நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் காரைக்கால்

எந்த இடத்திலிருந்தும் கண்காணிப்புக் கேமராக்கள் பதிவை பார்க்கும் செயலி வசதி உதவியுடன் காரைக்காலில் முக்கிய இடங்களை காவல்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:18 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

எந்த இடத்திலிருந்தும் கண்காணிப்புக் கேமராக்கள் பதிவை பார்க்கும் செயலி வசதி உதவியுடன் காரைக்காலில் முக்கிய இடங்களை காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் உள் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவல் நிலையங்கள் உள்ளிட்ட பிற காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வருவோரிடம் காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள், புகார்கள் பதிவு செய்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பதில்லை, தேவையற்ற பேச்சுகளைப் பேசுகிறார்கள், லஞ்சம் கோரப்படுகிறது, மனித உரிமை மீறல் நடக்கிறது, பெண்கள் அதிக நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறது, புகார்தாரர்கள் மதிக்கப்படுவதில்லை போன்ற பல்வேறு புகார்கள் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுவதையொட்டி இந்த நடவடிக்கையை காரைக்கால் காவல்துறை நிர்வாகம் எடுத்தது. 
காரைக்காலில் இதுவரவேற்புக்குரியதாக இருக்கும் சூழலில், ஒவ்வொரு காவல் நிலைய வட்டாரத்தில், முக்கிய இடங்களைத் தேர்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியை காவல்துறை நிர்வாகம் செய்து வருகிறது. முற்றிலும் இது நிறுவன பங்களிப்புடனேயே செய்யப்படுகிறது. காரைக்கால் வடக்கு எல்லையான பூவம் முதல் கோட்டுச்சேரி வரை, தெற்கு எல்லையான வாஞ்சூர் முதல் திருமலைராஜனாறு பாலம் வரை குறிப்பிட்ட இடங்கள், கோயில் பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் காவல் நிலையத்திலோ அல்லது வேறு இடத்திலோ மையம் அமைத்து பதிவுகளைக் கண்காணிக்கும் முறையே இதுவரை அமலில் இருந்தது. இப்போதும் அதுதொடரும் நிலையில், காவல் அதிகாரிகள் தமது செல்லிடப் பேசியின் மூலம் கண்காணிப்புக் கேமராக்களின் பதிவை கண்காணிக்க செயலியை உருவாக்கிக்கொண்டு எந்தவொரு இடத்திலிருந்தும் ஆங்காங்கே உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவை கண்காணிக்கின்றனர். குறிப்பாக காவல் நிலைய அதிகாரி வெளியே இருக்கும் சூழலில், நிலையத்தில் எது நடந்தாலும் அது அதிகாரியால் கண்காணிக்கப்படுகிறது.
திருநள்ளாறுக்கு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்ட கார், வேன், பேருந்துகள் பார்க்கிங் பகுதியிலும், புறவட்டச் சாலையிலும் நிறுத்தப்படுகின்றன. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களில் மர்ம நபர்கள் திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில குற்றங்களை காவல்துறையினர் கண்டுபிடிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.  
திருப்பட்டினத்தில் கோயில் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி நடந்துவருகிறது. பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு இல்லாததால், தொடர் வழிப்பறியில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் பகுதியில் இதுவரை 8 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், சில இடங்களில் அடுத்த சில நாள்களில் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரு படி மேலாக, எங்கிருந்தபடியும் காவல் நிலைய அதிகாரியின் செல்லிடப்பேசி மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பதிவுகளை காணும் வசதியை காரைக்கால் காவல்துறையினர் அமைத்துக்கொண்டுள்ளனர். இதன்மூலம் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பதிவுகளை காணவேண்டிய நிலை இல்லை. தமது ஆன்ட்ராய்டு செல்லிடப் பேசியிலே பதிவுகளை காணும்போது, குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது அந்த பகுதியின் கண்காணிப்பு காவலருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக பிடிக்க முடிகிறது என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் கூறியது: திருநள்ளாறு பகுதியில் பக்தர்கள் நடமாட்டம், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவற்றில் பொருத்தப்பட்டுள்ள 124 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் மேலும் 4 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன என்றனர். 
