/

மந்தகதியில் திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை மேம்பாட்டுப் பணி

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான ரூ.11.80 கோடி திட்ட சாலை மேம்பாட்டுப் பணி மந்தகதியில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:48 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான ரூ.11.80 கோடி திட்ட சாலை மேம்பாட்டுப் பணி மந்தகதியில் நடப்பதாகவும், இதில் புதுச்சேரி  அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையாக உள்ள பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான சாலையின்   இருபுறமும் தலா 1.5 மீட்டர் அகலப்படுத்தப்பட்டும், சாலையோர மின் கம்பங்கள் நகர்த்தி நடப்பட்டும் சாலைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஒட்டுமொத்த இந்த சாலைத் திட்டத்தை பல கட்டங்களாக பொதுப் பணித்துறை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொண்டு செய்து முடித்துள்ளது.
திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சுமார் 12 கி.மீ. தூரமுள்ள சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை பராமரிப்புக்கூட செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் சாலையில் ஏராளமான பள்ளங்கள், சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்றதாக உருமாறியது. திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், நபார்டு வங்கியின் மூலம் இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை எடுத்தார். நிகழாண்டு திட்டப் பணிகளுக்கு ஒதுக்கும் நிதியில், திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலைப் பணிக்காக ரூ.11.80 கோடியை நபார்டு நிறுவனம் ஒதுக்கியது.
பொதுப் பணித் துறை நிர்வாகம் ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாத வாக்கில் திட்டப்பணி தொடக்கத்துக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த பொதுப்பணித்துறை திட்டம் வகுத்தது. அதற்கேற்ப சாலையோரத்தில் உள்ள மின் கம்பங்களை தற்போதைய இடத்திலிருந்து தொலைவில் நகர்த்தி நட வேண்டும். விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும். சாலையோரத்தில் வாய்க்கால் இருந்தால், சாலையோரத்தில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் தூரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் ஜல்லி கொட்டி சமன் செய்ய வேண்டும். இந்த பணிகளை ஓராண்டுக்குள் முடித்துவிட இலக்கு நிர்ணயித்திருப்பதாக பொதுப் பணித் துறையினர் கூறினர்.
முதல்கட்டமாக  சாலை விரிவாக்கத்துக்காக, சாலையோரத்தில் சில இடங்களில் உள்ள வாய்க்காலுக்காக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சில பகுதிகளில் இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. மின் கம்பங்களை இடம் மாற்றி நடுவதற்கான பணிகளும் தொடங்கின.
சாலை அமைக்கும் பணியை தொடங்குவதற்கு, சாலையோர மின் கம்பங்களை அகற்றி நட்டால் மட்டுமே முடியும். மின் கம்பத்தை நகர்த்தி நடுவதற்கு குறிப்பிட்ட பகுதியில் மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும். ஒரு நாள் நிறுத்திவிட்டு பணி செய்தால், குறிப்பிட்ட கால அவகாசம் தந்துவிட்டே மீண்டும் நிறுத்த வேண்டுமென்பது மின்துறையின் விதி.
இவ்வாறு மின் கம்பம் நடும் பணி சுமார் 2 கி.மீ. தூரம் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பெரும்பான்மையான கிலோ மீட்டர் தூரம், பணி செய்து முடித்தால் மட்டுமே சாலைப் பணியை தொடங்க முடியும்.
மின்கம்பங்களை நகர்த்தி நடும் பணி மிகவும் மந்தகதியில் நடப்பதால், சாலைப் பணி எப்போது முடியும் என்பதை  உறுதியாகக் கூற முடியாத நிலையில் உள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மழைக்காலம் வந்ததால் இந்த பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில், திருநள்ளாறு - முதல் அம்பகரத்தூர் வரை உள்ள பகுதியில் மின்கம்பங்களை இடம் மாற்ற, கூடுதல் பணியாளர்களை அமர்த்தி, 2 மாத காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். சாலை விரிவாக்கப் பணியை கம்பங்கள் மாற்றப்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறையினர் அதே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். மார்ச் மாத காலத்துக்குள் சாலை விரிவாகப் பணியை நிறைவு செய்ய வேண்டும்.
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக கும்பகோணம் செல்வோர், கும்பகோணம் மார்க்கமாக திருநள்ளாறு, காரைக்கால் வருவோர் சாலை அவலத்தால் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். திருநள்ளாறு - அம்பகரத்தூருக்கு இடையேயான கிராமங்களைச் சேர்ந்த மக்களும், மாணவர்களும் இரவு நேரத்தில் விபத்துகளைச் சந்திக்க நேரிடுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுப் பணித் துறை, மின்துறையினரை அழைத்துப் பேசி, மார்ச் மாதத்தை இலக்காகக் கொண்டு பணிகளை நிறைவு செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மேலும் ஓராண்டு காலம் திட்டப் பணியை நிறைவு செய்ய எடுத்துக்கொள்ள நேரிடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (சாலை மற்றும் கட்டடம்) ஏ. ராஜசேகரன் கூறியது :
சாலை விரிவாக்கத்தில் இதுவரை இரண்டரை கி.மீ. தூரம் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் சாலையில் தலா 1.5 மீட்டர் தூரம் ஜல்லி கொட்டி அழுத்தம் தரப்பட்டுள்ளது. மின் கம்பம் மாற்றம் செய்யும் திட்டம் முடிக்கப்பட்டுவிட்டால், சாலைப் பணியை தொடங்கிவிட முடியும். அடுத்த 3 மாத காலத்துக்குள் ஒட்டுமொத்த  பணியையும் முடித்துவிட  ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தற்போது மழைக்காலமாக உள்ளதால் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகளைத் தொடங்கிவிடுவோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.