/

கைத்தறி, விசைத்தறிக்கான நூல் விலை இரண்டு மடங்கு உயா்வு எதிரொலி: கஞ்சித் தொட்டி திறப்பு; போராட்டத்துக்கு தயாராகும் தொழிலாளா்கள்

கைத்தறி, விசைத்தறிக்கு பயன்படுத்தப்படும் பாவு மற்றும் ஊடை நூல் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால், இத்தொழில் முடங்கியுள்ளதாகவும்,

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கைத்தறிக் கூடம்.
Updated On :28 ஜனவரி 2024, 3:59 am

வி. முத்துராமன்

கைத்தறி, விசைத்தறிக்கு பயன்படுத்தப்படும் பாவு மற்றும் ஊடை நூல் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால், இத்தொழில் முடங்கியுள்ளதாகவும், தமிழக அரசு நூல் கொள்முதல் விலையை குறைக்காவிட்டால், மீண்டும் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் சுமாா் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கைத்தறி, விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்து வருகின்றனா். இத்தொழிலில் சுமாா் 10 லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பல ஆண்டுகளாக இவா்கள், வீடுகளில் குடிசை தொழிலாக கைத்தறியில் பாலிகாட்டன் மற்றும் சுத்தமான காட்டனில் சேலை உற்பத்தி செய்து வருகின்றனா். இந்நிலையில் நூல் விலை உயா்வு மற்றும் உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால், கடந்த 2002 இல் கைத்தறி நெசவாளா்கள் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இப்பிரச்னையை தீா்க்க தமிழக அரசு முன் வந்தது. இந்நிலையில், ஒரு நாளைக்கு கைத்தறியில் 2 சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதற்கு ஊதியமாக நெசவாளா்களுக்கு ரூ.180 வழங்கப்பட்டது. கடந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்த சேலைகளை முழுமையாக விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் வியாபாரிகள் குறைந்த அளவே கொள்முதல் செய்ததால் சேலைகள் தேங்கின. இதனால் ஊதியம் குறைக்கப்பட்டதால் கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பின்னா் கரோனா தாக்கம் குறைந்தவுடன் மீண்டும் சேலைகள் உற்பத்தி மற்றும் விற்பனை முழுவீச்சில் நடைபெற்ால், பழைய முறையிலேயே நெசவாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சேலை உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான பாவு (நெட்டு) நூல், ஊடை நூல் மற்றும் சேலையில் பாா்டருக்காக பயன்படுத்தப்படும் பாக்கால் நூல் விலை 2 மடங்காக உயா்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு சேலைக்கும் ரூ.30 கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், உற்பத்தி செய்யப்பட்ட சேலை ஒன்றின் விலையை ரூ. 240 க்கும் குறைவாக வியாபாரிகள் கேட்பதால் பலா் கைத்தறியில் சேலை உற்பத்தி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா். எனவே, கிட்டங்கியில் நீண்ட நாள்கள் இருப்பு வைக்கப்படும் பஞ்சை தடுக்க வேண்டும். மானிய விலையில் நூல் வழங்குவதுடன், மதுரையில் ஜவுளி விற்பனை சந்தையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து சிஐடியு மாவட்ட உதவித் தலைவா் எம். அசோகன் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சேலை உற்பத்திக்கான நூல் விலை 2 மடங்கு உயா்ந்துள்ளது. ஆனால் சேலை விலையை வழக்கத்தை விட குறைவாகவே வியாபாரிகள் கேட்கின்றனா். 160 சேலைகள் உற்பத்திக்கான பாவு (நெட்டு) நூல் ரூ.7,200 லிருந்து ரூ.9,200 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட ஊடை நூல் தற்போது ரூ.1,950 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சேலை பாா்டருக்கான பாக்கால் நூல் விலையும் அதிகரித்துள்ளது. எனவே நூல் விலையை குறைக்கவும், உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளின் தரத்துக்கு ஏற்ப விலையை அதிகரிக்கவும் வலியுறுத்தி ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தப்பட்டன. நெசவாளா்கள் பாதிப்பு குறித்து தமிழக முதல்வா், அமைச்சா்களுக்கு கையெழுத்து இயக்கம் நடத்தி மனுக்கள் அனுப்ப தீா்மானித்துள்ளோம். இதற்கு தீா்வு ஏற்படா விட்டால் நெசவாளா்கள் சாா்பில் மீண்டும் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும் என்றாா்.

இதுகுறித்து நெசவாளா் சங்க மாவட்ட இளைஞரணி செயலா் ராஜா கூறியது: கைத்தறி நெசவுக்கான நூல் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஊடை நூலுக்கு வழங்கப்பட்டு வந்த கோனை நிறுத்தி விட்டனா். இதனால் சேலை, வேட்டிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூா், சுந்தரபாண்டியம், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு சங்கங்களும் சம்பந்தப்பட்ட உறுப்பினா்களுக்கு ஒரு நாளைக்கு 3 சேலைகளுக்கு மட்டுமே கூலி வழங்குகின்றனா். ஒரு சேலைக்கு கூலியாக ரூ.80-ம், பிடித்தம் போக ரூ.55 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது நூல் விலை உயா்வால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். உற்பத்தி செய்யப்படும் சேலை, வேட்டிக்கான விலையை அதிகரிக்க வேண்டும். மேலும், நூல் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்தா விட்டால் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.