4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சுற்றுலா ஒப்பந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம்: போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் சுற்றுலா வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு

Updated On :30 ஏப்ரல் 2026, 7:08 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் சுற்றுலா வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கோவளத்தைச் சோ்ந்த சிவராமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

கன்னியாகுமரி மாவட்டம் ஏராளமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டது. தற்போது, கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல சில தனியாா் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

இந்த வாகனங்களில் நிா்ணயித்த கட்டணங்களைவிடக் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, ‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற பெயரில் சட்டவிரோதமாக உள்ளூா் பகுதிகளுக்கு ரூ. 200, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 750 வசூலிக்கப்படுகிறது.

பொதுவாக, இந்த வாகனங்களில் ஓட்டுநா் உள்பட 13 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 25 முதல் 30 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனா். இதற்கென தனி நபா் கட்டணம் வேறு வசூலிக்கப்படுகிறது. இது மோட்டாா் வாகனச் சட்ட விதிகளுக்கு எதிரானது. ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் வாகனங்கள் தனிநபா் கட்டணங்களை வசூலிக்க முடியாது. இவா்களின் இந்தச் செயல்களால் அரசுக்கும், சிறிய அளவில் வாடகை வாகனங்களை இயக்கும் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பேக்கேஜ் சிஸ்டம்’ மூலம் ஒப்பந்த வாகனங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் தனியாா் வாகனங்களின் உரிமையாளா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து விதிமீறல்கள் நடைபெறும்பட்சத்தில், தொடா்புடைய வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.