பொன் விழா ஆண்டில் திருமலைராயன்பட்டினம் ஐ.டி.ஐ. நவீன வசதிகளுடன் மேம்படுத்துமா புதுச்சேரி அரசு ?
காரைக்கால் பகுதி திருமலைராயன்பட்டினத்தில் 1968-இல் தொடங்கப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையம், பொன் விழா ஆண்டில் தற்போது நிற்கிறது.


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
காரைக்கால் பகுதி திருமலைராயன்பட்டினத்தில் 1968-இல் தொடங்கப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையம், பொன் விழா ஆண்டில் தற்போது நிற்கிறது. மாணவர்களை ஈர்க்கும் வகையிலும், ஆசிரியர் பங்களிப்பு நிலைத்தன்மையுடன் இருக்கும் வகையிலும், நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிலையிலும், நவீன வசதிகளை உள்ளடக்கும் விதத்தில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
புதுச்சேரி அரசின், தொழிலாளர் துறையின்கீழ் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஆண், பெண் இருபாலருக்கென தனித்தனி தொழிற் பயிற்சி நிலையம் உள்ளது.
ஆண்கள் தொழிற் பயிற்சி நிலையம் 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஒயர்மேன், மேஸன், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரீஷியன், ஃபிரிட்ஜ்- ஏசி மெக்கானிக் உள்ளிட்ட 15 வகையான பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு கல்விக் காலத்தில் உள்ளது. மாணவர்கள் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் காலத்தில் மாணவர்கள் சுமார் 750 பேர் பயின்றனர். நிலைய முதல்வர் முதல் பயிற்றுநர், மாணவர்கள் என அனைவரும் தொழில் நேர்த்தி, கல்வி பயில்வதில் நேர்த்தியுடன் இருந்த காரணங்களாலும், இந்திய அளவிலும், உலகின் பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, ஐ.டி.ஐ. மாணவர்கள் அந்த வேலைகளில் சேர்ந்தனர். இந்த பெருமை புதுச்சேரி மாநிலத்தில் திருமலைராயன்பட்டினம் ஐ.டி.ஐ.க்கு மட்டுமே ஏற்பட்டதை காரைக்கால் மக்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
இந்த ஐ.டி.ஐ.யில் படித்து பல்வேறு நாடுகள், உள்நாட்டில் பல நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்தோர் நிலையைப் பார்த்து, இந்த ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிலவேண்டும் என்ற மனோபாவம் காரைக்கால் மாணவர்கள் பலருக்கு ஏற்பட்டதை மறுக்க முடியாது. தேசிய அளவிலான போட்டியில் இந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் சிறந்த பரிசுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த ஐ.டி.ஐ. 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடங்களோடு இன்னும் இயங்கிவருகிறது. மத்திய அரசின் நிதியுதவியில் ஒரு கட்டடம் மட்டுமே இங்கு கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த மேம்பாடும் தொடர் ஆண்டுகளில் புதுச்சேரி அரசால் செய்யப்படவில்லை.
இவ்வகையில் புகழுடன் வளர்ந்துவந்த இந்த ஐ.டி.ஐ. தற்போது பொன் விழா ஆண்டில் பார்க்கும்போது, மிகவும் நலிந்த நிலையில் இருப்பது சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்ளிட்டோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த ஐ.டி.ஐ.யில் 550 மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறுகின்றனர். ஷிப்டு முறையில் ஒவ்வொரு பிரிவிலும் 16 மாணவர்கள், 21 மாணவர்கள் என பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் பயிற்சி பெறுவதற்கான இயந்திரங்கள் பழைமையானவை. பயிற்சிக் கூடம் யாவும் இயந்திரங்கள் செயல்படும் நிலையில், போதுமான காற்றோட்ட வசதிகள் இல்லாத அமைப்பே உள்ளது. மின் விசிறிகள் பல பழுதாகியிருக்கின்றன. தொழிற்சாலைகளுக்கான விதிகளை மீறி பல இடங்கள் அடைக்கப்பட்டு நெருக்கடி காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பயிற்சிக்கு சேர்ந்தும், தொடர்ந்து நிலையத்திற்கு செல்லாமல் இடை நிற்றல் ஏற்பட்டுவிடுவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் இடை நிற்றலுக்கு உள்கட்டமைப்பு, சுகாதாரமற்ற சூழலே காரணம் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மெஷினிஸ்ட் பிரிவுக்கு மத்திய அரசு நிதி ரூ.90 லட்சத்தில் இயந்திரம் மாணவர்கள் பயிற்சிக்காக வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இயந்திரத்தை மாணவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்தியது இல்லை என கூறப்படுகிறது. இந்த பிரிவு, ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் பாதுகாப்புமிடமாக மாறியிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நிலையத்தில் டர்னர், மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதனை புதுச்சேரிக்கு மாற்றிவிடும் நோக்கில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டுவிட்டதாக புகார் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஒவ்வொரு பிரிவும் மறைமுகமாக அகற்றப்பட்டுவிட்டால், நிலையம் நிரந்தரமாக அடுத்த சில ஆண்டுகளில் மூடிவிடும் நிலைக்கு வந்துவிடும் என கூறுகின்றனர்.
