கள், முகவரி போன்றவற்றை ஆதாரம் தெரிவிக்கும் அட்டையாக மட்டும் பயன்படுகிறது. குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மஞ்சள் அட்டையை சிவப்பு அட்டையாக மாற்றவும், தமிழகத்தில் உள்ள அட்டையை நீக்கி புதிதாக காரைக்காலில் அட்டை தருதல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற அட்டை சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டும் நடைபெறுகின்றன. இதில்கூட இத்துறையில் சில ஊழியர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு சிறப்புப் பணியாக இவற்றை செய்து, பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதான புகார் காரைக்காலில் வலுவாக எழுந்தது. அண்மையில் இத்துறையில் பலரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்ததன் மூலம் புதிதாக சிலர் பணிக்கு வந்துள்ளனர். இதுபோன்ற குறைகளும், அவலங்களும் புரையோடிப் போய்விட்ட துறையாக இத்துறை திகழ்வதால் சீர்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களின் வருமானம் கேள்விக்குறியாகியிருக்கிறது. ரேஷன் கடைகளை நம்பி பொருள்கள் வாங்கிவந்த ஏழைகள் நிலையும் பாதித்துள்ளன.
நாட்டில் பெரிய மாநிலங்களிலேயே ரேஷன் செயல்பாடுகள் செம்மையாக செய்யப்படும்போது, புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் இந்தத் துறைக்கென அமைச்சர், செயலர், இயக்குநர் என துறையின் கட்டமைப்புகள் வலுவாக இருந்தும், மக்களுக்கு பயனில்லாமல் போய்விட்டது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நியாயவிலைக் கடை கூட்டுறவு ஊழியர் சங்க துணைத் தலைவர் ரகமத் பாட்ஷா திங்கள்கிழமை கூறியது : ஊதியம் பல மாதங்களாக நிலுவை இருக்கிறது. ரேஷன் கடையில் இலவச அரிசி மட்டுமே அவ்வப்போது தரப்படுகிறது. எந்தவொரு பொருளும் விநியோகம் இல்லை. இதனால் கடையை மூடிவைத்துள்ளனர். போராடியும் பயனில்லை. அரசு இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர், முதல்வர், துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் ஏ.எம்.எஸ். இஸ்மாயில் கூறியது : ரேஷன் கடைகள் என்ற அமைப்பே புதுவையில் சீர்குலைந்துவிட்டது. ஏரி, குளம் போன்றவற்றை ஆய்வு செய்யும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மக்களுக்கான முக்கிய துறையின் அவலத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வேதனை தருகிறது. ஆளுநர் - முதல்வர் மோதல் போக்குகள் வலுத்து வருவதே மாநிலத்தில் பெரும் செய்தியாக இருக்கிறது. ஆட்சியாளர்கள் இதனால் இந்தத் துறையின் நிலையை உயர்த்த முன்வருவதில்லை. நாட்டிலேயே முன்மாதிரியாக, மக்களின் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் நியாயவிலைக் கடையில் புதுவையில் கிடைக்கச் செய்ய, ஆட்சியாளர்கள் நினைத்தால் முடியும். ஆனால், இவ்வளவு அவலத்தையும் அறிந்துகொண்டு ஏன் மௌனமாக ஆளுநரும், ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மௌனம் காப்பது வேதனையை அதிகரித்துள்ளது என்றார்.
மாநிலத்தில் பொது விநியோக முறை இவ்வாறு சீர்கேடு அடைந்துள்ளது ஒட்டுமொத்த மாநில மக்களிடையேயும் குறிப்பாக ஏழைகள், ஆதரவற்றோர், முதியோரிடையே கவலையை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.