திருநள்ளாறு கோயிலை மையமாக வைத்து ரூ. 6 கோடியில் அமைகிறது ஆன்மிக பூங்கா
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலை மையமாக வைத்து பல்வேறு நவகிரக தலங்கள் குறித்த விவரங்கள், தியான கூடம், மூலிகை மற்றும்


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலை மையமாக வைத்து பல்வேறு நவகிரக தலங்கள் குறித்த விவரங்கள், தியான கூடம், மூலிகை மற்றும் அழகுக்கான செடிகள் உள்ளிட்ட ஆன்மிகம் சார்ந்த பூங்கா ரூ.6 கோடியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தலமாக விளங்குவது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சனீஸ்வரபகவான் வீற்றிருக்கும் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில்.
இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருவர். திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள பிற நவகிரக தலங்களுக்கும் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். பெயர்ச்சி விழா மட்டுமல்லாது ஒவ்வொரு சனிக்கிழமையிலும் திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என கூறலாம்.
புதுச்சேரி அரசு சார்பில், திருநள்ளாறு கோயில் நகரமாக அறிவிக்கப்பட்டு, ஹட்கோ திட்ட நிதியில் கோயில் நகரத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நளன் தீர்த்தக் குளம் புனரமைப்பு இந்த திட்டத்தில் முடிக்கப்பட்டது. வடக்கு புறவட்டச் சாலை, பக்தர்களுக்கான வரிசை வளாகம் உள்ளிட்டவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பல்நோக்குக் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தெற்கு புறவட்டச் சாலை மற்றும் பிற திட்டப்பணிகள் தொடங்கவுள்ளன. இவையாவும் திருநள்ளாறு வரும் பக்தர்கள் சிரமமின்றி ஆன்மிக பயணத்தை நிறைவு செய்துத் திரும்பும் வகையில் செய்யப்படும் திட்டப் பணிகளாகும்.
இந்த திட்டங்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு நுழையும் பகுதியில் ஆன்மிக பூங்கா ஒன்றை மத்திய அரசு நிதியில் புதுச்சேரி அரசு அமைக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு கோயில், காரைக்கால் அம்மையார் கோயில் பிரசித்திப் பெற்றவை. எனவே, காரைக்கால் ஆன்மிக சுற்றுலா மையம் என்றே அழைக்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு, திருநள்ளாறில் பக்தர்களை ஈர்க்கும் வகையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாகம் முனைப்பு காட்டிவருகிறது.
கோயில் நகரத் திட்டத்தில் கட்டப்பட்ட வரிசை வளாகத்தில் சுமார் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய அரங்கம் உள்ளது. தவிர, கோயிலுக்குள் வடக்கு பெரிய பிராகாரத்தில் சுமார் ஆயிரம் பேர் தியானம் செய்யக்கூடிய வகையில் மண்டபம் உள்ளது.
பக்தர்களுக்கு வெளிப்புறத்தில் தியானம் செய்தல், பல்வேறு நவகிரக தலங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக அறிதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக, ஆன்மிக பூங்காவை அமைக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை கூறியது : ஆன்மிக பூங்கா அமைக்க தகுதியான இடமாக திருநள்ளாறு தேர்வு செய்யப்பட்டது. திருநள்ளாறு நகர முகப்பில் வடக்கு புறவட்டச் சாலை அருகே 5 ஏக்கர் நிலத்தில் ஆன்மிக பூங்கா அமைக்க கடந்த சனிக்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் இல்லாத வகையில் சிறப்புத் திட்டங்களை உள்ளடக்கி ரூ.6 கோடியில் இந்த திட்டப்பணியை செயல்படுத்த உள்ளோம்.
இந்த நிலப்பரப்பில் ஒரு குளம் உள்ளது. இதற்கு தடுப்பு சுவர், சுற்றியும் நடைபாதை அமைத்து, குளத்தை அழகுபடுத்தப்படவுள்ளது. சுமார் ஆயிரம் பேர் தியானம் செய்யக்கூடிய வகையில் மண்டபம் எழுப்பப்படும். திருநள்ளாறு கோயில் குறித்த முழு விவரமும், பிற நவகிரக தலங்கள் குறித்த முழு விவரம், தரிசன நேரம், இருக்குமிடம், பயண தூரம் போன்ற அனைத்து தகவல்களும் பெறும் வகையில், ஒவ்வொரு கிரகங்களுக்குமென தனித்தனி மண்டபம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குக்கான பூங்கா மற்றும் மூலிகை மற்றும் பல்வேறு அழகு செடி வளர்ப்புப் பகுதி போன்ற பல்வேறு திட்டப்பணிகள் அந்த பூங்காவினுள் அமையும். முற்றிலும் ஆன்மிக சுற்றுலாவினரை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களுக்கான பல்வேறு தகவல்களை அளிக்கும் விதத்தில் இந்த பூங்கா அமையும். இந்த பணிகள் 12 மாதங்களில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, திருநள்ளாறு கோயில் நகரத் திட்டம், கோயில் மற்றும் அரசு நிதியின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செய்யப்பட்டுவருகின்றன. தற்போது ஆன்மிக பூங்கா திட்டப்பணி பல்வேறு செயல்திட்டங்களுடன் செய்து முடிக்கப்பட்டால், திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு நல்ல பயனைத் தரும் என நம்புகிறேன். நாட்டில் எந்தெந்த பகுதியில் இதுபோன்ற ஆன்மிக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து, அதற்கேற்ப திருநள்ளாறு ஆன்மிக பூங்கா அமைக்கவேண்டும் என நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உள்ள திருநள்ளாற்றில், பல வகையான திட்டப்பணிகள் செய்யப்பட்டாலும், உணவகங்களும், தங்கும் விடுதிகளும், நிரந்தர கழிப்பறை வளாகங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலான மக்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த வசதிகள் திருநள்ளாற்றில் இல்லை.
கோயிலுக்கு சொந்தமான நிலம் ஏராளம் இருக்கும் நிலையில், கோயில் நகரத் திட்டத்தின் மூலமோ, அரசு நிதியின் மூலமோ பக்தர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். அரசு நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை செயல்படக்கூடிய உணவகம் அமைக்கவேண்டும்.
இவ்விரண்டு வசதிக்காக பக்தர்கள் அங்குமிங்கும் அலையும் நிலை உள்ளது. வருகிற 19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் தேவைக்கேற்ப இந்த வசதிகள் காரைக்கால் மற்றும் திருநள்ளாற்றில் இல்லை. எனவே, இதற்கான திட்டமிடலை கோயில் தனி அலுவலராக உள்ள மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாக அலுவலராக உள்ள சார்பு ஆட்சியர் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ். அலுவலர்களும் செய்து, பக்தர்கள் முழு திருப்தியுடன் திருநள்ளாறு வந்துசெல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...