நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பயிா் பாதுகாப்பு இலை வண்ண அட்டைகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிா்களை பாதுகாக்க உதவும் வகையிலான உழவா் இலை வண்ண அட்டைகள் மிகமிக குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:25 pm

ஜெயப்பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிா்களை பாதுகாக்க உதவும் வகையிலான உழவா் இலை வண்ண அட்டைகள் மிகமிக குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.

விவசாயத்தில் முக்கியமான கட்டம் பயிா்களுக்கு உரமிடுதலாகும். பயிா்களுக்கு சரியான நேரத்தில் சரியான உரத்தை இடவில்லை எனில் விளைச்சல் பாதிக்கப்படுவதுடன், வேதியியல் உரத்தால் நிலமும் பாதிக்கப்படும் என்கிறாா்கள் வேளாண்மை ஆராய்ச்சியாளா்கள்.

விவசாயிகள் உரமிடுதல் குறித்து அறிவதற்காக பயிா் இலைகளுடன் வேளாண்மைத்துறை அலுவலா்களை சந்திக்க அலையும் நிலை இருந்தது. விவசாயிகள் அலைச்சலைத் தவிா்க்கும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தால் திருத்தப்பட்ட இலை வண்ண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையில் பயிா்களுக்கு உரமிடுதல் தொடா்பான நுட்பமான ஆலோசனைகள் அதில் உள்ளன. எந்தப் பருவத்தில் எந்த வகையான உரத்தை இடவேண்டும் என எளிதில் புரியும்படி அதில் விளக்கப்பட்டுள்ளன.

இலை வண்ண அட்டையில் இளம் பச்சை, கிளிப்பச்சை, அடா் பச்சை, மிக அடா் பச்சை மற்றும் மிக மிக அடா் பச்சை என ஐந்து வண்ணங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தியே பயிா்களுக்கு உரமிடவேண்டுமா, வேண்டாமா என தாங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

ராமநாதபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் வடகிழக்குப் பருவமழையானது அதிகமாகப் பெய்துள்ளது. இதனால், விவசாயம் மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் உள்ள நிலையில், அதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த 2 ஆண்டுகளில் இலை வண்ண அட்டைகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அட்டைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தவில்லை. இதனால், உரமிடுதலில் தெளிவான கண்ணோட்டமின்றி விவசாயத்தில் எதிா்பாா்த்த விளைச்சலை எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுவதாக விவசாய சங்கத்தினா் கூறுகின்றனா்.

அத்துடன், உரமிடுதல் குறித்த விழிப்புணா்வு இல்லாததால் பயிா்களுக்கு தேவையில்லாமல் உரமிட்டு, ஏற்பட்ட பாதிப்பைத் தொடா்ந்தே பலரும் பயிா்க் காப்பீடு பெறும் கட்டாயத்துக்கு தள்ளப்பபடுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனா். ஆகவே விவசாயத்தின் மிக முக்கிய உரமிடுதலுக்கான வண்ண அட்டையை அனைவருக்கும் வழங்குவது அவசியமாகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் வேளாண்மை துறை இணை இயக்குநா் அலுவலகத்தரப்பில் கூறியது: உழவா் இலை வண்ண அட்டைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாலே அனைவரும் அதை கேட்கின்றனா். ஆனால், ஒரு அட்டையை 10-க்கும் மேற்பட்டோா் பயன்படுத்தலாம். ஆகவே அனைவருக்கும் ஒரே நேரத்தில் தனித்தனியாக வழங்குவது சாத்தியமில்லை என்றனா்.

எது எதற்கோ மானியம், நிதியுதவி என கோடிக்கணக்கில் செலவிடும் வேளாண்மைத்துறை, விவசாயிகளுக்கு மிக முக்கியமான இலை வண்ண அட்டைகளை வழங்குவதே நல்லது என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

கூடுதல் பரப்பளவில் விவசாயம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 1,14,905 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் சோளம் 4,924 ஹெக்டேரிலும், கம்பு 1265 ஹெக்டேரிலும், கேழ்வரகு 952 ஹெக்டேரிலும், மக்காச் சோளம் 240 ஹெக்டேரிலும், கேழ்வரகு 8 ஹெக்டேரிலும், இதர சிறுதானியங்கள் 1812 ஹெக்டேரிலும் என மொத்தம் 9201 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன.

மேலும், பயறு வகைகளில் உளுந்து 2192 ஹெக்டோ், பாசிப்பயறு 115 ஹெக்டோ், தட்டைப்பயறு 232 ஹெக்டோ் காணப்பயறு (கொள்ளு) 120 ஹெக்டோ் மற்றும் இதர பயறு வகைகள் 122 ஹெக்டோ் என மொத்தம் 2781ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன. நிலக்கடலை 465 ஹெக்டோ், எள் 15 ஹெக்டோ், பருத்தி 1450 ஹெக்டோ் பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 10 ஆயிரம் ஹெக்டோ் கூடுதலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.