சமூக ஆர்வலர்களின் கருத்து: குற்றச்செயல்களை கண்காணித்து அதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள காவல் துறையின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும், கண்காணிப்புக் கேமராக்கள் இரவிலும் துல்லியமான பதிவு கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப கேமராவை பயன்படுத்த வேண்டும், பொருத்தப்பட்ட கேமராக்கள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்று அவ்வபோது சோதிக்க வேண்டும். வணிக நிறுவனம் நடத்துவோர் நிறுவனம் நுழைவு வாயில், உள் பகுதிகளில் கேமரா பொருத்த காவல் துறை அறிவுறுத்த வேண்டும் என்றனர். 
திருநள்ளாறில் 130-க்கும் குறைவான கேமராக்களே இருக்கின்றன. இதை 200-ஆக உயர்த்தவேண்டும். தமிழகத்தையொட்டியுள்ள காரைக்கால் எல்லையான வாஞ்சூர், பூவம், அம்பகரத்தூர் பகுதிகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலை, பிற சாலையின் முக்கிய இடங்களில் கேமராக்கள் கூடுதலாக பொருத்தவேண்டும். செல்லிடப்பேசி மூலம் கண்காணிக்கும் காவல் அதிகாரிகள், இதை வேடிக்கை நிகழ்வாக வைத்துக்கொள்ளாமல், அர்த்தமுள்ள வகையில் கண்காணிப்பை செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடுத்த சில விநாடிகளில் பிடிக்கும் வகையில் திறனை மேம்படுத்தவேண்டும். காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல்அல்வால், புதுச்சேரியில் கூடுதல் பொறுப்பை ஏற்று பெரும்பாலான நாள்கள் புதுச்சேரியிலேயே தங்கிவிடுகிறார். காரைக்கால் அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கும் கூடுதல் பொறுப்பிலிருந்து  அரசு அவரை விடுவித்து, காரைக்கால் மீது முழு கவனம் செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும். காரைக்காலில் பல திருட்டு, வழிப்பறி வழக்குகள் முடிவுக்கு வராமல் உள்ளதை அவர் கவனிக்கவேண்டும். மேலும், தீர்வு காணாமல் இருக்கும் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 
காரைக்காலில் மேலும் கேமராக்கள் பொருத்துமிடங்களை  தேர்வு செய்து, அதனை வைப்பதற்கான நிதியாதாரத்தை திரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேமராக்கள் அதிகரிப்பாலும், கண்காணிப்பில் வந்துள்ள நவீனத்துவத்தாலும் குற்றச் செயல்கள் குறையும், குற்றவாளிகளை ஆண்டுக் கணக்கில் தேடிக்கொண்டிருக்க வாய்ப்பிருக்காது. விரைவாக பிடிக்க முடியும். இது காவல்துறைக்கு நற்பெயரைத் தரும், மக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த முடியும். ஒட்டுமொத்த காரைக்கால் முக்கிய இடங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வரும் வகையில், கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதும், அதன் செயல்பாடுகளும் கண்காணிப்பும் மிகவும் முக்கியம் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

"எங்கிருந்தபடியும் காவல் நிலைய அதிகாரியின் செல்லிடப்பேசி மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பதிவுகளை காணும் வசதியை காரைக்கால் காவல்துறையினர் அமைத்துக்கொண்டுள்ளனர். இதன்மூலம் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பதிவுகளை காணவேண்டிய நிலை இல்லை. தமது ஆன்ட்ராய்டு செல்லிடப் பேசியிலே பதிவுகளை காணும்போது, குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது அந்த பகுதியின் கண்காணிப்பு காவலருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக பிடிக்க முடிகிறது"
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.