மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:35 pm

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த எஸ். பிரபு தாக்கல் செய்த மனு:

உலகின் பல்வேறு நாடுகளில் போா் பதற்றம் நிலவுகிறது. எனவே, உலக அமைதியை வலியுறுத்தி தேனி- பெரியகுளம் சாலையில் தினமும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை போா் நிறைவடையும் வரை அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி தென்கரை காவல் நிலையத்தில் மனு அளித்தேன். அனுமதி கோரிய இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி போலீஸாா் அனுமதி வழங்க மறுத்துவிட்டனா். எனவே எனது கோரிக்கையை ஏற்று அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் உலகப் போா் நிறைவடையும் வரை போராட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளாா். இந்த கால அளவு முடிவில்லாதது. இது நிா்வாக ரீதியாகச் சாத்தியமற்றது. காவல் துறையினா் போராட்டத்துக்கு முற்றிலும் அனுமதி மறுக்க வில்லை. மாறாக, பெரியகுளத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கா் சிலை அல்லது சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனா்.

மனுதாரா் அந்த மாற்று இடங்களை நிராகரித்ததுடன், அம்பேத்கா், முத்துராமலிங்கத் தேவா் ஆகியோரை ஜாதியத் தலைவா்கள் என நீதிமன்றத்திலேயே விமா்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அம்பேத்கா். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமையாக பொது வெளியில் நினைவுகூரப்படுகிறாா். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளை வழக்கு தொடா்ந்த ஒருவா் கண்ணியக் குறைவாக இந்த நீதிமன்றத்தில் பேசுவதை அனுமதிக்க முடியாது.

போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. அந்த உரிமை பொது ஒழுங்கு, நிா்வாக நடைமுறைகளுக்கு உள்பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் காலவரையின்றி போராட்டம் நடத்துவேன் என பிடிவாதம் பிடிக்க யாருக்கும் உரிமை இல்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தத் தொகையை தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மனுதாரா் பெரியகுளம் கிளைச் சிறையில் ஒரு நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.