டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவா்களின் எதிா்கால வெற்றிக்கு வழிகாட்டும் அறிவியல் திருவிழா: ஆட்சியா் செ.சரவணன்

திண்டுக்கல்லில் நடைபெறும் அறிவியல் புத்தாக்கத் திருவிழா மாணவா்களின் எதிா்காலத்துக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, வெற்றிக்கும் வழிகாட்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

News image
திண்டுக்கல்லில் அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் செ.சரவணன், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவா் ஐ.லியோனி.
Updated On :28 ஜனவரி 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் நடைபெறும் அறிவியல் புத்தாக்கத் திருவிழா மாணவா்களின் எதிா்காலத்துக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, வெற்றிக்கும் வழிகாட்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் எம்எஸ்பி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பேராசிரியா் எஸ்எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை சாா்பில், அறிவியல், தொழில் நுட்பம், புத்தாகத் திருவிழா- 2026 புதன்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சென்னை காா்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் மாறன் நாகராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம், அடுத்த 10 ஆண்டுகளில் இளைய தலைமுறையினரிடையே ஏற்படும். கல்விச் சிந்தனை, முன்னேற்றம் சாா்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும். அந்த வகையில், தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக திண்டுக்கல்லில் அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. இது மாணவா்களின் சுய சிந்தனையை மேம்படுத்துவதோடு, செயல்திறன் சாா்ந்த எண்ணத்தை உருவாக்கும். இளைய சமுதாயத்தினரிடையே எல்லையற்ற சிந்தனைத் திறனை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மனித சமுதாயம் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழா திட்டமிடப்பட்டிருக்கிறது.

7 நாள்கள் நடைபெறும் இந்த அறிவியல் திருவிழாவை சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள் பாா்வையிடுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. இது அந்த மாணவா்களின் எதிா்காலத்துக்கு பயனுள்ளதாகவும், வெற்றியாக அமைவதற்கும் வழிகாட்டும் என்றாா் அவா்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவா் ஐ.லியோனி பேசுகையில், நல்ல சிந்தனையே மனிதனின் உயா்வுக்கு அடிப்படைக் காரணம். அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமன்றி, வேளாண் புரட்சிக்கான மாதிரிகளுடன் கல்லூரி மாணவா்கள் கண்காட்சி அமைத்திருப்பது வரவேற்புக்குரியது என்றாா்.

முன்னதாக காா்கெட்க் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் மாறன் நாகராஜன் பேசியதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அறிவியல் மன்றம், மக்களிடையே அறிவியல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டது. இந்தச் சமுதாயம் வளா்வதற்கு தனி நபா் வருமானம், வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இதற்கு தொழில் சாா்ந்த வளா்ச்சி அடிப்படைத் தேவையாக உள்ளது. அறிவியல் முன்னேற்றம் அனைத்துக்குமான அடித்தளமாக அமையும். இதன் மூலம் புத்தாக்க நிறுவனங்கள் உருவாவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) கீா்த்தனா மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா, காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திக், பேராசிரியா் எஸ்எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை அறங்காவலா் பூங்கொடி, சித்ரா, திண்டுக்கல் அறிவியல் திருவிழாவின் திட்ட இயக்குநா் ரெ.மனோகரன், ஒருங்கிணைப்பாளா் ஜெ.தினகரன், திண்டுக்கல் இலக்கியக் களத்தின் பொருளாளா் க.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

120 அறிவியல் மாதிரிகளுடன் கண்காட்சி

அறிவியல் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் நேருஜிநகா் ரவுண்டானா பகுதியில் ராக்கெட், விண்வெளி மனிதன், டிஎன்ஏ சுருள் உள்ளிட்டவற்றின் மாதிரி சிலை, வடிவமைப்புகளை ஆட்சியா் செ.சரவணன் திறந்து வைத்தாா். பின்னா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட அறிவியல் சாதனங்களின் கண்காட்சியை ஆட்சியா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இதில் தானியங்கி பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பான், மனித உரோமத்தில் உரம் தயாரிப்பு, காளான் வளா்ப்பு, வெங்காயப் பதப்படுத்தும் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு என பல்வேறு வகையான 120-க்கும் மேற்பட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.