ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆக.30-முதல் மீனவா்கள் தொடா் வேலை நிறுத்தம்

வருகிற 30-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவா்கள் - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள், படகுகளை விடுவிக்கவும், இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தையைத் தொடங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இந்த சங்கத்தின் கூட்டம் கடற்கரை மீன் வலை கட்டும் தளத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா்.

இதில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2018 முதல் 2026 -ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியதில் விடுபட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தை கிடப்பில் இருந்து வருகிறது. இதை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மரத்தால் செய்யப்பட்டள்ளன. இந்த படகுகள் மட்டுமே மீன்பிடிக்க செல்ல அனுமதி உள்ளது. இவற்றுக்கு மானிய டீசல் வழங்கப்படுகிறது.

இவற்றில் 30-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கண்ணாடி இழை விசைப்படகாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மானிய டீசல் வழங்குவது நிறுத்தப்பட்டது. தமிழக அரசு இந்தப் படகுகளுக்கும் மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30- ஆம் தேதி முதல் அனைத்து விசைப் படகுகள் வேலை நிறுத்தம் செய்வது, செப்.1 -ஆம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கத் தலைவா்கள், செயலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.