காரைக்காலில் பிஆர்டிசி பேருந்து சேவை விரிவுபடுத்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
புதுச்சேரி அரசு நிறுவனமான பி.ஆர்.டி.சி. என்கிற புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக சேவையை தனியாருக்கு நிகராக மேம்படுத்த


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
புதுச்சேரி அரசு நிறுவனமான பி.ஆர்.டி.சி. என்கிற புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக சேவையை தனியாருக்கு நிகராக மேம்படுத்த, அதன் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் 1988-ஆம் ஆண்டு அரசு நிறுவனமாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி.) தொடங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், திருப்பதி போன்ற தொலைதூர பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், காரைக்கால் கிளை பி.ஆர்.டி.சி. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 23 பேருந்துகள் சிதம்பரம், நெய்வேலி, கும்பகோணம், நாகப்பட்டினம், சென்னை போன்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. 9 பேருந்துகள் நகரப் பகுதியில் இயக்கப்படுகின்றன. 5 சிற்றுந்துகளில் 4 மட்டுமே தொடர்ந்து இயக்கப்படுகின்றன. ஒரு சிற்றுந்து பழுதாகி, சீரமைக்கப்படாமல் பல மாதங்களாக உள்ளது. அடிக்கடி சிற்றுந்துகள் பழுதாவதால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
காரைக்கால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் மாதம் ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது. இதில், 50 சதவீதம் டீசல் செலவுக்கு சென்றுவிடுவதாகவும், எஞ்சிய 50 சதவீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு, நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக மொத்தம் 160 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான ஊதியமாக மாதம் ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
காரைக்கால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் அண்மை காலமாக, முந்தைய மாதங்களைக் காட்டிலும் வருவாயை பன்மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், காரைக்கால் பி.ஆர்.டி.சி.க்கு கூடுதல் பேருந்துகள், சிற்றுந்துகள் புதிதாக வாங்கித்தரப்படுவதில்லை. தற்காலிக பணிமனை, அலுவலகமே இருக்கிறது. ஊழியர்களுக்கான ஊதியம் மாத இறுதியில் தரப்படுவதில்லை. 2, 3 மாதங்கள் நிலுவை வைக்கப்படுகிறது என ஊழியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
தனியாருக்கு நிகராக இல்லை...
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் ஒவ்வோர் ஆண்டும் கூடுதல் பேருந்துகளை தொலைதூரத்துக்கு இயக்கிவருகின்றனர். ஆனால், பி.ஆர்.டி.சி. மட்டும் ஆமை வேக வளர்ச்சியில் இருக்கிறது. இதற்கு ஆளும் அரசே முழு பொறுப்பேற்கவேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை போக்குவரத்துத் துறை என்பது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறது. இதுவே, அரசு சார்பு நிறுவனம் வளரமுடியாமல் போவதற்கு முக்கிய காரணம் என ஒருசாரார் கூறுகின்றனர்.
மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டத்தில் பி.ஆர்.டி.சி.க்கு ஏற்கெனவே பேருந்துகள் வாங்கப்பட்டன. இதுபோன்ற திட்டத்தின் மூலம் புதுச்சேரிக்கு கூடுதல் பேருந்துகள் வாங்கவோ, பட்ஜெட்டில் கூடுதல் பேருந்துகள் வாங்குதற்கான அறிவிப்புகள் செய்யவோ ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. இதனால், தனியாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.ஆர்.டி.சி. திணறுகிறது.
பி.ஆர்.டி.சி. நிர்வாகத்தை மாநில அளவில் கவனிக்க நிரந்தர மேலாண் இயக்குநர் நியமிக்காததும், நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் கண்டுகொள்ளப்படாததுமே பி.ஆர்.டி.சி. நிர்வாகம் குளத்தில் போடப்பட்ட கல்லாக இருக்கக் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மாநிலத்தில் முதல்வரும், ஆளுநரும், அமைச்சர்களும் ஆய்வுகள் என்ற போக்கிலேயே காலத்தை நகர்த்திவருகிறார்கள். திட்டங்களை அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்தும் போக்குகள் இல்லை. இந்த போக்கிலிருந்து ஆட்சியாளர்களும், ஆளுநரும் தங்களை மாற்றிக்கொண்டு, திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை திரட்டமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
காரைக்காலில் ஒரு காலத்தில் லாபத்தில் இயங்கிவந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை தற்போது மூடப்பட்டுவிட்டது. வேளாண் நிறுவனமான பாசிக், பாப்ஸ்கோ போன்றவை நலிந்துவிட்டன. இந்த வரிசையில் லாபத்தில் இயங்கிவரும் பி.ஆர்.டி.சி.யும் சேர்ந்துவிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும், துணை நிலை ஆளுநரும் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத்தின் பி.ஆர்.டி.சி. பொறுப்பாளர் ஜி.சுப்புராஜ் கூறியது: தற்போது காரைக்கால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் லாபத்தில் இயங்குகிறது. ஆனால் பேருந்துகள், சிற்றுந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஊழியர்களுக்கான ஊதியம் அந்தந்த மாதங்களில் வழங்கப்படுவதில்லை. காரைக்கால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் மாதம் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டித்தந்தும், இந்த தொகையிலிருந்து ஊதியம் தரப்படுவதில்லை.
தற்போது புதுச்சேரி நிர்வாகத்துக்கு நிரந்தர மேலாண் இயக்குநர் நியமிப்பதும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் பி.ஆர்.டி.சி. பணிமனையில் டீசல் பங்க் அமைக்கவேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் பெறமுடியும். இந்த விவகாரங்களின் மீது புதுச்சேரி ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
பி.ஆர்.டி.சி. காரைக்கால் கிளை மேலாளர் சிவானந்தம் கூறியது: நிதித் தட்டுப்பாட்டால் புதிய பேருந்துகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இருக்கும் பேருந்துகளை வைத்து செம்மையாக நிர்வாகத்தை நடத்துகிறோம். பி.ஆர்.டி.சி.க்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு ஓர் இடத்தை மாவட்ட நிர்வாகம் காட்டியுள்ளது. இதுகுறித்து, அரசுதான் முடிவெடுக்கவேண்டும். சிற்றுந்துகள் சேவையில் குறைபாடுள்ளதை போக்க மாற்று ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொள்ளும் என்றார்.
பொதுமக்கள் கருத்து...
காரைக்காலில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் கூடுதலாக பி.ஆர்.டி.சி. சிற்றுந்துகள் இயக்கவேண்டும். திருப்பதி, பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கவேண்டும். பி.ஆர்.டி.சி. டிக்கெட் புக்கிங் முறையை நவீனப்படுத்த வேண்டும்.
இதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டாமல் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...