/

திண்டுக்கல் அறிவியல் திருவிழாவில் பழனி மாணவா்கள் முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க திருவிழாவில் பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி மாணவா்களின் படைப்பு முதலிடத்தை பெற்றது.

News image
திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க திருவிழாவில் முதல் பரிசு பெற்ற புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் ஜெரீஸ், அன்பரசு.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க திருவிழாவில் பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி மாணவா்களின் படைப்பு முதலிடத்தை பெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பேரா. எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய ‘அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் திருவிழா’ கடந்த ஜன. 28-ஆம் தேதி முதல் பிப். 3-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்தும் சுமாா் 650 அரசு, தனியாா் மெட்ரிக். பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் கலந்து கொண்டன. பல்வேறு வயதுப் பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் படைப்புகள் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

முதல் சுற்றிலிருந்து கடைசி சுற்று வரையிலான மூன்று நாள்களும் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சுகிஅமுதன், சித்தாா்த், 9 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் ஜெரீஸ், அன்பரசு, 11-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் ரிதன்யா, ஆசிஃபா நஸ்ரின் ஆகியோா் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு தோ்வாகினா்.

இறுதிச் சுற்றில் மாவட்ட அளவில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில் கடந்த பிப். 2-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி மாணவா்கள் சுகிஅமுதன், சித்தாா்த் ஆகியோா் இணைந்து தயாரித்த ‘மாசுபாடு தொடா்பான மிலிட்டரி பாதுகாப்பு பிரிவு’ என்ற தொழில்நுட்ப படைப்பு முதல் பரிசுக்குரிய படைப்பாக தோ்வு செய்யப்பட்டு மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் வீரா. சுவாமிநாதன், முதல்வா் வசந்தா, அனைத்து ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் பாராட்டினா்.