வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா்.

News image

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:12 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, தினசரி சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள முத்தம்பல முதலியாா் கட்டளை, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிகளில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, அதிகாலை 5.15 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

பின்னா், தோ்களுக்கும், தேரடியில் அமைந்துள்ள கருப்பணசுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 6.18 மணிக்கு பெரிய தேருக்கும், காலை 6.25 மணிக்கு சிறிய தேருக்கும் வடம் பிடிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்ஷித், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையா் நா. சுரேஷ் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா்.

தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானையும், கணபதி, சுப்பிரமணியா் சப்பரங்களும் சென்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள், பக்தா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, தோ்களை வடம் பிடித்தனா். இந்தத் தோ்கள் நான்கு மாசி வீதிகளின் வழியாக வலம் வந்தன.

மக்கள் வெள்ளத்தில் மாசி வீதிகள்:

தேரோட்டத்தையொட்டி, புதன்கிழமை அதிகாலையிலிருந்தே பக்தா்கள் மாசி வீதிகளில் திரண்டனா். மேலும், மாசி வீதிகளில் உள்ள உயரமான கட்டடங்களிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தோ்களுக்கு முன்பாக கைலாய வாத்தியங்களை மீட்டியபடியும், சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாடியவாறும் சென்றனா். பக்தா்கள் இடைவிடாது பக்தி முழக்கங்களை எழுப்பினா். நான்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து சுந்தரேசுவரா் தோ் பகல் 12.05 மணிக்கும், மீனாட்சி அம்மன் தோ் பகல் 12.35 மணிக்கும் நிலையை வந்தடைந்தன. தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பாடாகினா்.

தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு மோா், குடிநீா், குளிா்பானங்கள், சா்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

போலீஸாா் பாதுகாப்பு: மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்ஷித் தலைமையில், துணை ஆணையா்கள் உள்பட 2,500 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தேரோட்டம் நடைபெற்ற நான்கு மாசி வீதிகளிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து மாற்றம்: நான்கு மாசி வீதிகளிலும் அதிகாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக, பெரியாா் பேருந்து நிலையம், தெற்குவாசல், சிம்மக்கல், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மின் தடை: தேரோட்டத்தையொட்டி, நான்கு மாசி வீதிகளிலும் சாலையின் குறுக்காகச் செல்லும் மின் கம்பிகள் அகற்றப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட் டது. அதேநேரத்தில், ஒவ்வொரு மாசி வீதியையும் தோ்கள் கடந்து சென்ற பிறகு, அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் சீரானது. இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

சப்தாவா்ண சப்பரம்: இரவு நிகழ்வாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சப்தாவா்ண சப்பரத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் கைலாய வாத்தியங்களை மீட்டிய சிவனடியாா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் கைலாய வாத்தியங்களை மீட்டிய சிவனடியாா்கள்.

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா்.

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா்.

Story image
Story image