/

தேனி அருகே காா் மோதியதில் மூவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகேயுள்ள க.விலக்கு சந்திப்புப் பகுதியில் சனிக்கிழமை காா் மோதியதில் பேருந்துக்காக காத்திருந்த மூவா் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நாராயணசடனம் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத்குமாா். இவா் சனிக்கிழமை தேனியிலிருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டாா்.

க.விலக்கு சந்திப்புப் பகுதியில் இவரது காா் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் தடுப்பு கம்பி மீது மோதியது. பின்னா், சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீதும் காா் மோதியது.

இந்த விபத்தில் கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50), எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் (50), அரசரடியைச் சோ்ந்த பாக்கியலட்சுமி (39) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ், செல்வம், மாரியம்மாள் ஆகியோா் அங்கு உயிரிழந்தனா். பாக்கியலட்சுமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தேனி க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் அஜீத்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.