நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் கார்னிவல் திருவிழா: நிகழாண்டுநடத்துமா புதுச்சேரி அரசு ?

காரைக்காலில் ஆண்டுதோறும் சுற்றுலாவினரை ஈர்க்கும் விதமாக 4 நாள்கள் நடைபெற்று வந்த கார்னிவல் திருவிழா 2 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:54 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் ஆண்டுதோறும் சுற்றுலாவினரை ஈர்க்கும் விதமாக 4 நாள்கள் நடைபெற்று வந்த கார்னிவல் திருவிழா 2 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலாத்துறையின் நோக்கம் நிறைவேறாமல் போவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நிகழாண்டு பள்ளிகள் தேர்வு காலம் முடிந்து,  விடுமுறை காலத்தில் கார்னிவல் திருவிழா நடத்தும் வகையில் புதுச்சேரி அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
மத்திய அரசின்  சுற்றுலாத்துறை, ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுலாவினரை திருப்திப்படுத்தும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்த, திருவிழாக்கள் கொண்டாட பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்கிறது.
குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசம், பிரெஞ்சு கலாசார பின்னணி கொண்டிருப்பதும், யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்கள் கடற்கரை அமைப்பு கொண்டிருப்பதாலும், புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, மைய அரசு புதுச்சேரி மாநில அரசுக்கு சுற்றுலாத்துறை நிதியை தாராளமாக வழங்கி வருகிறது.
காரைக்காலில் மத்திய சுற்றுலாத்துறை நிதியின்கீழ் பல்வேறு கட்டுமானங்களை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்த வகையில் புதுச்சேரி அரசு கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்தியத்தின் பெயரில் கார்னிவல் திருவிழாவை, ஒவ்வோர் ஆண்டும் 4 நாள்கள் நடத்தி வருகிறது. இதன்மூலம் அந்தந்த பிராந்தியத்தின் கலாசார, பண்பாடு வெளிப்படுத்துதல், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் தனித்துவத்தை வெளிப்படுத்துதல், பண்டைய கால மக்களின் வாழ்க்கை நிலையை கலைநிகழ்ச்சியாக வெளிப்படுத்துதல், திறன் மேம்பாட்டுப் போட்டிகள், வான் சாகசம், தண்ணீரில் சாகசம், சாலையோர கலைநிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம், மாட்டுவண்டி போட்டிகள், படகுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளடக்கி இது நடத்தப்படுகிறது.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்டத்திலிருந்து இளைஞர்கள், மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
காரைக்காலை பொருத்தவரை இந்த நிகழ்ச்சி ஜனவரி மாதம் பொங்கல் தினத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 நாள்கள் நடத்திவருவது வழக்கத்தில் இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான நிதியை பெரும்பான்மையாக மத்திய சுற்றுலாத்துறை வழங்கும். மாநில சுற்றுலாத்துறை ஒரு சிறிய பங்கும், பெரு நிறுவன நன்கொடைகள் மூலம் காரைக்கால் கார்னிவல் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2015 -ஆம் ஆண்டில்தான் இந்த விழா ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு அப்போதே ரூ. 50 லட்சம் அரசு நிதியாகவும், ரூ. 10 லட்சம் நன்கொடையாகவும் மொத்தம் ரூ. 60 லட்சம் செலவிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒரு பிராந்தியத்தில் நடத்துவதன் மூலம் அந்த பிராந்திய மக்களின் இயல்பான பழக்க வழக்கங்கள், பழங்கால செயல்பாடுகளைப் பிற பகுதியினர் அறிந்துகொள்ளவும், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் மூலம் பிற மாவட்டத்தினர் வருகையை அதிகரிக்கவும், மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள், உயர்கல்விக்கூடம் உள்ளிட்ட பிற மாவட்டத்தினர் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வசதிகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலேயே நடத்தப்பட்டு வந்தது.
வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளோடு மட்டும் கார்னிவல் இல்லாமல், பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் காரைக்கால் கார்னிவல் நடத்தப்பட்டுவந்தது.
கார்னிவல் நடத்தப்படும்போது, உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு, கார்னிவல் நடத்தும் மைதானத்தில் மத்திய, மாநில அரசுத் திட்டங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையிலான ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தின் மக்களை நான்கு நாள்கள் குதூகலிக்கச் செய்யும் நிகழ்ச்சி என்றால் அது கார்னிவல் திருவிழா மட்டுமே சொல்ல முடியும்.
