தேனி மாவட்ட சிறைச்சாலை கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?
தேனி மாவட்டத்துக்கான சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தேனி மாவட்டத்துக்கான சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 2 இடங்களில் கிளைச் சிறைச்சாலைகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை கிடைக்கும் வழக்குகள் மற்றும் ஜாமீனில் வரக்கூடிய நீதிமன்றக் காவல் கைதிகள் மட்டுமே இந்த கிளைச் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் ஒரு சில மாதங்கள் வரை தண்டனை பெற்றால் கூட, கிளைச் சிறைச்சாலைகளில் அடைக்க முடியாது.
மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளான கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்முறை, ஆள் கடத்தல், ஆதாயக் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, 7 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் கைதிகள் மற்றும் இந்த வழக்குகளில் தொடர்புடைய விசாரணைக் கைதிகள் மாவட்ட சிறைச்சாலையில் மட்டுமே அடைக்கப்படுவர்.
வழக்குகள் தொடர்பாக நீதிமன்றக் காவலுக்காக கூட இவர்களை கிளைச் சிறைச் சாலைகளில் அடைக்க முடியாது என்பது விதிமுறை. இந்த வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை, மத்திய மற்றும் மாவட்டச் சிறைச்சாலைகளில் மட்டும்தான் அடைக்க முடியும்.
அவ்வகையில், தேனி மாவட்டத்துக்கான மாவட்ட சிறைச்சாலை மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலைதான். தற்போது வரை 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் குற்றவியல் நடுவர் மன்றங்களில் ஆஜர்படுத்தி, மறுவிசாரணை, வாய்தா வரும் நாள் வரை மதுரை மத்திய சிறைச்சாலையில் மட்டுமே அடைக்கின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, அதாவது நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக கைதிகள் மறுபடியும் குற்றவியல் நடுவர் மன்றங்களில் ஆஜர்படுத்த, அவர்களை மத்திய சிறையிலிருந்து வெளியே எடுத்து சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போய் வருவதற்கு பாதுகாப்புக்காக 2 காவலர்கள் மற்றும் பேருந்துகளில் அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு குற்றவாளிகளை அழைத்துச் செல்லும்போது, பல்வேறு பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து உத்தமபாளையம், போடி, பெரியகுளம் நீதிமன்றங்களுக்கு வாய்தாவுக்காக அழைத்து வரப்படும் கைதிகள் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்தல், உணவு அருந்துதல், இயற்கை உபாதை போன்றவற்றால் பாதுகாப்புக்குச் செல்லும் போலீஸாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதில், பெண் காவலர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகள் பல முறை தப்பிச் சென்றுள்ளனர். இது, தேனி மாவட்ட போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இது குறித்து வழக்குரைஞர் ஒருவர் கூறியது: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மாவட்ட சிறைச்சாலைக்கான கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாக நடப்பதாகத் தெரிகிறது. மதுரை மத்திய சிறைச்சாலை கைதிகள் நீதிமன்றக் காவல் முடிந்து, ஜாமீன் மற்றும் விசாரணை போன்றவைகளுக்கு தேனியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்குத்தான் வர முடியும். மேலும், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவு பெற்று, மதுரை மத்திய சிறைச்சாலைக்கு செல்வதற்குள் மாலை நேரமாகிவிட்டால், சம்பந்தப்பட்ட கைதி மறுநாள்தான் சிறையிலிருந்து வெளியே வரமுடியும்.
அதேநேரம், சிறைச்சாலை தேனி மாவட்டத்தில் இருக்குமானால், அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடிந்துவிடும். எனவே, ஆண்டிபட்டி அருகே கட்டப்படும் மாவட்ட சிறைச்சாலைப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...