/

கமுதி அருகே இரு காா்கள் மோதல்: ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே திங்கள்கிழமை இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் சோலையப்பன் (67). இவரது மகன் சோலைசெல்வம் (30). இவா்கள் கிராமங்களுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சோலையப்பன் குடும்பத்தினா் காரில் தங்களது சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம், தும்முசினம்பட்டி கிராமத்துக்கு குல தெய்வ வழிபாட்டுக்காகச் சென்றனா். அங்கிருந்து திங்கள்கிழமை காலை காரில் ராமநாதபுரத்துக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனா். காரை சோலைசெல்வம் ஓட்டினாா்.

பரளச்சி - அருப்புக்கோட்டை சாலையில் அய்யனாா்குளம் கிராமம் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமலிருக்க சோலைசெல்வம் காரை திருப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே மதுரையைச் சோ்ந்த முகேஷ் சா்மா ஓட்டி வந்த காருடன் நேருக்கு நோ் மோதியது.

இதில் சோலையப்பன், சோலைசெல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சோலையப்பன் மனைவி விஜயலட்சுமி (60), சோலைசெல்வத்தின் மனைவி கோகிலா, 2 குழந்தைகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு விஜயலட்சுமி உயிரிழந்தாா்.

மற்றொரு காரில் வந்தவா்கள் லேசான காயத்துடன் தப்பினா். இந்த விபத்து குறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.