நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விளைநிலங்களை தயார்படுத்தும் விவசாயிகள்!

காவிரி நீர் வருவது உறுதியாகியிருக்கும் நிலையில், காரைக்கால் பகுதியில் பரவலாக விவசாயம் செய்வதற்காக நிலத்தை உழவு

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:15 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காவிரி நீர் வருவது உறுதியாகியிருக்கும் நிலையில், காரைக்கால் பகுதியில் பரவலாக விவசாயம் செய்வதற்காக நிலத்தை உழவு செய்து தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளுக்குத் தேவையான ஆதரவைத் தருவதற்கு வேளாண் துறை தயாராகி வருவதாக வேளாண் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர், புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி, பேட்டை, விழுதியூர், நிரவி, படுதார்கொல்லை ஆகிய பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரத்திலும்  விவசாயம் நடைபெறக்கூடியதாக இருக்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் நிகழாண்டு குறுவை நெற்பயிர் செய்யப்பட்டு வருகிறது. 
மேட்டூர் அணை ஜூன் மாத வாக்கில் திறக்கப்பட்டால் நேரடியாக சம்பா பருவத்தில் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கிவிடுவர். தண்ணீர் வரத்து உறுதியாகவில்லையெனில், கோடை மழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுவர்.
நிகழாண்டு கர்நாடகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இரு அணைகள் நிரம்பியதாலும், நீர்வரத்து அதிகரிப்பாலும் நொடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி மேட்டூர் அணை 90 அடியை கடந்துள்ளது. இது கடல் பகுதியையொட்டியுள்ள கடைமடைப் பகுதியான காரைக்கால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில்கூட மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், காரைக்கால் எல்லையை ஒரு நாள் மட்டுமே வந்து பின்னர் நின்றுவிட்டது. போதிய நீர் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், கடைமடையான காரைக்கால் வரை அதிக வேகத்துடன் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த  வகையில் திருநள்ளாறு அருகேயுள்ள செல்லூர், சேத்தூர், பேட்டை உள்ளிட்ட  பரவலாக காரைக்கால்  பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில்  உழவு செய்து வேளாண் பணிக்குத் தயாராகி வருகிறார்கள்.
இதுகுறித்து திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர். ராமநாதன் செவ்வாய்க்கிழமை கூறியது :
நிகழாண்டு மேட்டூர் அணை 100 அடியைக் கடந்து இருப்பு இருப்பதும், ஜூலை 19 -ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதும் கடைமடைப் பகுதியான காரைக்கால் விவசாயிகளுக்கு இதமான செய்தியாகும்.
இதற்கேற்ப விளைநிலத்தை தயார் செய்துவருகிறோம். சில இடங்களில் உழவு முடித்து தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆறு, வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதன்மூலமே விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். 
இல்லையெனில், தண்ணீர் பயனற்றுப்போகும் என அரசுக்கு வலியுறுத்தி வந்தோம். ஒரு மாதத்துக்கு முன்பே தூர்வாரும் பணியை செய்திருக்க வேண்டும். ஆனால், ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஓரிரு நாள்களில்  காரைக்காலில் தூர்வாரும் பணிகள் தொடங்கும் என வேளாண் அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவைப் பொருத்து, காரைக்காலுக்கு எத்தனை நாள்களில் தண்ணீர் வந்துசேரும் என்பதை கூற முடியும். ஆனால், தண்ணீர் அதிகமாக வெளியேற்றினால் ஒரு வாரத்துக்குள் காரைக்காலுக்கு தண்ணீர் வந்துவிடும்.
அப்போது வாய்க்கால், ஆறுகளை தூர்வாரிக்கொண்டிருக்க முடியாது. எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் இரவு, பகல் பணியாக முக்கியமான வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களைத் தேர்வு செய்து செய்யவேண்டும் என்ற அவர், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி மாதம் 18 -ஆம் தேதி ஆடிப்பெருக்கை, காவிரி நீர் வரும் ஆறு, வாய்க்காலில் கொண்டாடும் வாய்ப்பு நிகழாண்டு கிடைக்க வாய்ப்பிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 
காரைக்கால் வேளாண் துறை கூடுதல் இயக்குநர் க. மதியழகன் கூறும்போது,  காரைக்காலில் குறுவை சாகுபடி ஒருபுறம் நடந்து வருகிறது. இந்த அறுவடை செய்யப்பட்ட பின்னர் தாளடி விதைப்பார்கள். தற்போது மேட்டூர் அணை திறப்பு உறுதியாகிவிட்ட நிலையில், சம்பா பருவம் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும்.
காரைக்காலில் ஏறக்குறைய 3,500 ஹெக்டேரில் சம்பா பயிர் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் ஒருபுறம் தண்ணீரை எதிர்பார்த்து தயாராகி வருகிறார்கள். விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனை, இடுபொருள் உள்ளிட்டவற்றை தருவதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறையும் செய்து வருகிறது. 135 முதல் 150 நாள்கள் வரையிலான நெல் ரகங்களை விவசாயிகளை விதைப்பார்கள்.
மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் அடிப்படையில், உரம் வாங்கும் விவசாயிகள் ஆன்-லைன் ஆதார் முறையில் வாங்க வேண்டும். இதற்கான வகையில் உர விற்பனையாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அரசும், விவசாயிகளும், வேளாண் துறையும் சம்பா சாகுபடிக்கான பணிகளை ஆர்வத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.