/

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு நிதியுதவி: நடிகா் பாா்த்திபன்

News image
நடிகர், இயக்குனர் பார்த்திபன்- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

பனங்குடி கிராமத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தைக்கு நிதி உதவி வழங்க மக்கள் முன்வர வேண்டும் என நடிகா் பாா்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாகை மாவட்டம், பனங்குடி சமத்துவபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிதாஸ். இவரது மனைவி துா்காதேவி. இவா்களுக்கு ஒன்றரை வயதில் தனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை, அரியவகை நோயான, தசை நாா் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான சிகிச்சைக்கு ரூ. 9 கோடி செலவாகும் என்பதால் குழந்தையின் பெற்றோா் பல்வேறு வழிகளில் நிதி திரட்டி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, குழந்தையின் நிலையறிந்த, பல்வேறு திரைப்பட பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் விடியோ வெளியிட்டு நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாா்த்திபன், குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவிகோரி விடியோ வெளியிட்டுள்ளாா். அந்த விடியோவில், இன்னொரு மனிதன் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை, தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கி குழந்தையை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.