நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகள்: ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வாரா ? 

காரைக்கால் நகரப் பகுதியில் கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தியும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக இருந்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:11 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் நகரப் பகுதியில் கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தியும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக இருந்து வரும் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
தூய்மை இந்தியா திட்ட நிதியில் காரைக்கால் நகராட்சி நிர்வாகம் ஆட்சியரகம் அருகே உள்ள காமராஜர் திடலில் இருபாலருக்கான நவீன கழிப்பறை வளாகம் கட்டியது. மேலும், கடற்கரை சாலை மற்றும் நகராட்சி சந்தைத் திடல் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட கழிப்பறைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காமராஜர் திடலில் திறக்கப்பட்ட இருபாலருக்கான கழிப்பறை மட்டும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
ஆட்சியர் அலுவலகம், சார்பு ஆட்சியர் அலுவலகம், வருவாய்த் துறை, கணக்கு மற்றும் கரூவூலத் துறை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை உள்ள பகுதியின் 100 மீட்டருக்குள் இந்த கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். 
குறிப்பாக கழிப்பறை வளாகம் பயன்பாட்டுக்கு வராததால் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். காமராஜர் திடல் மற்றும் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் அருகே டூப்ளக்ஸ் சாலையோரத்தை ஆண்கள் கழிப்புக்காக பயன்படுத்துகின்றனர். இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
வழிபாட்டுத் தலம் அருகே 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசுவதை தடுக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டு, கழிப்பறை வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் பொதுமக்கள் அங்குமிங்கும் அலைய நேரிடுகிறது. 
இதேபோல், ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட, பழைய காய்கறி மார்க்கெட் வீதியில் உள்ள கழிப்பறையும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இக்கட்டடம் திறக்கப்படும்போதே, வருவாய் இல்லாமல் இருக்கும் சுய உதவிக் குழுவினரை நியமித்து, பராமரிப்புப் பணி செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும், காவலர் நாள்தோறும் இதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே. சந்திரன் கூறினார். அவரும் பதவி உயர்வு பெற்று புதுச்சேரிக்கு சென்று  பல மாதங்களாகிவிட்டது. அவரது எண்ணம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. வணிக நிறுவனங்கள் உள்ள பகுதி என்பதால், நிறுவனங்கள் பலவற்றில் கழிப்பறை உள்ளது. வணிகம் செய்ய செல்வோரும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் உள்ளிட்டோர், சுற்றுலா வருவோருக்கு இந்த கழிப்பறை நாகரிகமாக பராமரிக்கப்பட்டால் பெரும் பயன்கிடைக்கும். அதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தாலோ, நகராட்சி நிர்வாகத்தாலோ எடுக்கவில்லை.
இதுகுறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியது: இக்கழிப்பறைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஒப்படைக்கப்பட்டது. சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கூறுவதால் அதை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றார். 
தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் நகரப் பகுதி திறந்தவெளி கழிப்பு இல்லாத பகுதி என நகராட்சியால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இதுபோன்ற கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டதை உறுதி செய்தே அவ்வாறான அறிவிப்பு செய்தது. பொது கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வராமல், சாலையோரத்தை கழிப்புக்காக பயன்படுத்துவது தொடர்வதால், நகராட்சி செய்த  அறிவிப்பை திரும்பப்பெறவேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு திறக்கப்பட்ட கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், மேலும் சில பகுதிகளை தேர்வு செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் கூடுதல் கழிப்பறைகள் கட்டி முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.