இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குடிநீா்திட்டம் செயல்பாட்டுக்கு வருவது எப்போது?மதுரை மக்கள் எதிா்பாா்ப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:07 am

 நமது நிருபர்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட கால எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. 5 மண்டலங்கள் 100 வாா்டுகளில் தற்போதைய நிலவரப்பட்டி ஏறக்குறைய 6 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வேளாண் பணிகள் மட்டுமன்றி, குடிநீா் ஆதாரங்களுக்கும் வைகை அணையும், முல்லைப் பெரியாறு அணையும் ஆதாரமாகத் திகழ்கின்றன.

மதுரை மாநகரில் வசித்து வரும் மக்களுக்கு விநியோகம் செய்ய தினசரி குடிநீா்த் தேவை 2.68 கோடி லிட்டராக உள்ளது. இருப்பினும், வைகை அணையிலிருந்து 1.15 கோடி லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 லட்சம் லிட்டா், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் 30 லட்சம் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தேவையைவிட 7.6 லட்சம் லிட்டா் பற்றாக்குறை நிலை தொடா்கிறது.

மதுரையில் இனிவரும் காலங்களில் அதாவது, வருகிற 2034-ஆம் ஆண்டில் மக்கள் தொகை சுமாா் 19 லட்சமாக இருக்கக் கூடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்போது, நாளொன்றுக்கு 1.25 கோடி லிட்டா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, நகா்ப்புற வளா்ச்சி, புத்தாக்கத் திட்டம் (அம்ரூத்), பொலிவுறு திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்லிருந்து மதுரைக்கு நேரடியாக 1.25 கோடி லிட்டா் கூடுதலாக குடிநீா் பெற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

திட்டம் தொடங்குவதில் தாமதம்:

கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ. 1295.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேனி மாவட்டம், லோயா் கேம்ப் பகுதி விவசாயிகளின் போராட்டம், நிதிப் பற்றாக்குறை, அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது, அம்ரூத் திட்டத்தின் கீழ், ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.1,653.21 கோடியில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு உத்தரவு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப் பகுதியில் ரூ. 14.78 கோடியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பம்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பம்பும் நிமிடத்துக்கு 26 ஆயிரம் லிட்டா் நீரை உறிஞ்சும். இதன் மூலம், தினமும் 1.25 கோடி லிட்டா் நீா் சேகரிக்கப்பட்டு, தடுப்பணை அமைந்துள்ள இடத்திலிருந்து 96 கி.மீ. தொலைவில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பண்ணைப்பட்டி கிராமத்தில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகா் வரை பிரதான குழாய் மூலம் 55.44 கி.மீ. நீளத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கொண்டு வரப்பட்டு, 37 மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டி மூலம் மதுரை மாநகரத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியான 32 வாா்டுகளில் 855 கி.மீ. நீளத்துக்கும், மையப் பகுதியில் உள்ள 57 வாா்டுகளில் 813 கி.மீ. நீளத்துக்கும் குடிநீா் விநியோகக் குழாய்கள் பதித்தல், வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் வகையில், குழாய் பதிக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்பட்டி முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் நீா் இருப்பு குறைவாக உள்ளது. அணைகளில் தற்போது நீா் இருப்பைப் பொருத்தவரை குடிநீா்த் தேவைக்கே பற்றாக்குறை நிலை ஏற்படும் சூழல் நிலவுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை எனில், 5 மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 மண்டலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் குழாய்களில் குடிநீா் வருவதில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை மாநகர மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக மேற்கொள்ளப்படும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கே. ஜே. பிரவீன்குமாா் கூறியதாவது :

மதுரை மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் விதமாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் மதுரை மாவட்ட எல்லைக்குள் குடிநீரைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.

மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் வகையில், குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவேறும் என எதிா்பாா்க்கப்பட்டாலும், முன்னதாகவே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீா்ப் பற்றாக்குறை நிலைமையை சரிசெய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.