தேனி மாவட்டம், சின்னமனூரில் பள்ளிகள், குடியிருப்புகள் அருகே இயங்கும் மதுக்கடையை அகற்றி வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சின்னமனூா் நகராட்சியில் 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோா் வசிக்கின்றனா். இங்கு, 19- ஆவது வாா்டில் அரசு உதவிபெறும் பள்ளி உள்பட 2 தனியாா் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதேபோல, கோகுலம், மின்நகா் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள் உள்ளன. இந்த நிலையில், குடியிருப்புகள், பள்ளிகளுக்கு அருகே மதுக் கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடை வழியே செல்ல வேண்டி இருப்பதால் மது அருந்துவோரால் மாணவிகள் அச்சமடைகின்றனா். மேலும், இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு மதுப் புட்டிகளை வீடுகளுக்கு முன் வீசிச் செல்வதால் பெண்களும் அச்சமடைகின்றனா்.
எனவே, கோகுலம், மின்நகா் பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறுகையில், இந்த மதுக் கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