இந்த வகையான நிகழ்ச்சி 2015 -ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக காரைக்காலில் கார்னிவல் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளவில்லை. புதுச்சேரி பிராந்தியம் மாநிலத்தின் தலைநகர் என்பதால் சுற்றுலாவினரை கவரும் வகையிலான அமைப்புகள் அங்கு ஏராளம் உள்ளதால், இந்த பிராந்தியத்தில் ஏதாவது ஒரு சூழலில் குதூகலமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விடுகின்றன. ஆனால், காரைக்கால் மட்டும் கவனிக்கப்படுவதில்லை என்பது பொதுமக்கள் பலரின் புகார்.
உரிய திட்டங்கள் தயாரித்து, திட்டத்துக்கு ஆகும் செலவு மதிப்பீடு செய்து மத்திய சுற்றுலாத்துறைக்கு மாநில அரசின் ஒப்புதலோடு அனுப்பும்போது, உரிய நிதி காலத்தோடு கிடைத்துவிடும். இந்த வாய்ப்புகளை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 2016 -ஆம் ஆண்டு முற்பகுதியில் பேரவைத் தேர்தல், ஆட்சி அமைந்தது முதல் இதுவரை மாநில அரசு நிதி நெருக்கடியில் தவிப்பு, அறிவிக்கப்பட்ட வேளாண் வறட்சி நிவாரணம் தரமுடியவில்லை, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை, அரசுப் பணியாளர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை. இதுபோன்ற சூழலில், கார்னிவல் அவசியமா என்ற கேள்வி அரசு  தரப்பில் எழுவதாக கூறப்படுகிறது.
பிரச்னைகள் ஒருபுறமிருந்தாலும், பெரும்பான்மையாக மத்திய அரசு தரும் நிதி கார்னிவலுக்கு பயன்படுத்தப்படுவதால், அந்த நிதியை பெற்று, பெரும்பான்மையினர் மகிழும் கார்னிவலை நடத்த அரசு நிர்வாகம் முனைப்புக் காட்ட வேண்டும். பிரச்னைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டு விடும். இதுபோன்ற வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல்போனால், காரைக்காலுக்கு வருமாண்டுகளில் கார்னிவல் என்ற பெயரில் மத்திய நிதி கிடைப்பது சிரமம்  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற துணைத் தலைவர் த. தங்கவேலு கூறியது:
கடந்த 2 ஆண்டுகளாக கார்னிவல் திருவிழா காரைக்காலில் நடத்தப்படவில்லை. காரைக்கால் ஆன்மிக சுற்றுலா பிராந்தியமாக விளங்குகிறது. சுற்றுலாவினரை ஈர்க்க கார்னிவல் ஆண்டுதோறும் பயன்படுகிறது என்பதை அரசு நிர்வாகம் உணரவேண்டும். காரைக்காலில் துறைமுகம், ஜிப்மர், என்.ஐ.டி., வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற உயர்கல்வி நிலையங்களும், ஓஎன்ஜிசி போன்ற பெரு நிறுவனங்களும் உள்ளபோது, வெளி மாநில மாணவர்கள், அதிகாரிகள் இங்கு உள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்தவும், உள்ளூர் மக்கள் குதூகலிக்கவும், வெளியூர் மக்கள் அதிகமானோரை  வரவழைக்கவும் இந்த திருவிழா பயன்படுகிறது. இதன் மூலம் காரைக்காலில் பல்வேறு தொழில்துறையினருக்கு வியாபாரம் பெகும். இதனை நிகழாண்டு நடத்த ஏற்பாடு செய்யும்படி மாவட்ட ஆட்சியரிடம் மன்றம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் (ஓய்வு) தட்சணாமூர்த்தி கூறியது:  காரைக்கால் கார்னிவல் திருவிழா நான் உதவி இயக்குநராக இருக்கும் வரை நடத்தப்பட்டது. பின்னர், என்ன காரணத்தாலோ அது நடத்தப்படவில்லை. எனினும், கார்னிவல் என்பது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விப்பதோடு, சுற்றுலாவினர் வருகையை அதிகரிக்க உதவுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற முடியும். என்னென்ன நிகழ்ச்சிகள் அமைகின்றன, நிகழ்ச்சியின் தரம், இதற்கான செலவு மதிப்பீடுகளை மத்திய சுற்றுலாத்துறை முறையாக ஆய்வு செய்து, கேட்கும் தொகையில் பெருமளவு ஒதுக்கும். இந்த ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் நிகழாண்டு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலத்தில் செய்வதற்கு பணிகளை இப்போதே தொடங்கினால் சாத்தியமாகும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கூறியது:
காரைக்கால் கார்னிவல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிடமிருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கார்னிவல் எவ்வாறு நடத்தப்பட்டது, எந்தெந்த வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் மற்றும் செலவு குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் மார்ச் மாதம் முடியும்போது, விடுமுறை காலத்தில் நடத்துவதற்கான திட்டத்தில் பணிகள் நடைபெறுகின்றன என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.