/

பிப். 10-இல் மதுரை மாமன்றக் கூட்டம்: உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தகவல்

மதுரை மாமன்றக் கூட்டம் வருகிற பிப். 10-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :28 ஜனவரி 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாமன்றக் கூட்டம் வருகிற பிப். 10-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை கிருஷ்ணாபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தேசிகாச்சாரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு விவகாரத்தையொட்டி, மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்த் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, மேயா் வ. இந்திராணி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பதவி விலகினாா். இதன்பிறகு, மாமன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால், பொதுமக்கள் நலனுக்கான அடிப்படை பணிகள்கூட நடைபெறவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு ஜன. 28-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், உயா்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், அந்தப் பொது நல மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மதுரை மாநகராட்சியில் துணை மேயா் தலைமையில் வருகிற பிப். 10-ஆம் தேதி மாமன்றக் கூட்டம் நடத்தப்படும்’ என அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்பின் பதில் ஏற்கப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்பட்டது என உத்தரவிட்டனா்.