நிலையத்தில் ஆசிரியர்கள் 30 பேர் பணியாற்றினாலும் முதல்வர் மற்றும் 10 ஆசிரியர் வரை புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். புதுச்சேரியிலிருந்து வருவோர், பணி நாள்களில் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை. சில நாள்கள் மட்டும் பணியாற்றுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் வருகை குறித்தோ, இயந்திரங்களைப் பயன்படுத்தி பயிற்சி தராமலிருப்பது குறித்தோ கேள்வி எழுப்ப முடியவில்லை. வருகைப் பதிவேட்டில் மாணவர் வரவில்லையென பதிவு செய்ய வாய்ப்புண்டு என மாணவர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவையெல்லாம் நிர்வாகம் தரப்பிலான குறைகளாக கூறப்பட்டாலும், மாணவர்களில் பலரும் நிலையத்திற்கு நேரத்திற்கு வருவதில்லை. நிலையத்தின் பயிற்சியை நேர்த்தியாக பெறுவதில்லை உள்ளிட்ட குறைபாடுகளும் கூறப்படுகின்றன.
ஏறக்குறைய ரூ.5 முதல் ரூ.8 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் இந்த நிலையத்தில் உள்ளன. இவைகளைக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். மாணவர்கள் தேவையை கருத்தில்கொண்டோ, மாணவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டோ நிலைய மேம்பாட்டு செயல்பாடுகளில் யாரும் கவனம் செலுத்தவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
மத்திய அரசின் நிதியுதவியில், நிலைய வளாகத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு, அதில் மெஷினிஸ்ட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். இந்த பயிற்சி நோக்கிற்காகவே இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு செய்யாமல், நிலையத்தின் பொருள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்களில் பெரும்பான்மையினர், மாணவர்களில் பெரும்பான்மையினரிடையே ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகள் இந்த நிலையத்தில் இல்லாததால், பொன் விழா ஆண்டில் மிளிரும் வகையில் இருக்கவேண்டிய ஐ.டி.ஐ., நலிவடைந்திருக்கும் காட்சியைக் காணமுடிகிறது.
நிலையத்தில் கட்டுப்பாடுகள், விதிகளின்படி செயல்படுதல் போன்றவை மறைந்துவிட்டன. தொழிலாளர் துறைக்கும் காரைக்காலில் வலுவான அலுவலர் இல்லை.
மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு ஆட்சியரும் இந்த நிலையம் பக்கமே செல்வதில்லை. நிலையம் புதுச்சேரி தலைமையகத்தின் பார்வையில் இருப்பதால், இதன் செயல்பாடுகள் குறித்து அறிய யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்பாரற்ற போக்கிலேயே இந்த நிலையம் சென்றுகொண்டிருக்கிறது. இவையெல்லாம் இந்த நிலையத்தை நம்பி சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, வரும் காலத்தில் பள்ளிக் கல்வியை முடித்து நிலையத்தில் கட்டணமின்றி தொழிற் பயிற்சி எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கிறது.
நிலைய அலுவலர்கள் தரப்பில் இதுகுறித்து கூறும்போது, வருகைப் பதிவுக்கு பயோ மெட்ரிக் முறை இங்கு உள்ளது. இயந்திரங்கள் பயிற்றுநர்கள் பார்வையில் கவனமாக இயக்கப்படுகிறது. சில பிரிவுகளைப் படிப்போருக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பு கிடைக்காததால், மாணவர்கள் சில பிரிவுகளுக்கு சேர வருவதில்லை. ஆசிரியர்கள் செய்யவேண்டிய கடமையை, அவரவர் நேரத்தில் சரியாக செய்துவிடுகின்றனர் என்றனர்.
நிலைய முதல்வர் பி.முருகையன் கூறும்போது, நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த டர்னர், மெஷினிஸ்ட் பிரிவுகள் நிகழாண்டு சேர்க்கை குறிப்பேட்டில் இடம்பெறவில்லை. இவற்றில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளில் மிக குறைவாக இருந்தது. இதற்காக தனி குழு நேரில் வந்து ஆய்வு செய்து, இதனை நிகழாண்டு நிறுத்திவைக்க முடிவு செய்தனர். ஆனால், இந்த பிரிவுகள் வேண்டும் என பலரும் கோரிக்கை வைக்கும் நிலையில், மாணவர் சேர்க்கையை நிகழாண்டு இப்பிரிவுகளுக்கு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதுகுறித்த விவரம் தகவல் பலகையில் தெரிவிக்கப்படும். நிலையத்தில் இதுதொடர்பான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதுதாக கேட்டரிங் போன்ற பிரிவுகள் தொடங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
பாலிடெக்னிக் கல்லூரி என்பது உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. மாணவர் சேர்க்கை அதிகரிக்கவேண்டும், பாலிடெக்னிக் கல்வித்தரம் மேம்படவேண்டும், வேலைவாய்ப்புகளை கல்லூரி நிர்வாகம் உருவாக்கவேண்டும் என பொதுவாக வலியுறுத்தல் இருந்துவருகிறது.
இதோடு, ஐ.டி.ஐ.யின் நிலையும் சேர்ந்திருப்பது சமூக ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. திருமலைராயன்பட்டினம் நிலையம் ஏறக்குறைய 75 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் சிறந்த ஐ.டி.ஐ. என பெயர் பெற்ற இது மிகவும் நலிந்த நிலையில் காணப்படுவதை களைய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு பாராமுகமாக இருக்கும்பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளில் இந்த ஐ.டி.ஐ. மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்த ஐ.டி.ஐ.யை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். அவர் நேரில் வந்து இதனை ஆய்வு செய்யவேண்டும். முதல்வரும், நலத்துறை அமைச்சரும் தனியாக இங்கு ஆய்வு செய்யவேண்டும். தகுதியான, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை இங்கு நியமிக்கவேண்டும். சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நிலையத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி முடித்த மாணவர்களுக்கு நேரடியாக தொழிற் பயிற்சி தரும் அற்புத நிலையமாக உள்ள இதனை, இந்த பொன் விழா ஆண்டில் மேம்படுத்தவேண்டும் என்பதே காரைக்காலில் உள்ள பெரும்பான்மையினர் விருப்பமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...