நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் பாஸ்போர்ட் சேவை மையம்: பிற மாவட்டத்தினர் பயனடைவது எப்போது?

காரைக்காலில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் காரைக்கால் மாவட்டத்தினர் மட்டுமே பயனடையும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:14 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் காரைக்கால் மாவட்டத்தினர் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளதாகவும், நாகை, திருவாரூர் மாவட்டத்தினரும் பயனடையும் வகையில் சேவை விரிவாக்கத்தை விரைவாகச் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
காரைக்காலில் கடந்த ஜன.19-ஆம் தேதி தபால் நிலைய கடவுச் சீட்டு சேவை மையத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்துவைத்தார்.
இந்த விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காரைக்கால் மட்டுமல்லாது, நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தோரும் காரைக்கால் தபால் நிலைய கடவுச் சீட்டு சேவை மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். விழாவில் பேசிய  பாஸ்போர்ட் தலைமை அலுவலர்களும் இதே கருத்தைக் கூறினர்.
அதிகாரபூர்வமாக காரைக்கால் சேவை மையம் 19-ஆம் தேதிக்குப் பின் ஓரிரு நாள்களில் செயல்படத் தொடங்கியது. விழாவில் அறிவிப்பு வெளியானதையொட்டி, காரைக்கால் சுற்றுவட்டார மாவட்டத்தைச் சேர்ந்தோரும் காரைக்கால் சேவை மையத்தை அணுகத் தொடங்கினர். ஆனால், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு மட்டுமே பாஸ்போர்ட் பரிசீலனைகள் மையத்தில் நடைபெறுவதாகவும், பிற மாவட்டத்தைச் சேர்ந்தோர் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை எனவும் திருவாரூர், நாகை மாவட்டத்திலிருந்து வருவோர் தெரிவிக்கின்றனர்.
 50 கி.மீ. சுற்றளவில் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கவேண்டும் என மத்திய அரசு தீர்மானித்து செயல்பட்டுவருகிறது என விழாவில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இதன்படி பார்த்தால்,  நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் காரைக்கால் சேவை மையத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
காரைக்கால் சேவை மையமானது, தபால் நிலையத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தைச்  சேர்ந்த பாஸ்போர்ட் உதவியாளர் என்ற பணி நிலையில் ஒருவர் மட்டுமே உள்ளார். துறைசாரா 2 பேர், பரிசீலனை, புகைப்படம் எடுத்தல், கைரேகை பதிவு செய்துகொள்ளுதல் மற்றும் பொதுமக்களின் விசாரணைகளுக்குப் பதில் அளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 10 முதல் 15 வரை விண்ணப்பப் பரிசீலனை  நடைபெறுகிறது.
இதுகுறித்து காரைக்கால் கடவுச்சீட்டு சேவை மையத்தினர் கூறியது:  சேவை மையம் தொடங்கியது முதல் காரைக்கால் பகுதியினருக்கு மட்டுமே சேவை செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர், காரைக்கால் மையத்திற்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரவேண்டும். இங்கு அனைத்துப் பரிசீலனைகளும் செய்யப்பட்டு சென்னைக்கு ஆவணங்கள் அனுப்பிவைக்கப்படும்.  ஒரு மாதத்தில் தபால் மூலம் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்டவருக்கு  சென்றுவிடும்.  காரைக்கால் அல்லாத பிற மாவட்டத்தைச்  சேர்ந்தோரும் பயன்பெறும் வகையிலான நடவடிக்கைகளை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செய்துவருகிறது. இது எப்போது இங்கு செயல்பாட்டுக்கு வரும் என்பது தெரியாது என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முகம்மது யாசின் திங்கள்கிழமை கூறும்போது,   இந்த மையம் காரைக்கால் சுற்றுவட்டார மாவட்டமான நாகை, திருவாரூர் பகுதியினருக்கும் பயன்பெறவேண்டும். இவர்கள் திருச்சி அலுவலகத்திற்கு சென்றுவருகிறார்கள். தற்போது பலர் காரைக்கால் வந்து ஏமாற்றமடைகின்றனர். 50 கி.மீ. சுற்றளவில் உள்ளோர் பயன்பெறும் வகையில் காரைக்கால் மையத்தை விரிவாக்கம் செய்து, சேவையை விரைவாக அமலுக்கு கொண்டுவர சென்னை அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
காரைக்கால் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் நெருக்கடியான இடத்தில் உள்ளது. இது விரிவான இடத்தில் செயல்படும் வகையில் உரிய நிலத்தை புதுச்சேரி அரசு அளிக்கும் என முதல்வர் வி.நாராயணசாமி வெளியுறவுத்துறை  அமைச்சரிடம் உறுதியளித்தார்.  இதற்கான பணியை காரைக்கால் பகுதியைச்  சேர்ந்த அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் செய்ய முன்வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.